கடும் பொருளாதார சரிவால் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இலங்கை. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு என இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆட்சியாளர்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டமும் நடத்தி வருகிறார்கள் இலங்கை மக்கள். `ராஜபக்சே குடும்பம்தான் இலங்கையின் இந்த நிலைக்குக் காரணம்' என நம்பும் இலங்கை மக்கள், அந்தக் குடும்பம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இறங்க வேண்டும் எனத் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தனர். விளைவு, இலங்கையின் அமைச்சரவையிலிருந்த 26 அமைச்சர்களும் கடந்த ஏப்ரல் 3 அன்று ராஜினாமா செய்தனர். இருந்தும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், ``அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் அமைச்சர் பொறுப்புகளை ஏற்று, நாட்டின் நிலைமையைச் சரி செய்ய முன்வர வேண்டும்'' என்று அழைப்பு விடுத்தார் அதிபர் கோத்தபய. அழைப்பை ஏற்று எந்தக் கட்சியினரும் அமைச்சர் பொறுப்பேற்க முன்வராததால், ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் மட்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதிலும் நிதியமைச்சராகப் பதவியேற்ற அலி சப்ரி, 24 மணி நேரத்துக்குள்ளாகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து மூன்று அமைச்சர்களோடு இரண்டு வார காலமாகச் செயல்பட்டுவந்தது இலங்கை அரசு. இதற்கிடையில், மகிந்தவும், கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
இந்த நிலையில், நேற்று இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். கொழும்புவிலுள்ள அதிபர் மாளிகையில் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்கள் புதிய அமைச்சர்கள். இந்த அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு அமைச்சர்கள் மத்தியில் பேசிய அதிபர் கோத்தபய, ``இலங்கையில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது, சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோராதது ஆகியவை தவறுதான். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். மேலும், தனது பதவிக்காலம் முடியும் வரை அதிபராகச் செயல்படுவேன் என்றும் கூறினார் அவர்.

புதிய அமைச்சரவை பலனளிக்குமா?
`இலங்கையில் புதிய செயல்திட்டங்களோடு நியமிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய அமைச்சரவை, நாட்டின் பிரதானப் பிரச்னைகளைச் சரி செய்யுமா?' என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்து இலங்கை அரசியலை உற்று நோக்கும் சிலர், ``இலங்கையின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களில், சிலர் மட்டுமே துறை சார்ந்தவர்கள். பல புதிய அமைச்சர்களுக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எனவே, இந்த அமைச்சரவையால் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது. கடந்த சில தினங்களாக, `இலங்கையில் அரசு என்ற ஒன்றே இல்லை' என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. அதைச் சரிகட்டவே கோத்தபய ராஜபக்சே இந்தப் புதிய அமைச்சரவையை அமைத்திருக்கிறார். மேலும் தனக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால், `என் தவறுகளை ஒப்புக்கொள்கிறேன்' என்று நாடகமாடியிருக்கிறார். புதிய அமைச்சரவை, புதிய செயல்திட்டங்கள், தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தது என அனைத்துமே தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள மகிந்தவும், கோத்தபயவும் சேர்ந்து நடத்தும் அரசியல் நாடகங்கள்தான்!'' என்கிறார்கள்.