Published:Updated:

அன்புமணிக்கு எம்.பி சீட் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது!

கொதிக்கும் பெங்களூரு புகழேந்தி

பிரீமியம் ஸ்டோரி

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளில், அ.ம.மு.க-வுக்கு விழுந்த அடியை அடுத்து தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட அ.ம.மு.க முக்கியப் புள்ளிகள், தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தநிலையில், ‘வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை’ என்ற தினகரனின் அறிவிப்பு, அ.ம.மு.க-வினரைப் பலவிதமாக யோசிக்கவைத்துள்ளது. ‘எடப்பாடியுடன் தினகரன் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். எனவே, வேலூரில் தி.மு.க வெற்றிபெறக் கூடாது என்று இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அதனால்தான், சமீபகாலமாக அ.தி.மு.க அரசைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யாமல் இருக்கிறார்’ என்றெல்லாம் அ.ம.மு.க-வினர் மத்தியில் பேச்சு கிளம்பியிருக்கிறது. இப்படியான சூழலில்தான் அ.ம.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தியிடம் பேசினோம்.

‘‘உங்கள் தரப்பு அ.தி.மு.க-வுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவது உண்மையா, இல்லையெனில் வேலூரில் போட்டியிடாததற்கு காரணம் என்ன?’’

‘‘வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில், பயந்துகொண்டெல்லாம் போட்டியிடாமல் ஒதுங்கவில்லை. கடந்த தேர்தலில், கடைசி நேரத்தில்தான் சின்னம் ஒதுக்கப்பட்டது. பல தொகுதிகளில் எங்களுக்கு வழங்கப் பட்ட பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. பல தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் தேட முடியாத இடத்தில் எங்கள் சின்னம் இருந்தது. அதுபோன்ற நிலை இனி வரக்கூடாது என்பதால்தான், ‘வேலூர் தேர்தலில் போட்டியிட வேண்டாம்; தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து நிரந்தரமான சின்னத்தைப் பெற்று, தேர்தலில் போட்டியிடலாம்’ என்று எங்கள் பொதுச்செயலாளர் முடிவு எடுத்துள்ளார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘நீங்கள் இப்படிச் சொன்னாலும்... கடந்த தேர்தலில், அ.ம.மு.க-வுக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டதும், பல இடங்களில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியைவிடக் குறைவாக வாக்குகள் பெற்றதும்தான் இப்போது போட்டியிடா ததற்குக் காரணம் என்கிறார்களே?’’

‘‘தவறாகச் சொல்கிறார்கள். புதிய சின்னத் தில் அ.ம.மு.க போட்டியிட்டும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளதே பெரிய வெற்றிதான். ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க தோற்க அ.ம.மு.க. பெற்ற வாக்குகளே காரணம். அதனால், கடந்த தேர்தலில், அ.ம.மு.க-வுக்குப் பின்னடைவு இல்லை. தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன் கிடைத்த சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று சாதனை செய்திருக்கிறோம்.’’

அன்புமணிக்கு எம்.பி சீட் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது!

‘‘நீட் தேர்வு, முற்பட்ட சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு போன்ற விஷயங்களில் பி.ஜே.பி-க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி யின் அரசு இருப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்படுகிறதே?’’

‘‘மத்திய அரசு, தமிழகத்துக்குக் கொண்டுவரும் பல்வேறு திட்டங்கள் மூலம் ‘இருபது சதவிகிதம்’ கமிஷன் கிடைக்கும். அதனால், இந்த ‘பத்து சதவிகித’த்தை ஆதரிக்கத் தயாராகிவிட்டார்கள்!’’

‘‘தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள வைகோ, ராஜ்யசபா எம்.பி-யாக பொறுப்பேற்கக் கூடாது என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளாரே?’’

‘‘இன்று வரை ஜெயலலிதாவை மரியாதை யாகப் பேசிவருபவர் வைகோ. தனிப்பட்ட முறையில் சொல்வதென்றால், தமிழர் நலன் சார்ந்து போராடக்கூடியவர் வைகோ. அவருடைய அரசியல் நிலைப்பாட்டில், எங்களுக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், மக்கள் பிரச்னைக்காக வாதாடக் கூடியவர் அவர். அவர் ராஜ்யசபா எம்.பி-யாவது தமிழகத்துக்கு நல்லது.

சேலத்தில், டி.டி.வி.தினகரன் மீதும் என் மீதும் தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்திருக்கிறார் கள். மக்களுக்காகப் போராடு வோர் மீது இதுபோன்ற வழக்கு கள் தொடுப்பார்கள்தான். எனவே, இதைப்பற்றி தமிழிசை பேசக் கூடாது.’’

‘‘வைகோ எம்.பி-யானதைப் பாராட்டுகிறீர்கள். அப்படியென்றால், அ.தி.மு.க சார்பில், ராஜ்யசபா எம்.பி-யாக்கப்பட்டவர்கள் பற்றி...”

‘‘அ.தி.மு.க ராஜ்யசபா வேட்பாளர்கள் மீது எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், கர்நாடகத்தில் நடந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையான போது, அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்திக்க கட்சித் தலைவர் ஜி.கே.மணியை அனுப்பி வைத்து, ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்ய வலியுறுத்தியவர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அதனால் தான், ஜெயலலிதா தண்டனை பெற்றார்; அதனைத் தொடர்ந்து உடல்நலம் மோசமாகி மரணம் அடைந்தார். அதற்குக் காரண மான ராமதாஸின் மகன் அன்பு மணிக்கு, ராஜ்யசபா எம்.பி பதவியை அ.தி.மு.க வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை அம்மா சிறைக்குச் செல்ல பாடுபட்டதற்கு நன்றிக் கடனாக இந்த வாய்ப்பை அன்பு மணிக்குக் கொடுத்தார்களோ!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு