பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றிருக்கிறார். பாகிஸ்தான் அரசு கடந்த வியாழக்கிழமை பெட்ரோலியப் பொருள்களின் விலையை லிட்டருக்கு ரூ.30 உயர்த்தியதால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் குறிப்பிட்ட பகுதியில் கோதுமை மாவு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாக விற்கப்படுவதாகப் பிரதமருக்கு புகார்கள் பறந்தன.

அதையடுத்து நேற்றைய தினம் பாகிஸ்தானின் தகரா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ``நான் இது பற்றி மீண்டும் வலியுறுத்துகிறேன். 10 கிலோ கோதுமை மாவின் விலையை ரூ.400-ஆகக் குறைக்க வேண்டும் என முதல்வர் கைபர் பக்துன்க்வா முகமது கானுக்கு எச்சரிக்கைவிடுக்கிறேன். அவர் கோதுமை மாவின் விலையைக் குறைக்கவில்லையென்றால், என்னுடைய ஆடைகளை விற்றாவது... நான் மக்களுக்கு மலிவான விலையில் கோதுமை மாவை வழங்குவேன்.
இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு பணவீக்கம், வேலையின்மையை பரிசளித்திருக்கிறார். ஐந்து மில்லியன் வீடுகளையும், 10 மில்லியன் வேலைகளையும் வழங்குவதாக இம்ரான் கான் வாக்குறுதி அளித்தது, நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது. நான் என் உயிரைக் கொடுத்தாவது, இந்த நாட்டை வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்வேன் என்று உங்கள் முன் ஆணித்தரமாக உறுதியளிக்கிறேன்" என்றார்.
