
களத்தில் பெண்கள்
ஜோதிமணி எம்.பி... எப்போதும் மக்களுடன் ஒருவராகவே களத்தில் நிற்பவர் என்பதை கரூர் மக்கள் நன்கு அறிவார்கள். இப்போது கொரோனா தன் தொகுதி மக்களைப் பாதித்துவிடக் கூடாது என்பதால் மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் நடந்த ஓர் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவர் ஒரு மாத காலம் ஓய்வு அவசியம் என்று சொல்லியும், அதுபற்றி கவலைகொள்ளாமல் இயங்கி வருகிறவரிடம் தொலைபேசியில் பேசினோம்.
எம்.பி ஆன பின்பும் பழைய ஜோதிமணியாகவே களத்தில் கலக்கி வருகிறீர்களே?
பொது வாழ்க்கை என்பதே மக்களுக்காகப் பணியாற்றுவதுதான்; பதவிகள் பெறுவதல்ல. அதேநேரம் நம் உழைப்புக்கான அங்கீகாரமாக ஒரு பதவி கிடைத்தால், அதை வைத்து மக்களுக்கு அதிகபட்சம் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்ய வேண்டும். நான் உள்ளாட்சி உறுப்பினராக இருந்தபோது எப்படி மக்கள் பணி செய்தேனோ, அதையேதான் இப்போதும் செய்துவருகிறேன். நாளை எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும் செய்வேன். அதேநேரம் எம்.பியாக இருப்பதால் தொகுதிப் பிரச்னை, மாநிலப் பிரச்னை எனப் பெரிய அளவில் மக்களின் பிரச்னைகளைப் பேச முடிகிறது. பல முக்கியமான விஷயங்களில் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க முடிகிறது.
எம்.பி ஆன பிறகு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?
‘ஏன் இளைச்சுப்போயிட்டீங்க, கண்ணுல கருவளையமா இருக்கு... சரியா தூங்குறதில்லையா'ன்னு அக்கறையோட விசாரிப்பாங்க. வயசான பெரியவங்க கன்னத்தைக் கிள்ளி கொஞ்சுவாங்க, திருமணம் செஞ்சுக்கச் சொல்லி வற்புறுத்துவாங்க. சின்னக் குழந்தைங்க எல்லாம் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. அந்தளவுக்கு எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராக நான் இருக்கேன். என் குடும்பம் இப்போ பெரிய குடும்பமாக மாறியிருக்கு!

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்... இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?
23 வருடப் போராட்டத்தின் மூலமாகவே ஊராட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கட்டத்துக்கு வந்திருக்கிறேன். அதேநேரம் மக்களின் அடிப்படைத் தேவை, அதை எத்தனை நாள்களில் திட்டமாகச் செயல்படுத்த முடியும் என்பதை நன்கறிவேன். இந்த அனுபவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்படுவதற்கு எனக்கு உதவியாக இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த என் அம்மாவுக்கும், அடுத்ததாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த ராஜீவ் காந்திக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அம்மாவின் பங்களிப்பு பற்றி...
நான் வீட்டில் ஒரே பிள்ளை. அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அம்மாதான் தனியாளாக என்னை வளர்த்தெடுத்தார். எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்து போகாத தெளிவான சமூக அக்கறை உள்ள மனுஷி என் அம்மா. `நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னபோது ஒரு தாயாக வருத்தப்பட்டார், பலவிதமான போராட்டங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றேன். ஆனால், வெற்றிச் சான்றிதழ் வாங்கும்போது அம்மா இல்லையே என்கிற உணர்வு என்னை நிதானமிழக்கச் செய்தது. ஒரு நொடி தவித்துப் போய் நின்றேன். செந்தில் பாலாஜிதான் `என்னை அம்மாவாக நினைத்துக்கொள்ளுங்கள்' எனச் சொல்லி அந்தச் சூழ்நிலையை மாற்றினார். அதேபோல, எம்.பிக்கள் பதவியேற்கும்போது எல்லோருடைய குடும்பத்தில் இருந்தும் ஆள்கள் வந்திருந்தார்கள் என் சார்பாக யாரும் வரவில்லை. அந்த நேரத்திலும் அம்மா இல்லாதது மீள முடியாத இழப்பாகவும் கடக்க முடியாத வெறுப்பாகவும் இன்றும் என் மனத்தில் இருக்கிறது.
தனியாக வாழும் எண்ணம் ஏன்?
வலிந்து எடுக்கப்பட்ட முடிவல்ல. நான் 21 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்தேன். காலையில் மக்கள் கூட்டமாக நம் வீட்டுவாசலில் நிற் பார்கள் என எனக்கு அப்போது தெரியாது. அப்படி நின்றபோது, அது எனக்கு மிகப்பெரிய கமிட்மென்ட் ஆகிவிட்டது. குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தால், முழு நேரமாக மக்கள் பணியாற்ற முடியாது. ஏதாவது ஒன்றைச் சிறப்பாகச் செய்யலாமே என்றுதான் நான் இந்த முடிவை எடுத்தேன்.
எழுத்தாளர் ஜோதிமணியை மீண்டும் எப்போது பார்க்கலாம்?
படிப்பதற்கான நேரம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. எழுத்தைப் பொறுத்தவரையில் நான் முன்னாள் எழுத்தாளர் நிலைக்குப் போய்விட்டேன். நாடாளுமன்ற மசோதாக்கள், அது சம்பந்தமான விஷயங்களைப் படிப்பதிலேயே அதிக நேரம் செலவாகிறது. இப்போது கொரோனா பாதிப்பு விஷயமாக என் தொகுதியில் உள்ள 6,300 ஊர்களுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறேன். நாவல், கவிதைகளின் மீது எனக்கு எப்போதும் தீராத காதல் உண்டு. ஆனால், தனிப்பட்ட என் விருப்பத்தைத் தாண்டி, ஒரு எம்.பி-யாக மக்கள் பணிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் உங்களின் மீது தனிப்பட்ட முறையில் வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் நிச்சயம் மதிப்பளிப்பேன். அதேநேரம், தனிப்பட்ட முறையில் ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்தால், அது அவர்களின் பிரச்னை; நம் பிரச்னை அல்ல என்று கடந்துவிடுவேன்.
உங்களின் சொந்த விஷயங்களை சுக துக்கங்களை யாரிடம் பகிர்ந்துகொள்வீர்கள்?
நண்பர்கள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான வர்கள். 20 ஆண்டுக்கால நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அடிக்கடி சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம். அரசியல் ரீதியாக, கள ரீதியாகச் செந்தில் பாலாஜியிடம் பகிர்ந்து கொள்வேன். கட்சி சார்ந்த விஷயங்களைத் தலைவர் ராகுல் காந்தியிடம் பகிர்ந்து கொள்வேன். அம்மா இறந்த காலகட்டத்தில் தலைவரும், சோனியா காந்தி மேடமும்தான் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். நாடாளுமன்றத்திலும் என் தொண்டை சரியில்லாததைக் கவனித்து அடுத்த நாள் ஹால்ஸ் மிட்டாயுடன் வந்தார் சோனியா காந்தி மேடம். அம்மா இல்லாத குறையைத் தவிர வாழ்க்கையில் பெரிய குறை ஒன்றும் இல்லை. தவிர, விபாசனா மெடிட்டேஷன் மையத்துக்குப் போய் தியானம் செய்வேன். பல விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்வதற்கு எனக்கு அது உதவுகிறது.