ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்பேரில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போரானது, மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கையை மேற்குலக நாடுகள் பலவும் கண்டித்து வந்தாலும், போரை முடித்துவைப்பதற்கான அறிகுறிகள் ஏதும் ரஷ்யாவிடமிருந்து வெளிவராதபடியே உள்ளன. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின், ``நீங்கள் உங்கள் தாய்நாட்டின் எதிர்காலத்துக்காகப் போராடுகிறீர்கள்" என ரஷ்யப் படையினரிடம் கூறியிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்ட நாளை நினைவுகூரும் விதமாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ரஷ்யப் படை வீரர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அதிபர் புதினும் கலந்துகொண்டார். அப்போது, ரஷ்ய வீரர்கள் முன்னிலையில் பேசிய அதிபர் புதின், ``கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில், ரஷ்ய வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் தாய்நாட்டைக் காக்க போராடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், நீங்கள் உங்கள் தாய்நாட்டின் எதிர்காலத்துக்காகப் போராடுகிறீர்கள். ஒவ்வொரு ரஷ்ய வீரர் மற்றும் அதிகாரியின் மரணம் எங்களுக்கு வேதனையளிக்கிறது. மேலும் அவர்களின் குடும்பங்களைக் காக்க தேவையான அனைத்தையும் இந்த அரசு செய்யும். மேலும், மேற்கு நாடுகள், கிரிமியா உட்பட எங்கள் நிலத்தின் மீதான ஆக்கிரமிப்புக்குத் தயாராகின்றன. எனவே உக்ரைனில் ராணுவ நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்று" எனக் கூறினார்.
