Published:Updated:

`எங்களால் வெளியேற முடியாது; மீறினால் இரானின் நிலைதான்!’ - இராக்கையும் அச்சுறுத்தும் ட்ரம்ப்

இராக்கிலிருந்து எங்களை வெளியேறக் கூறினால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை இரான் ராணுவ அமைப்பு கடந்த வாரம் சூறையாடியது. இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில் அதே இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இந்தத் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படைத் தளபதியும் சக்திவாய்ந்த தலைவருமான காசின் சுலைமானி கொலைசெய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து இராக்கின் ஹஷித் அல்-ஷாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு அஹ்தி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இராக் விமானநிலைய தாக்குதல்
இராக் விமானநிலைய தாக்குதல்
AP

சுலைமானி கொல்லப்பட்ட பிறகு அமெரிக்கா- இரான் இடையேயான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சுலைமானி இறப்புக்கு ஈடாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இப்படி இரு நாடுகளுக்கு இடையே தினம் தினம் தாக்குதல் தொடர்ந்துகொண்டுள்ளது. மற்றொரு புறம் இரு நாட்டில் உள்ள தலைவர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அச்சுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றனர்.

`பரம எதிரிக்குத் தக்க பதிலடி காத்திருக்கிறது!’ -அமெரிக்க தாக்குதலால் கொதிக்கும் இரான் தலைவர்

இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடக்கும் போரில் இராக் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது, அமெரிக்கப் படைகள் இராக்கில்தான் முகாமிட்டுள்ளனர். அங்குள்ளவர்கள் மீதுதான் இரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவும் இரானும் தங்கள் மண்ணில் போர் நடத்தினால் அது, தங்கள் நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்த இராக் நாடாளுமன்றம், நேற்று தங்கள் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேறக் கூறியுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இராக்குக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஃபுளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ``இராக்கில் உள்ள எங்கள் விமான தளம் மிகவும் அசாதாரணமானது. அதை கட்டமைப்பதற்கு நாங்கள் பில்லியன் டாலர் கணக்கில் செலவழித்துள்ளோம். நாங்கள் செலவிட்ட பணத்தை இராக் திருப்பித்தரும் வரை நாங்கள் அங்கிருந்து வெளியேறமாட்டோம். அதையும் மீறி வெளியேறச் சொன்னால் இராக் இதுவரை பார்த்திராத அளவிலான பொருளாதாரத் தடைகளை அவர்கள் மீது விதிப்போம். அது இரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளைப் போலவே இருக்கும்” என எச்சரித்துள்ளார்.