Published:Updated:

India-China FaceOff : `என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்!’ - மோடிக்கு ஆதரவளிக்கும் ட்ரம்ப்?

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

``ட்ரம்ப் மற்றும் மோடிக்கு இடையே நல்ல உறவும் நம்பிக்கையும் உள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் இதனை பிரதிபலிக்கிறது.”

இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரச்னைகளை அமைதியாகத் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் தயாராக இருப்பதாகக் கூறிவந்தாலும், எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் பேசி வருகின்றன. போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை இருநாடுகளும் எல்லைகளில் குவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1975-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த மிகவும் மோசமான தாக்குதலாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருநாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. இதனால், இந்தப் பிரச்னை சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. பதற்றம் தீவிரமாக ஆரம்பத்தது முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகக் கூறி வந்தார். ஆனால், இந்தியாவும் சீனாவும் தாங்களே பேசி தீர்த்துக்கொள்வதாக கூறியது. இந்த நிலையில், மீண்டும் அதிபர் ட்ரம்ப் பிரச்னையை தீர்க்க உதவுவதாகக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான ட்ரம்பின் பிரசாரம் நேற்று மாலை ஒக்லாஹோமாவில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ட்ரம்ப், இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், ``இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே மிகவும் கடினமான சூழல் நிலவி வருகிறது. அவர்களுக்கிடையே மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது இந்தியா மற்றும் சீனாவுடன் நாங்கள் பேசுகிறோம். கடுமையான தாக்குதல் நடத்தும் அளவிற்குத் தயாராகியுள்ளனர். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். நாங்கள் அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சி செய்கிறோம்” என்று கூறினார்.

`அதிபர் தேர்தலில் உதவ ஜின்பிங்கிடம் கெஞ்சிய ட்ரம்ப்?!’ -ரகசியம் நிறைந்த அதிகாரியின் புத்தகம்

லடாக் பகுதியில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனாவைச் சேர்ந்த சுமார் 35 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது. கொரோனா வைரஸூக்கு எதிராக நாடுகள் போராடி வரும் நிலையில் இந்தியா மற்றும் சில அண்டை நாடுகளிடம் எல்லைப் பிரச்னையில் சீனா ஈடுபட்டு பதற்றத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் போம்பியோ, ``சீன ராணுவமானது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென் சீனக் கடலில் தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதோடு சட்டவிரோதமாக இந்தியாவின் நிலப்பரப்பை கோரி வருகிறது” எனக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லி இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ``அதிபர் ட்ரம்ப், இந்திய மற்றும் சீனா இடையேயான நிலைமையை அறிந்துள்ளார். லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்னைகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியப் பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் கடந்த ஜூன் 2-ம் தேதி தொலைபேசி வழியாக அழைத்து எல்லையில் உள்ள நிலைமை குறித்து விவாதித்துள்ளார்” என்று கூறினார். ட்ரம்ப் விக்டரி இந்திய அமெரிக்க நிதிக்குழுவின் இணை தலைவர் அல் மேசன், ``ட்ரம்ப் மற்றும் மோடிக்கு இடையே நல்ல உறவும் நம்பிக்கையும் உள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் இதைப் பிரதிபலிக்கிறது” என்று கூறியுள்ளார். டெக்ஸாஸ் காங்கிரஸைச் சேர்ந்த லான்ஸ் குடெனும் இந்தியாவுக்கு ஆதரவாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ``இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே மிகவும் கடுமையான மோதல்கள் நடந்ததாக செய்திகள் வெளிவருகின்றன. சீனா மிகவும் மோசமான நடிகராக மீண்டும் தோன்றுகிறது. அவர்களின் வார்த்தைகளை ஒருபோதும் நம்ப முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

`இந்தியா, சீனாவில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டால்..?' -அதிபர் ட்ரம்ப் சொல்லும் `கொரோனா கணக்கு'
அடுத்த கட்டுரைக்கு