சினிமா
Published:Updated:

பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!

8 தோட்டாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
8 தோட்டாக்கள்

அதர்வா கரியரில் இது முக்கியமான படமா இருக்கும்னு நம்புறேன்.

பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!

“ ‘8 தோட்டாக்கள்’ படம் பண்றதுக்கு முன்னாடியே அதர்வாவுக்காக ஒரு கதை வெச்சிருந்தேன். அந்தச் சமயத்தில் அவர் நாலஞ்சு படங்களில் நடிச்சிட்டிருந்ததால, அதற்கான சூழல் அமையலை. `8 தோட்டாக்கள்’ ரிலீஸானதுக்குப் பின் அதர்வாவுடன் படம் பண்றதுக்கான வாய்ப்பு வந்தப்போ, ஒரு படம் இயக்கின அனுபவங்கள், வாழ்க்கைமீதான பார்வை இரண்டும் இன்னும் கொஞ்சம் பக்குவப்பட்டிருந்தது. அதன்பின், கிட்டத்தட்ட ஒரு வருஷம் எடுத்துக்கிட்டு `குருதி ஆட்டம்’ ஸ்கிரிப்ட்டை முடிச்சேன்...” என, கதை ஆரம்பித்த கதையோடு பேச ஆரம்பித்தார், இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.

பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!

``அதர்வா, ப்ரியா பவானி ஷங்கர், ராதிகா, ராதாரவின்னு பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்காங்களே?’’

“அதர்வா கரியரில் இது முக்கியமான படமா இருக்கும்னு நம்புறேன். கதை சொல்லி முடித்தபோதும் சரி, படம் பார்த்தபோதும் சரி, எழுந்து நின்று கட்டிப்பிடிச்சுக்கிட்டார். `என் நம்பிக்கையைக் காப்பாத்திட்டீங்க’ன்னு சொன்னார். அவர் அருமையான நடிகர். ஆக்‌ஷன், எமோஷன், காமெடின்னு எல்லா உணர்வுகளையும் திரையில் அவ்வளவு அழகாகக் கொண்டு வர்றார். அவர் இன்னும் நிறைய நல்ல படங்கள் நடிக்கணும், பெரிய உயரங்களுக்குப் போகணும்னு ஒரு நண்பனா ஆசைப்படுறேன். நல்ல நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறவங்க ப்ரியா பவானி ஷங்கர். இந்தப் படத்தின் கதையைச் சொன்னதும், அவங்க கேரக்டரைப் பற்றிச் சில கேள்விகள் எழுப்பினாங்க. அது கதையை இன்னும் முழுமையாக்கியிருக்கு. அதற்கு அவங்களுக்கு நன்றி சொல்லணும். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சார் கேரக்டர் மாதிரி இதில் ராதிகா மேடத்தின் கேரக்டர் தனித்துவமா இருக்கும். ராதாரவி சாரும் ஒரு ரசனையான பாத்திரத்தில் நடிச்சிருக்கார். இதைத் தவிர திறமையான, புதிய நடிகர்கள் நிறைய பேர் இந்தப் படத்தில் இருக்காங்க. அவங்க எல்லாரும் படம் வந்ததும் பேசப்படுவாங்கன்னு நம்புறேன்.”

பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!

`` `குருதி ஆட்டம்’ - டைட்டில் காரணம்..?’’

``டைட்டிலை மேலோட்டமா பார்க்கும் போது ரத்தம் தெறிக்க, தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படம்னு நினைக்க வைக்கும். அது மாதிரியே, மதுரையில் கேங்ஸ்டர் பின்னணியில் நடக்குற ஒரு ஆக்‌ஷன் படம்தான். அதுமட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான ஒரு கதை இருக்கு. மற்றபடி எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி அவர்களின் ‘குருதி ஆட்டம்’ புத்தகத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனக்கு இந்தப் பெயர் ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப நாளாகவே இந்தப் பெயரில் ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருந்தது. இந்தப் படத்தோட டைட்டிலை அறிவிச்சதும், ‘இது என் நாவலோட தலைப்பு. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்’னு அவர் ஃபேஸ்புக்கில் பதிவு போட்டிருந்தார். அதுக்கப்புறம் அவர்கிட்ட பேசி மன்னிப்பு கேட்டுட்டேன்.

பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!

`` `மதுரை - கேங்ஸ்டர்ஸ்’ - இந்த பார்முலாவில் நிறைய படங்கள் வந்திருச்சே..?’’

``முதலில் நான் அதர்வாவுக்காக எழுதிய கதைக்கு, சுஜாதாவின் ‘நகரம்’ சிறுகதைதான் தொடக்கப்புள்ளி. அதற்காக மதுரையில் நிறைய சுத்திட்டு இருந்தேன். வேற கதையை எழுதலாம்னு முடிவு பண்ணினப்போ, களம் மட்டும் மதுரையாகவே இருக்கட்டும்னு தோணுச்சு. மதுரையின் நிலம், மக்கள், வாழ்வியல் எல்லாத்திலும் ஒரு தனித்துவம் இருக்கு. நிச்சயமாக மதுரை சம்பந்தப் பட்ட மற்ற படங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கும்.”

பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!
பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!

`` ‘8 தோட்டாக்கள்’ படத்தின் கதையை ரொம்ப அழகியலா சொல்லியிருப்பீங்க; இந்தப் படத்தில் ஆக்‌ஷன் அதிகமாக இருக்கும்னு சொல்றீங்க. ஹீரோவுக்காக மாஸ், ஆக்‌ஷன் சேர்த்துக் கதை பண்ணியது எப்படி இருந்தது?’’

``மெயின்ஸ்ட்ரீம் சினிமாதான் எளிய மக்களின் கலை வடிவம். அதை மிக முக்கியமான ஊடகமாகப் பார்க்கிறேன். எல்லாத் தரப்பு மக்களிடமும் சென்று சேரக்கூடிய ஒரு படத்தில் நாம் சொல்லுகிற விஷயம் உண்மையாகவும், அதே சமயம் அவர்களுக்குப் புரிகிற மொழியிலும் இருக்கணும். ‘குருதி ஆட்டம்’ அப்படி ஒரு வெகுஜன சினிமாவாக இருக்கும்னு நம்புறேன்”

ஸ்ரீ கணேஷ்
ஸ்ரீ கணேஷ்

``யுவன்ஷங்கர் ராஜாவோடு வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது..?’’

``யுவன் சாரோட இசை, நம் தலைமுறையின் முக்கியமான அடையாளம். அப்படி ஒரு கலைஞனோடு வேலை பார்ப்பது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ராஜா சாரின் இசையில் இருக்கும் ஆன்மா, யுவன் சாரின் இசையிலும் இருக்குன்னு நம்புகிறேன். இந்தக் கதையின் சில உணர்வுபூர்வமான தருணங்களை எழுதும்போது, யுவன் சார் இந்தப் படத்துக்கு இசையமைச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அப்படித்தான் அவரிடம் போய் நின்றேன். அவர் அதிகம் பேசுபவர் இல்லை. ஒரு அமைதி அவரிடம் எப்போதும் இருக்கும். பின்னணி இசைக்காக முழுப்படத்தையும் பார்த்ததும், ஒரு பெரிய வாய்ஸ் நோட் அனுப்பினார். அதைக் கேட்டபோது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.”

பொறுமை அதர்வா... பொறுப்பு பிரியா!
`` ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் நீங்க தமிழில் அறிமுகப்படுத்திய நடிகை அபர்ணா பாலமுரளியின் நடிப்பு ‘சூரரைப் போற்று’ படத்துக்காக ரொம்பவே பேசப்பட்டது; அதைப் பார்த்தப்போ எப்படி இருந்தது..?’’

`` ‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்த்துட்டு அபர்ணாகிட்ட, ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க’ன்னு சொன்னேன். `8 தோட்டாக்கள்’ பண்ணும்போது, ரொம்ப விளையாட்டுப் பொண்ணாகத்தான் இருப்பாங்க. ஆனால், நடிக்க வேண்டிய சீன்களில், ஈசியா ஸ்கோர் பண்ணிடுவாங்க. அப்போதே அவங்ககிட்ட, ‘நல்ல நல்ல படங்களாக செலக்ட் பண்ணி நடிச்சா, பார்வதி அளவுக்கு வருவீங்க’ன்னு சொன்னேன். இப்போ அவங்களோட நடிப்பை நிறைய பேர் பாராட்டுறதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு. அன்னைக்கு நான் சொன்னதை இன்னைக்கு எல்லாரும் சொல்றாங்க.”