நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடர்ந்து ஆறு நாள்களுக்கு மேலாக உக்ரைனில் போர் நடத்திவருகிறது. இதனால் உக்ரைன் பொருளாதாரம் மட்டுமல்லாமல், உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக உக்ரைனுக்கு உதவுவதாக உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் (IMF) உறுதியளித்திருந்த நிலையில், அது குறித்தான கூட்டறிக்கை ஒன்றை உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் நேற்று வெளியிட்டுள்ளது.

உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா ஆகியோர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ``வரவிருக்கும் மாதங்களில் உலக வங்கியானது உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆதரவு நிதி திரட்டவிருக்கிறது. அதற்கான கோரிக்கைகளை அனைத்துலக நாணய நிதியம் பரிசீலித்துவருகிறது. முதல் தவணை உதவித்தொகை, இந்த வாரத்தில் வாரிய ஒப்பதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு உடனடி நிதியாக 200 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், ``உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். உக்ரேனிய மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்" என டேவிட் மல்பாஸ் மற்றும் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா ஆகியோர் கூறியுள்ளனர்.
