Published:Updated:

`நீங்கள் மோசமான நிருபர் என மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்’ - கொரோனா கேள்வியால் கடுப்பான ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளரைக் கடுமையாகச் சாடியுள்ளார் ட்ரம்ப்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலக மக்களையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஏழ்மையான நாடு முதல் வல்லரசு நாடு வரை என அனைத்து நாடுகளும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டியுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 -ஆக உள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,773 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 275 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் வைரஸ் தொற்று உறுதியானது முதலே கொரோனாவை `சீன வைரஸ்’ என்றே அழைத்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நிலவி வருகிறது. இது ஒரு புறம் என்றால் ஆரம்பம் முதலே இந்த வைரஸின் வீரியத்தை உணராமல் ட்ரம்ப் பேசி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`சீனா செய்த அதே தவற்றை, ஐரோப்பாவும் செய்கிறது!" `- வருந்தும் சீன மருத்துவர்கள்

இந்நிலையில், இதே வைரஸ் தொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் என்.பி.சி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரைச் சாடியுள்ளார் அதிபர் ட்ரம்ப். இது சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது. பொதுவாகவே ட்ரம்ப் பத்திரிகையாளர்களை அதிகம் விரும்ப மாட்டார். ட்ரம்ப்புக்கு எதிராக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அவர்களையே கடுமையாக விமர்சித்துப் பேசுவார். இதே போன்ற பல்வேறு நிகழ்வுகளை வெள்ளை மாளிகை கண்டுள்ளது. தற்போதும் அந்த மாதிரியான நிகழ்வுதான் மீண்டும் நடந்துள்ளது.

பத்திரிகையாளர்
பத்திரிகையாளர்
AP

நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நேரலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பல மூத்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ட்ரம்ப் பதிலளித்துப் பேசினார். அப்போது என்.பி.சி பத்திரிகையாளர், அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டுவிட்டு, மருத்துவமனைகளில் விரைவில் படுக்கைகள் இல்லாமல் நிரம்பி வழியும் நிலை உருவாகவுள்ளதாகக் கூறிவிட்டு, `தற்போது உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் பயத்தின் பிடியில் உள்ள அமெரிக்கர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.

`இது நிச்சயம் யாரையும் கொல்லப்போவதில்லை!’- கொரோனாவுக்கு ட்ரம்ப் சொல்லும் `கேம் சேஞ்சர்’ மருந்து

இதைக் கேட்டுச் சட்டென்று கோபமடைந்த ட்ரம்ப், `நீங்கள் மிக மோசமான நிருபர், இதைத்தான் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் கேட்டது மோசமான கேள்வி, அமெரிக்க மக்களைப் பற்றி நீங்கள் வெளியிடும் கடுமையான சமிக்ஞை இது என்று நான் நினைக்கிறேன்’ எனச் சாடினார். அதிபரின் பதிலைக் கேட்டு பத்திரிகையாளர் உறைந்துபோனார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

தொடர்ந்த அதிபர், `அமெரிக்க மக்கள் பதில்களையும் நம்பிக்கையையும் தேடுகிறார்கள். ஆனால், நீங்கள் பரபரப்பை உண்டாக்குகிறீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், இது மிகவும் மோசமான அறிக்கையிடல். பரபரப்புக்குப் பதிலாக நீங்கள் நல்ல விஷயங்களை மக்களுக்காகச் செய்யுங்கள். நீங்கள் உங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு