Published:Updated:

சீனா: 3-வது முறையாக அதிபர்... வலிமைமிக்க தலைவராக ஜி ஜின்பிங்! - புதிய தீர்மானத்துக்கு என்ன காரணம்?!

சீன அரசியல் வரலாற்றிலேயே மூன்றாவது முறை அதிபராகப் பதவியேற்கப்போகும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். அதற்கான தீர்மானம் தற்போது நடந்து முடிந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் அரசியல், பொருளாதார ஆதிக்கம் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. தனது பூலோக ஆதிக்க அரசியலால் அண்டைநாடுகளை அச்சுறுத்தியும், பொருளாதாரப் போட்டி அரசியலால் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளை ஆட்டம்காணச் செய்தும் வருகிறது. சீனா என்கிற இரண்டெழுத்தை உச்சரிக்காமல் இன்று உலக அரசியலே பேச முடியாத அளவுக்கு, அனைத்துத் துறைகளிலும் தனது டிராகன் கரங்களை அழுந்தப் பதித்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் முக்கியக் காரணமாக முன்னிறுத்தப்படும் ஒரே நபர், சீன அதிபர் ஜி ஜின்பிங்!

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்
Ng Han Guan

எனவேதான், சீன அரசியல் வரலாற்றிலேயே மூன்றாவது முறை அதிபராகப் பதவியேற்கப்போகும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். அதற்கான தீர்மானம் தற்போது நடந்து முடிந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில்...

கடந்த புதன்கிழமை (10-11-2021) சீனத் தலைநகர் பீஜிங்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மத்திய உயர்நிலைக்குழு மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் உயர்நிலைப் பொறுப்பில் இருக்கும் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில், கடந்த நூறு ஆண்டுகளாக சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீனா
சீனா

மூன்றாவது அதிபராக...

முக்கியமாக, தற்போது சீன அதிராக இருக்கும் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிசெய்யும் 14 பக்க தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், `வரும் 2022-ம் ஆண்டு கட்சியின் 20-வது தேசிய மாநாட்டை நடத்துவது, அந்த மாநாட்டில் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறை அதிபராகப் பதவியேற்பதற்கான ஒப்புதல் வழங்குவது, சிறப்பு கூடுதல் அதிகாரத்தை வழங்குவது போன்ற பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்கின் செயல்பாடுகள்...

இதன் மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ மாசேதுங்குக்கு அடுத்தபடியாக வலிமைமிக்க தலைவராக ஜி ஜின்பிங் உருவெடுத்திருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு ஜி ஜின்பிங் சீன அதிபராக முதன்முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, சீன முன்னேற்றத்துக்காக பல்வேறு புதிய சட்ட திட்டங்களையும், பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டுவந்தார். சீனப் பொருளாதாரம் அசுரவளர்ச்சி கண்டது. கோட்பாட்டுரீதியாகவும் `சீனப் பண்புகளுடன்கூடிய சோஷலிசம்' என்ற புதிய கருத்தாக்கத்தைப் புகுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, சீனப் பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கை, அண்டைநாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகளில் மிகக் கடுமையான போக்கைக் கடைபிடித்தார். ஹாங்காங் போராட்டம் போன்ற உள்நாட்டில் நடக்கும் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். சீன ஆட்சியாளர்களில் சர்வதிகாரமிக்க தலைவராக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து, 2018-ல் இரண்டாவது முறையாகவும் சீன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

உலக நாடுகளின் அச்சம்!

`சீனாவின் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவேன், சீனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளின் தலையை நசுக்குவேன்' எனச் சூளுரைத்தார். சீனா, தனது அண்டை நாடுகளான இந்தியா, தைவான், தென் சீனக்கடல் பகுதியில் இருக்கும் நாடுகளுடன் எல்லைப் பிரச்னையை தீவிரப்படுத்தியது. குறிப்பாக, தைவானை முழுமையாகத் தனக்குச் சொந்தம் கொண்டாடியது. அவ்வப்போது ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்திவந்தது. ஜி ஜின்பிங்கின் அரசியல், ராணுவச் செயல்பாடுகள் பிராந்திய நாடுகளை மட்டுமல்லாமல், அமெரிக்கா போன்ற உலக நாடுகளையும் அச்சுறுத்தின. வணிகப்-பொருளாதாரரீதியிலும் அமெரிக்காவுக்குக் கடும்போட்டி நாடாக உருப்பெற்றது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

ஜி ஜின்பிங்கின் இது போன்ற செயல்பாடுகள் ஒரு பக்கம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்யவே மற்றொரு பக்கம் சீன மக்களிடமும், சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமும் அவரின் செல்வாக்கை உயர்த்தின. இது போன்ற காரணங்களால், இப்போதிருக்கும் உலக அரசியல் சூழலில் மூன்றாவது முறையாகவும் ஜி ஜின்பிங்கே சீன அதிபராகத் தொடர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியும் விரும்பியது.

ஜி ஜின்பிங்குக்காக மாற்றப்பட்ட சட்டம்!

சீன அரசியல் சாசனப்படி, ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராகப் பதவிவகிக்க முடியும். ஆனால், 2018-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தில் அந்த விதி நீக்கப்பட்டது. அப்போதே, இந்தச் சட்டத் திருத்தம் ஜி ஜின்பிங் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடாகவே கருதப்பட்டது. அதேபோல, 68 வயதுக்கு மேலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஓய்வுபெற வேண்டும் என்பது விதி. ஆனால், 68 வயது நிரம்பியிருக்கும் ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச்செயலாளராக, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக, நாட்டின் அதிபராக மூன்று முக்கிய அதிகாரபீடங்களில் தொடர்கிறார்.

சீனா
சீனா

தீர்மானம்:

இந்நிலையில், அடுத்த ஆண்டு (2022) ஜி ஜின்பிங்கின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கட்சி மாநாட்டை முன்கூட்டியே நடத்த மத்திய உயர்நிலைக் கூட்டத்தில் தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜி ஜின்பிங் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாக சீன அதிபராக பதவியேற்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு