Published:Updated:

`ஜோ பைடன் வெற்றி, அநீதி; இறுதி முடிவு வரட்டும்!’- பழைய பல்லவியைத் திரும்பப் பாடும் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில், போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்வாளர்கள் குழுவின் வாக்கெடுப்பில் வென்றாலே அவர் அதிகாரபூர்வமாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடக்கம் முதலே ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் முன்னிலை வகித்துவந்தார். பென்சில்வேனியா மாகாணத்தில் பெருன்பான்மையான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்தன.

ஒருபுறம், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் தேர்தல் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், தேர்தல் ஆணையம் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருந்துவந்தது. மறுபுறம், அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி ட்ரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, தேர்தலில் தனது தோல்வியை ஏற்க பிடிவாதம் பிடித்து வந்தார்.

பின்னர், மனம் மாறிய ட்ரம்ப் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கச் சம்மதித்தார். தேசிய தேர்வாணைய நிர்வாகக்குழுவுக்கும் (General Service Administration) ஜோ பைடனுக்கு ஆட்சியை ஒப்படைக்கும் பணிகளில் ஈடுபட, ட்ரம்ப் பரிந்துரை செய்ததாகக் கூறப்பட்டது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

கடந்த புதன்கிழமையன்று (25.11.2020) பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதைக் கேட்ட பிறகு ட்ரம்ப் மீண்டும் யூ-டர்ன் அடித்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சட்ட ஆலோசகர்கள் பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க் என்னும் இடத்தில் அவசர அவசரமாக ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அப்போது ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர் ஜென்னா எல்லிஸை தொலைபெசியின் மூலம் தொடர்புகொண்டு பேசிய ட்ரம்ப், ``நாம் இந்தத் தேர்தலில் எளிதாக பல்வேறு மாகாணங்களில் வென்றிருக்கிறோம். ஆனால், ஜோ பைடன் தேர்தலில் முறைகேடுகளை நிகழ்த்தியே வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் தேர்தலின் முடிவுகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று கூறி பழைய பல்லவியைத் திரும்பப் பாடியிருக்கிறார்.

`செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்..!’  ஜோ பைடனுக்கு வழிவிடும் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்வாளர்கள் குழுவின் வாக்கெடுப்பில் வென்றாலே, அவர் அதிகாரபூர்வமாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். தற்போது, `அமெரிக்க அதிபர் தேர்வாளர்கள் குழுவின் வாக்கெடுப்பின் முடிவுகள் ஜோ பைடனுக்குச் சாதகமாக வரும்பட்சத்தில், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்’ என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். வருடா வருடம் அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழனன்று `நன்றி தெரிவித்தல் விழா’ கொண்டாடப்படும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Alex Brandon

நேற்று (26.11.2020) வியாழனன்று நிகழ்ந்த அந்த விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``தேர்தல் ஆணையம் ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக பல்வேறு முடிவுகளை எடுத்து மிகப்பெரிய மோசடிச் செயலில் ஈடுபட்டிருக்கிறது. ஜோ பைடனை வெற்றி பெறச் செய்து தேர்தல் ஆணையம் நாட்டுக்கு அநீதியை இழைத்திருக்கிறது. அதிபர் தேர்தலின் தேர்வாளர்கள் குழுவின் முடிவே இறுதியானது. அதனால், தேர்வாளர்கள் குழுவின் முடிவுகள் ஜோ பைடனுக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் நான் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுகிறேன்” என்று தெரிவித்தார்.

தேர்வாளர்கள் குழுவின் முடிவுகள் குறித்து வரும் டிசம்பர் மாதம் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு