
இது ஒரு புதுவிதமான வைரஸ். உண்மையைச் சொன்னால், அதைப்பற்றி முழுமையாக நமக்கு இன்னும் தெரியவில்லை.
தமிழகத்தில் கொரோனாத் தாக்கம் குறித்து ஆராயும் மருத்துவ நிபுணர்கள் வரிசையில் முக்கியமாக இடம்பெறுகிறவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்(ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானியும் தேசிய பரவு நோயியல் நிறுவன(என்.ஐ.இ) துணை இயக்குநருமான டாக்டர் பிரப்தீப் கவுர்.
``கொரோனாப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கை என்று சொல்லி, தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கை நீடித்துக்கொண்டே போவது சரியா? இதனால் மக்கள் அவஸ்தைப்படுகிறார்களே?’’
“கொரோனாத் தொற்று அதிகமாகிக்கொண்டே போகிற சூழ்நிலையில், ஊரடங்கை அமல்படுத்தவேண்டிய சூழ்நிலையில் அரசு இருக்கிறது. இருந்தபோதிலும், நிறைய ஊடரங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்பு, சென்னையில் தொற்று அதிகமாக இருந்தது. பிறகு குறைந்தது. மக்கள் ஒத்துழைப்பைப் பார்த்து, சென்னையில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதுபோல் ஒரு நிலை சென்னைக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் வரவேண்டும். அங்கெல்லாம் இப்போது தொற்று அதிகமாக இருக்கிறது. அங்கே உள்ள மக்களும், அரசு சொல்லும் ஆலோசனையைப் பின்பற்றினால், ஊடரங்கைப் படிப்படியாக அரசு தளர்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.”

``கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்களுக்கே போதிய புரிதல் இல்லையா? அறிவிப்புகளில் ஏன் இவ்வளவு குழப்பம்?”
``இது ஒரு புதுவிதமான வைரஸ். உண்மையைச் சொன்னால், அதைப்பற்றி முழுமையாக நமக்கு இன்னும் தெரியவில்லை. உலகம் முழுவதிலுமிருந்து ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். மக்களுக்கு இது குழப்பமாக இருக்கலாம், ஆனால் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வைரஸ் பற்றிய தகவல்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக, பொதுமக்கள் முகக்கவசம் அணிவதற்கு முதலில் அறிவுறுத்தப்படவில்லை. ஆனால் பின்னர், வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவசம் முக்கியம் எனக் கண்டறிந்தோம். இப்படி நிலைமைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.”
``மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கருதுகிறீர்களா?’’
``இன்னும் விழிப்புணர்வு தேவை. வைரஸ் தாக்கம் ஆரம்பித்த மாதங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். ஆனால் நோய்த்தொற்று அதிகரிக்கும் சூழலில் மக்கள், நிலைமையைக் கண்டு சோர்வடைகிறார்கள். ஆனால், நோயை உண்டாக்கும் வைரஸோ தொற்றை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இப்போது கை கழுவும் பழக்கம் நிச்சயமாக அதிகரித்துள்ளது. அதேநேரம், இப்போதும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியைக் கடைப் பிடிக்காமலும் அலட்சியமாக இருக்கிறார்கள். அறிகுறி உடைய பலர் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதில்லை. அவர்களால் மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. கோவிட் 19 வைரஸை அழிக்க மருத்துவத்தோடு விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் மிகவும் முக்கியம்.”

``கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று சிலநாடுகள் சொல்கின்றன. அது உண்மையா?’’
“எந்த நாடும் கோவிட்-19 வைரஸை குணமாக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும், இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ‘டெக்ஸாமெதாசோன்’ மருந்து, வென்டிலேட்டரில் இருந்த நோயாளிகளின் இறப்பைக் குறைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த மருந்து உபயோகத்தில் உள்ளது. வேறு சில மருந்துகளும் ஆராய்ச்சியில் உள்ளன. அவற்றின் முடிவுகள் இன்னும் 3-6 மாதங்களில் நமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம்.’’
“கொரோனாத் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?’’
“தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது நீண்டகாலச் செயல்பாடு. மருத்துவப் பரிசோதனைகளில் பல படிகள் உள்ளன. 2021க்குள் மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடையும் என்று நம்புகிறோம். தடுப்பூசி இந்த வைரஸைத் தடுப்பதாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அதைப் போடுவதற்குப் போதுமான அளவு தயாரிக்கப்பட வேண்டும். அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம்.’’
``கொரோனா சிகிச்சையில் பாரம்பர்ய மருத்துவங்கள் பயனளிப்பதாகச் செய்திகள் வருகின்றன. அலோபதி மருத்துவர்கள் பாரம்பர்ய மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறதே?’’
``பாரம்பர்ய மருத்துவங்கள் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூற, போதுமான தரவுகள் எங்களிடம் இல்லை. மருத்துவப் பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை மட்டுமே பயன்படுத்த அலோபதி மருத்துவர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். நிரூபணம் இல்லாத சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த அவர்கள் தயங்கவே செய்வார்கள்.’’
``கபசுரக் குடிநீர் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதை முறைப்படி ஆய்வு செய்ய ஏன் தயக்கம்?’’
``அலோபதி மருந்துகள் யாவும் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவை. அதேபோல கபசுரக் குடிநீரையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். சித்த மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசுடன் இணைந்து அதைச் செய்யலாம். கோவிட் 19 வைரஸைப் பொறுத்தவரை, அதற்குத் தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி என்று எதுவும் இல்லை. ஆரோக்கியமான நபரால் எந்த நோயையும் சிறப்பாகச் சமாளிக்க முடியும். ஆரோக்கியமான உணவுமுறைகள், சீரான உடற்பயிற்சிகள், நல்ல உறக்கம், புகைப்பழக்கத்தைக் கைவிடுவது போன்றவற்றைக் கடைப்பிடித்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.’’
’’100 நாள்களுக்கு மேலாகக் களத்தில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?’’
``சுகாதாரப் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இது மிகவும் சவாலான நேரம். அவர்கள் மருத்துவமனைகளிலும், வெளியிலும் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகிறார்கள். மருத்துவத் துறையில் பல பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் உயிரைக்கூட இழந்துள்ளார்கள். கடந்த மாதம் என் கணவருக்கு கோவிட் 19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அது எங்களுக்கு மிகவும் கடினமான காலம். இந்தச் சூழலில் அரசும் சமூகமும் மருத்துவத்துறைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்குப் பாதுகாப்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும்.’’
``உங்கள் குடும்பம், பூர்வீகம் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்...’’
``நான் பிறந்து வளர்ந்தது பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில். சென்னையிலிருந்து 2.600 கி.மீ. பாகிஸ்தான் எல்லையிலிருந்து 11 கி.மீ. பெற்றோர் கிராமப்புற அரசுப்பள்ளி ஆசிரியர்கள். சமூகத்திற்கு ஏதேனும் பங்களிக்கவேண்டும் என உணர்த்தியவர்கள் அவர்கள்தாம். என் கணவர் தமிழர். சிறுநீரக நிபுணர். மருத்துவ மேற்படிப்பு படிக்கும்போது அவரைச் சந்தித்தேன். 2002-ல் எங்களுக்குத் திருமணம் நடந்தது. எனக்கு ஒரு தம்பி... வெளிநாட்டில் வசிக்கிறார். மாமனார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. மாமியார் என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர். ஒரே மகன்... 14 வயதாகிறது. அன்பும் அரவணைப்பும் கொண்ட இனிய குடும்பம்”
முகம் மலரச் சிரிக்கிறார் பிரப்தீப் கவுர்.