Published:Updated:

உலக நாடுகளின் கெடுபிடி: மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய கோத்தபய ராஜபக்சே; வரவேற்ற அமைச்சர்கள்!

கோத்தபய ராஜபக்சே

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே 52 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்.

உலக நாடுகளின் கெடுபிடி: மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய கோத்தபய ராஜபக்சே; வரவேற்ற அமைச்சர்கள்!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே 52 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்.

Published:Updated:
கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள்தான் காரணம் என்று கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் நாடு முழுவதும் பிரதமர், அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் அரசியல்வாதிகளின் வீடுகள் சூரையாடப்பட்டன. இதனால் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் இலங்கையில் இருந்தவரை தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார். அவரால் போராட்டக்காரர்களை ஒடுக்க முடியவில்லை. பொதுமக்கள் பல நாள்கள் ஒரே இடத்தில் தங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர் கடந்த மாதம் 12-ம் தேதி இலங்கையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

இலங்கையிலிருந்து தப்பிய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்கியிருந்தார். ஆனால் கோத்தபய ராஜபக்சேவுக்குக் கொடுக்கப்பட்ட குறுகியகால விசாவை அந்நாடு நீட்டிக்க மறுத்துவிட்டது. இதனால் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அனுப்பிவிட்டு அங்கிருந்து ராஜபக்சே தாய்லாந்துக்குச் சென்றார்.

ராஜபக்சே சகோதரர்கள்
ராஜபக்சே சகோதரர்கள்

தாய்லாந்து அரசும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி ராஜபக்சேவிடம் ஹோட்டலைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. இதனால் சிறையில் இருப்பது போன்ற ஒரு வாழ்க்கையை ராஜபக்சே தாய்லாந்தில் வாழ்ந்துவந்தார். இங்கு இருப்பதற்கு பதில் சொந்த நாட்டுக்குச் செல்லலாம் என்று ராஜபக்சே முடிவு செய்தார். இது தொடர்பாக இலங்கையில் இருக்கும் தனது சகோதரர் பசில் ராஜபக்சேயிடம் கோத்தபய ராஜபக்சே பேசினார். இதையடுத்து பசில் ராஜபக்சே கடந்த மாத இறுதியில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேயைச் சந்தித்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பி பாதுகாப்புடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கயும் அதை ஏற்றுக்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து கோத்தபய ராஜபக்சே நேற்று மாலையில் இலங்கைக்குத் திரும்பினார். அவர் விமானத்திலிருந்து கீழே இறங்கியவுடன் அவரின் கட்சி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். 52 நாள்களுக்குப் பிறகு நாடு திரும்பிய ராஜபக்சே அரசின் பாதுகாப்போடு தங்கிருக்கிறார். இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கு அரசுப் பாதுகாப்புடன் தங்க வீடு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க அரசு, கோத்தபய ராஜபக்சே தங்க கொழும்பில் வீடு ஒதுக்கியிருக்கிறது. அந்த வீட்டில் இரண்டு நாள்களாகச் சாதாரண உடையில் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜபக்சேயின் வீட்டைப் போராட்டக்காரர்கள் தீவைத்து சூரையாடியிருந்தனர். கோத்தபயவின் சொந்த வீட்டுக்கும் பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது.

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

கோத்தபய தனது பழைய வீட்டைப் பார்க்க வருவார் என்று கருதுவதால் இந்தப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தற்போது ராஜபக்சேவுக்குப் பாதுகாப்பு கொடுக்க ராணுவம் மற்றும் போலீஸ் கமாண்டர்கள் அடங்கிய தனிப் பிரிவை அமைத்திருப்பதாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜபக்சே பாதுகாப்புடன் நாடு திரும்ப ரணில் விக்ரமசிங்க அனுமதித்திருப்பதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினரைப் பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சேமீது 2009-ம் ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. அதோடு கோத்தபய ராஜபக்சே மீது அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் இலங்கையில் நடந்த இனப்போரின்போது தமிழ்க் கைதிகளை சிறையில் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கு விசாரணையும் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.