Published:Updated:

கொரோனா: `சீனாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றுமா?’ - அதிபர் ட்ரம்ப் பதில்

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

``சீன வைரஸ் மிகவும் பயங்கரமான நோய். சீனாவில் இருந்து இந்த வைரஸை வெளியேற விட்டிருக்கக் கூடாது. ஆனால், வெளியேறிவிட்டது. தற்போது உலகத்தையே பாதித்து வருகிறது. ஆனால், நாங்கள் அதைக் கவனித்துக்கொள்ளப் போகிறோம்.

கொரோனா வைரஸால் உலகமே திணறிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்த அதிகாரபூர்வமாக மருந்துகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து சோதனை வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், உறுதிப்படுத்த தேவையான சோதனைகள் இன்னும் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்ற நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டிபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தடுப்பூசி தொடர்பான பணிகளில் சீனாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படுமா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
AP

சீனா தடுப்பு மருந்து உருவாக்கி வருவதில் முன்னேற்றம் அடைந்தால் அமெரிக்கா அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு, ``கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் நல்ல முடிவைப் பெறப்போகும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்று பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, ``தடுப்பு மருந்து உருவாக்குவதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றில் அமெரிக்கா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டார். கொரோனா தடுப்பு மருந்து நாம் எதிர்பார்ப்பதைவிட மிகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அதை விநியோகிக்க அமெரிக்க ராணுவம் உதவியாக இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா: `நாட்டையே அழித்து விடுவார் ஜோ பிடன்!’ - கொதிக்கும் ட்ரம்ப்

அமெரிக்கா கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதுவரை சுமார் 3.8 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களில் 1.40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், தொடர்ந்து கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ``கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்க்கையை இழந்த ஒவ்வொரு நபரையும் குடும்பத்தில் ஒருவராக நினைத்து வருந்துகிறோம். வைரஸ் தடுப்பு மருந்தை விரைவில் உருவாக்கி வைரஸை தோற்கடிப்போம் என உறுதியளிக்கிறேன். இந்த நோயைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டோம். பாதிப்படைந்தவர்களை நாங்கள் பாதுகாப்போம்” என்று கூறினார்.

அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேசுகையில், ``கொரோனா பரிசோதனை விஷயத்தில் அமெரிக்கா உலகில் முன்னனியில் உள்ளது. நாங்கள் 50 மில்லியனுக்கு அதிகமான பரிசோதனைகளை செய்யப்போகிறோம். இரண்டாவதாக இந்தியா 12 மில்லியன் சோதனைகளை செய்துள்ளது. இன்னும் சில நாடுகள் ஏழு மில்லியன், ஆறு மில்லியன், நான்கு மில்லியன் என சோதனைகளை செய்துள்ளன. மிகப்பெரிய அளவில் நாங்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளோம். சீன வைரஸ் மிகவும் பயங்கரமான நோய். சீனாவில் இருந்து இந்த வைரஸை வெளியேற விட்டிருக்கக் கூடாது. ஆனால், வெளியேறிவிட்டது. தற்போது உலகத்தையே பாதித்து வருகிறது. ஆனால், நாங்கள் அதைக் கவனித்துக்கொள்ளப் போகிறோம். மற்ற நாடுகளுக்கும் உதவி செய்கிறோம்” என்றார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவின் பல மாநிலங்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ``ஆனால், சில மாநிலங்கள் மோசமாகச் செயல்பட்டு வருகின்றன. நாம் வைரஸை எதிர்த்து போராடி மேம்படுவதற்கு முன்பு துரதிர்ஷ்டவசமாக இந்த நிலைமை இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இளைஞர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. வைரஸ் பாதிப்பு இருப்பது அவர்களுக்கே தெரியாது. எனவே, இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். வைரஸால் இறப்பவர்களில் 99.6 சதவிகிதம் பெரியவர்கள் என்பதால் வயது குறைந்தவர்களுக்கு மிகச்சிறய அளவிலேயே பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோயைப் புரிந்துகொண்டு சிகிச்சையளிப்பதன் மூலம் அமெரிக்காவில் இறப்புகளை அதிகளவில் குறைக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்டத்திலும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பான சிறந்த வழிமுறைகளை நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த வழிமுறைகள் குறித்து உலகளவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடம் பகிர்ந்துகொண்டோம் என்றும் மற்ற நாடுகளுடன் வலிமையான உறவை பேணி வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம் என்றும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

`என்னைவிட தேசபக்தி மிக்கவர் யாரும் இல்லை!’ - ட்விட்டரில் ட்ரம்ப் கிண்டல்
அடுத்த கட்டுரைக்கு