Published:Updated:

ஆப்கானிஸ்தான்: தாலிபன் விடுவித்த கைதிகள்! - உயிர் பயத்தில் தவிக்கும் பெண் நீதிபதிகள்

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹோரியா மொசாடிக் அளித்த தகவலின்படி, ``நீதிபதிகள் மட்டுமின்றி, ஆயிரம் மனித உரிமைப் பாதுகாவலர்கள் தாலிபன்களின் வேட்டைப் பட்டியலில் உள்ளனர்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன. அமெரிக்கா, தனது படைகளை வெளியேற்றத் தொடங்கியது முதல் தாலிபன்கள், ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று அதைச் செய்து காட்டியிருக்கிறார்கள். இது அங்கு வாழும் சாதாரண மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாகப் பெண்கள். காரணம் 20 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தில் அவர்கள் பெண்களுக்கு எதிராக விதித்த சட்டங்கள் அப்படி.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

தாலிபன்களின் அடிப்படை வாதம், ஆப்கன் பெண்களை வதைக்கிறது. ஆடைக் கட்டுப்பாடுகள் முதல் ஆண்கள் துணையின்றி வெளியே வரக் கூடாது எனப் பெண்களின் மீதான ஒடுக்குமுறைப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆப்கனிலிருந்து தப்பி வெளியேற முடியாத பெண்கள், வேறு வழியின்றி அங்கேயே வாழ்ந்துவருகிறார்கள். ஆனாலும் ஆப்கனில் நீதிபதிகளாக இருந்த 250 பெண்களின் உயிர் குற்றவாளிகளால் குறிவைக்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆப்கன் பாடகரின் வேதனை: `ஓ... என் தாயகமே...' - இணையத்தில் வைரலாகும் பாடல்

ஆப்கனில் நீதிபதியாக இருந்த பெண்களால் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்த கைதிகளைப் புதிதாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபன்கள் விடுதலை செய்துள்ளனர். விடுதலையான குற்றவாளிகள் தண்டனை வழங்கிய பெண் நீதிபதிகளைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மிக விரைவில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கவிருக்கும் தாலிபன்கள், கடந்த ஆட்சியைப்போல இல்லாமல் இனி பெண்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படும் எனக் கூறினாலும், அது வெறும் வாய்வார்த்தையாகத்தான் இருக்கிறது. ஜனவரி மாதமே இரண்டு பெண் நீதிபதிகள் தாலிபன்களால் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான்:  மனித உரிமைக்காகப் போராடும் பெண்கள்
ஆப்கானிஸ்தான்: மனித உரிமைக்காகப் போராடும் பெண்கள்

தாலிபன்களிடமிருந்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்ற ஒரு ஆப்கன் பெண் நீதிபதி கூறுகையில், ``நான்கு பேர் என் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். என்னைக் குறிப்பிட்டு இங்குள்ள பெண் நீதிபதி எங்கே எனக் கேட்டுள்ளனர். அவர்கள் என்னால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள். தாலிபன்கள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். மற்ற பெண் நீதிபதிகளிடமும் பேசினேன். அவர்களுக்கும் இது போன்ற பிரச்னைகள் உள்ளன. அவர்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடிவருகின்றனர்” என்றார், ஐரோப்பாவிலிருக்கும் இந்த நீதிபதி, சர்வதேசப் பெண் நீதிபதிகள் சங்கம், மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள், சில வெளிநாட்டு அமைப்புகள் உதவியுடன் தப்பியிருக்கிறார்.

`ஷரியத் சட்டம்' சொல்வது என்ன... ஆப்கன் பெண்கள் அச்சப்படுவது ஏன்?!

ஆப்கானிஸ்தான் மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹோரியா மொசாடிக் அளித்த தகவலின்படி, "நீதிபதிகள் மட்டுமின்றி ஆயிரம் மனித உரிமைப் பாதுகாவலர்கள் தாலிபன்களின் வேட்டைப் பட்டியலில் உள்ளனர்." ஆப்கனிலுள்ள மற்ற பெண் நீதிபதிகளுக்கு நேரடிக் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் பெண் நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்களைப் பாதுகாப்பதில் மேற்கத்திய நாடுகள் முன்னுரிமை அளித்துச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு