Published:Updated:

கடுப்பு கொஞ்சம்... கதைகள் நிறைய!

கார்த்திகா, திரு
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்திகா, திரு

எனக்குக் கதை சொல்ல ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதை யூடியூப் சேனல் ஐடியாவா மாத்தினது திருதான்.

லாக்டெளனால் யூடியூப் பல சமையல் கலைஞர்களை உருவாக்கியிருப்பதுபோல, கதைசொல்லிகளையும் உருவாக்கியிருக்கிறது.

அவர்களில் ஒருவர் கனி என்கிற கார்த்திகா. தெளிவான தமிழ் உச்சரிப்புக்குப் பெயர்போன கார்த்திகா, முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இயக்குநர் அகத்தியனின் மகள் மற்றும் இயக்குநர் திருவின் மனைவி.

“எனக்குக் கதை சொல்ல ரொம்பப் பிடிக்கும். ஆனா, அதை யூடியூப் சேனல் ஐடியாவா மாத்தினது திருதான். மனித இனம் எப்படித் தோன்றுச்சு, மன்னர்களோட வரலாறு ஆகியவற்றைப் படிச்சிட்டே இருப்பேன். இதுல எல்லாம் ஆர்வம் அதிகம். அதனால இந்தியாவுடைய வரலாறு, இங்கிருந்த மன்னர்கள், போர் தொடுத்த மன்னர்கள்னு இவங்களைப் பத்திக் கதையா சொல்லலாம்னு முடிவெடுத்தோம். அதுக்கு ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’ன்னு டைட்டில் வெச்சு வாரம் ஒரு வீடியோ வெளியிடுறோம். திருதான் இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்” என்று கணவர் முகத்தைப் பார்க்கிறார் கனி.

கார்த்திகா, திரு
கார்த்திகா, திரு

“இவங்களை டைரக்ட் பண்ணுறது ரொம்ப கடுப்பா இருக்குங்க. கேமரா பத்திக் கொஞ்சம் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு, ‘இருட்டா இருக்கிற மாதிரி இல்லை, லைட்டிங் ஓகேவா’ன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. ‘ஸ்கிரிப்ட்ல இருக்கிறத ஒழுங்காப் பேசு’ன்னு சொல்லிடுவேன். நானே எடிட்டிங்ல கத்துக்குட்டி. இதுல பக்கத்துல உட்கார்ந்துகிட்டு இந்த ஷாட் பெருசா இருக்குல்ல, இதைக் குறைச்சுக்கலாமான்னு கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்க. என்ன பண்ணுறது?’’ எனத் திரு நொந்துகொள்ள, முறைக்கிறார் கார்த்திகா.

‘`நீங்களும் ஆன்லைன்ல பிஸி. பசங்களும் ஆன்லைன் கிளாஸ்தானா?”

“ஆமாம். பெரிய பொண்ணு தியா ஆறாம் வகுப்பு. சின்னப்பொண்ணு தஸ்மய் மூன்றாம் வகுப்பு. இந்த ஆன்லைன் கிளாஸ் செம டார்ச்சர். எல்லாப் பசங்களும் சேர்ந்து ஜாலியா இருந்து விளையாடி, கிளாஸ்ல உட்கார்ந்து டீச்சரை நேர்ல பார்த்துக் கத்துக்கிறது போய், திரையில சின்னச்சின்னதா தெரியுற முகங்களைப் பார்த்துப் பேசுறது என்ன மாதிரியான உளவியல் பிரச்னைகளைக் கொண்டு வருமோ? பசங்களை இப்படிப் பார்க்குறதே கஷ்டமா இருக்கு” என்கிறார் திரு.

‘`உங்க கணவருக்கான இடம் சினிமாவில் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?’’

“நிச்சயமா இதைவிட நல்லா இருக்கணும். வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டா அதுக்குள்ள மூழ்கிடுவார். அப்போ அவரைப் பார்க்கவோ பேசவோ பயமா இருக்கும். ஒவ்வொரு விஷயத்துக்கும் அவ்ளோ மெனக்கெடுவார். ஆனா, இன்னும் அவருக்கான இடம் கிடைக்கலை. கூடிய விரைவில் கிடைச்சுடும்னு நம்புறேன்” என்று திருவின் கைவிரல்களைப் பற்றிக்கொள்கிறார் கனி.

“கமர்ஷியலா இல்லாம ரொம்ப லைவ்லியா ‘ஆடுகளம்’ மாதிரி ஒரு படத்தை எடுக்கணும்னு என்கிட்ட கனி அடிக்கடி சொல்லுவாங்க. அப்படி ஒரு கதையும் இருக்கு. ஆனா, அதைப் பண்ணுறதுக்கு இன்னும் எனக்கு தைரியம் வரலை. அந்த தைரியம் வந்தவுடன் நிச்சயமா அதைப் படமாக்குவேன். ஏற்கெனவே எனக்குள்ள இருந்த ஒன்லைனை இந்த லாக்டெளன்ல கதையா எழுதி முடிச்சு முழுமையா ரெடி பண்ணி வெச்சிருக்கேன். இனிதான் தயாரிப்பாளர், நடிகர்களை அப்ரோச் பண்ணணும்” என்கிறார் திரு.

‘`கணவர் இயக்கத்தில் பிடித்த படம், சுமாரான படம்?’’ என்ற கேள்விக்குக் கனியிடமிருந்து பதில் வேகமாக வருகிறது.

“ ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘நான் சிகப்பு மனிதன்’ ரெண்டும் பிடிக்கும். ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பிடிக்காது. திருவுக்கும் மூணு அக்கா, எங்க வீட்லயும் மூணு பொண்ணுங்க. அப்புறம் எப்படி இப்படியொரு ஆணாதிக்கப் படம்? பொண்ணுங்ககிட்ட இந்தப் படத்தை என் கணவர்தான் எடுத்தார்னு சொல்லவே ஒரு மாதிரியா இருக்கும். ஏன் இப்படியொரு படம் எடுத்தன்னு நான் திருகிட்ட ரொம்ப நாள் சண்டை போட்டுட்டே இருந்தேன்” என, திருவைச் செல்லமாகத் தட்டுகிறார் கார்த்திகா!