Published:Updated:

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ - ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்

Greta Thunberg
Greta Thunberg ( AP )

காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ஐ.நா காலநிலை மாநாட்டில் பேசிய உரை உலகத் தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

ஒரு சிறிய நாட்டிலிருந்து புறப்பட்டு அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டுக்குச் சென்று, அந்நாட்டு அதிபருக்கு எதிராகப் பெரிய மக்கள் படையைத் திரட்டி அவரை எதிர்த்து குரல் கொடுப்பதெல்லாம் ஒரு வரலாற்று நிகழ்வு. இதை தன் 16 வயதில் செய்துகாட்டியுள்ளார் காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்.

Greta Thunberg
Greta Thunberg
AP

ஸ்வீடனில் தனி ஆளாகத் தன் போராட்டத்தைத் தொடங்கியவர், தற்போது அமெரிக்க அதிபரின் சொந்த ஊரில் நின்றுகொண்டு அவருக்கு எதிராக கர்ஜனை செய்யும் அளவுக்குப் புகழ்பெற்றுள்ளார். ’காலநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் ஆகியவற்றுக்கு எதிராக உலகத் தலைவர்கள் செயல்பட்டு திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்’ என்பதுதான் இவரின் பிரதான கோரிக்கை. இதை வலியுறுத்திப் பல நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

`அவர்களை கேட்கவைப்போம்!' - உலகத் தலைவர்களுக்கு 16 வயது சிறுமியின் அறைகூவல் #climatestrike

அந்த வகையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக நியூயார்க்கில் கிரேட்டா நடத்திய பேரணி உலக தலைவர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 16 வயது சிறுமியின் அழைப்பை ஏற்று 156 நாடுகளைச் சேர்ந்த பல மில்லியன் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் எனப் பலரும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக ஒரே நாளில் ஒன்று கூடினர். தற்போது உலக அரங்கில் கிரேட்டாவை பற்றிப் பேசாதவர்கள் இருக்க முடியாது என்றே கூற வேண்டும்.

Greta Thunberg
Greta Thunberg
AP

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலநிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிறுமி கிரேட்டாவும், ஐ.நா மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

`மில்லியன் மாணவர்களின் குரல்!’ - அதிரவைக்கும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் #fridaysforfuture

”நாங்கள் உங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்போம்” என ஐ.நா-வில், கிரேட்டா தன் உரையைத் தொடங்கியதும் கைத்தட்டல்கள் பறந்தன. ``இங்கு நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளன. நான் இங்கு இருக்கக் கூடாது, கடல் கடந்து உள்ள என் பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. இதில், இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

சுற்றுச்சூழல் சிதைந்து நாம் அழிவின் தொடக்கத்தில் உள்ளோம் ஆனால், நீங்கள் பொருளாதாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
கிரேட்டா தன்பெர்க்

நீங்கள் (உலகத் தலைவர்கள்) என் கனவைத் திருடிவிட்டீர்கள். உங்கள் வெற்று வார்த்தைகளால் என் குழந்தைப் பருவம் காலியாக உள்ளது. மக்கள் துன்பத்தில் உள்ளனர், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்து மடிந்து வருகின்றனர். ஆனால், நீங்கள் பணம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கற்பனை கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

30 வருடங்களாக விஞ்ஞானம் மிகத் தெளிவாக உள்ளது. தேவையான அரசியலும் தீர்வுகளும் இன்னும் எங்கும் கிடைக்காத போது, மக்களுக்கு நீங்கள் போதுமானவற்றைச் செய்துவிட்டதாகக் கூறிக்கொண்டு இங்கு வர உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? காலநிலையின் அவசரத்தைப் புரிந்துகொண்டு எங்கள் கோரிக்கையைக் கேட்பதாக நீங்கள் சொல்கிறீர்கள், எந்த சூழலிலும் உங்கள் வார்த்தைகளை மட்டும் நான் நம்பப்போவதில்லை.

Greta Thunberg
Greta Thunberg
AP

ஒருவேளை நீங்கள் காலநிலையின் அவசரத்தை உணர்ந்து எங்களின் கோரிக்கைகளைக் கேட்டிருந்தால் எப்போதோ அதற்கான நடவடிக்கை எடுத்திருப்பீர்கள். ஆனால், இதுவரை எதுவும் செய்யாமல் இருப்பதால் நீங்கள் கொடியவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களின் துரோகத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். வருங்கால இளைஞர்களின் அனைத்துக் கண்களும் தற்போது உங்கள் மீதுதான் உள்ளது. இனியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நாங்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கவே மாட்டோம்” என ஆவேசமாகத் தன் உரையை முடித்தார்.

கிரேட்டா ஐ.நா-வில் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கோபத்தை அழுகை மூலம் வெளிப்படுத்தினார். பின்னர், அதே மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வந்துள்ளார். அவரை நேரில் பார்த்ததும் கிரேட்டாவின் முகபாவனை இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

``கிரேட்டா, அற்புதமான மற்றும் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்துக்கொண்டுள்ளார். இந்த இளம் பெண்ணைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரேட்டாவை புகழ்ந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு