
‘‘அப்பா - பையன் கதைன்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். பல வீடுகள்ல இந்தக் கதை நடந்திருக்கும்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினிமுருகன்’ ‘சீமராஜா’ எனத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்குப் படம் எடுத்த இயக்குநர் பொன்ராம், ‘எம்.ஜி.ஆர் மகனாக’ நடிகர் சசிகுமாருடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். படம் எப்படி வந்திருக்கிறது? பொன்ராமிடம் பேசினேன்.
‘‘அப்பா - பையன் கதைன்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். பல வீடுகள்ல இந்தக் கதை நடந்திருக்கும். அப்பா சத்யராஜ், பையன் சசிகுமார். அப்பப்போ மோதல் இருக்கும். ரெண்டு பேரும் பேசிக்காம இருப்பாங்க. இடையில, அம்மா சரண்யா பொன்வண்ணன் மாட்டிக்கிட்டு முழிப்பாங்க. பேலன்ஸ் பண்ணி சூப்பரா நடிச்சிருக்காங்க. இந்த மூணு பேருக்கும் நடுவுல தாய்மாமன் கேரக்டர்ல சமுத்திரக்கனி நடிச்சிருக்கார். படம் முழுக்க வேஷ்டியே கட்டாம டவுசர் மட்டும் போட்டுட்டு வலம் வந்திருக்கார். ‘ரஜினிமுருகன்’ நேரத்துல ‘அண்ணன் வில்லன் ரோல்ல நடிக்கணும்’னேன். ‘என்னடா, வில்லனா நடிக்கணும்னு கேட்குறே. நல்லா தானே போயிட்டு இருக்கு’ன்னார். ‘எல்லாப் படத்துலயும் கருத்து சொல்லிக் கிட்டு இருக்கீங்க. இதுல வித்தி யாசமா நடிங்க’ன்னு சொல்லி, கனி அண்ணனை நடிக்க வெச்சிருந்தேன். படத்துல ஏழரை மூக்கன் கேரக்டர் நல்லாவே பேசப்பட்டுச்சு. இப்ப, ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்துக்காகப் போயி நின்னேன். ‘இந்த டைம் என்னடா கொண்டு வந்திருக்க’ன்னார். ‘காமெடி’ன்னேன். ‘எனக்கு என்னடா காமெடி வரும்’னார். ‘ரஜினிமுருகன்’ க்ளைமாக்ஸ் சீன்ல அடிவாங்கிட்டு ஒரு மாதிரி உடம்பை நெளிச்சு நடந்து போற மாதிரியே இதுல படம் முழுக்கப் பண்ணுங்க அண்ணே’ன்னு சொன்னேன். `சரி’ன்னு வந்து நடிச்சுக் கொடுத்தார். படத்துல அவரோட கேரக்டரைத்தான் முதல்ல முழுசா போகஸ் பண்ணினேன். ஏன்னா, இந்த கேரக்டர் சரியாயிருந்தா எல்லாம் ஓகே ஆகிரும்னு தோணுச்சு. நினைச்ச மாதிரியே எல்லாம் சரியா அமைஞ்சிருச்சு. டிரெய்லர் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணினாங்க. படம் பார்த்தா இன்னும் வேற லெவல்ல இருக்கும்.’’

``சமுத்திரக்கனி கேரக்டர் லுக் பார்த்துட்டு சத்யராஜ் மற்றும் சசிகுமாருடைய ரியாக்ஷன் என்னவா இருந்துச்சு?’’
‘‘மொத்த யூனிட் ரியாக்ஷனும் பயங்கரமா இருந்துச்சு. எல்லாரும் சிரிச்சிட்டாங்க. கனி அண்ணே ஓடிப்போய் ஒளிஞ்சிக்கிட்டார். ‘என்னடா, டவுசரோட நிக்க வெச்சிட்டே’ன்னு கேட்டார். ‘வாங்கண்ணே, கேரக்டர்தானே’ன்னு சொல்லி, கூப்பிட்டு வந்தேன். அப்புறம் ரொம்ப கேஷுவலா டவுசரோட உலா வர ஆரம்பிச்சிட்டார். படத்தோட ஷூட்டிங் முழுக்கத் தேனிலதான் நடந்துச்சு.’’
``தொடர்ந்து மூணு படங்கள் சிவகார்த்திகேயன் ஹீரோ. இதுல சசிகுமார் எப்படி என்ட்ரி ஆனார்?’’
‘‘ஸ்க்ரிப்ட் முடிச்சவுடனே சசிகுமார் மற்றும் சத்யராஜ் சாருடைய காம்போதான் செட் பண்ணுனேன். அப்புறம், சசிகுமாருக்குக் கூடவே இருக்க ஏத்த மாதிரியான நடிகரா யார் இருப்பாங்கன்னு யோசிச்சேன். அப்போதான் கனி அண்ணா ஞாபகத்துக்கு வந்தார். நிறைய படங்கள்ல ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருந்தாலும், ‘எம்.ஜி.ஆர் மகன்’ காம்போ இவங்களுக்கே புதுசா இருந்துச்சு. ஒரிஜினல் வாழ்க்கையில ரெண்டு பேரும் இப்படித்தான் இருப்பாங்க. இதை நிறைய பொது இடங்கள்ல பார்த்திருக்கேன். குறிப்பா, நடிகர் சங்கத் தேர்தல் நடந்தப்போ திருவிழாவுல விக்குற கண்ணாடியை வாங்கி மாட்டிக்கிட்டு ஓட்டு போட வந்திருந்தாங்க. இதை பேப்பர்ல ஸ்டில்லா பார்த்தேன். ரொம்ப ஃபன்னா இருந்தது. இதை மனசுல வெச்சுட்டுதான் வித்தியாசமான காம்போ உருவாக்கினேன். எனக்கு கனி அண்ணா நல்ல பழக்கம். சசிகுமார் பெருசாப் பழக்கமில்ல. ‘பேட்ட’ சமயத்துல ஒருமுறை நேர்ல பார்த்துப் பேசினேன். அப்போ, ‘நாம சேர்ந்து படம் பண்ணுவோம் சார்’னார். அதுக்குப் பிறகு கதையோடு போய் சந்திச்சேன். ‘இவ்வளவு சீக்கிரம் கதையோடு வருவீங்கன்னு எதிர்பார்க்கல’னார். அவர் கேரக்டர் பெயரே ‘அன்பளிப்பு ரவி.’ எது செஞ்சாலும் பிரமாண்டமா அன்பளிப்பு ஒண்ணு கொடுத்திருவார். சின்னதா கிப்ட் ஒண்ணு கொடுத்திருந்தாலும். கிப்ட்ட விட பேர் பெருசா இருக்கும். ரொம்ப ஜாலியான கேரக்டர்.’’
`` ‘எம்.ஜி.ஆர் மகன்’ டைட்டில் கேட்டுட்டு சத்யராஜ் என்ன சொன்னார்?’’
‘‘முதல்ல ஷாக் ஆகிட்டார். ‘தலைவரோட டைட்டில் நமக்குக் கிடைக்குமா, தருவாங்களா’ன்னு கேட்டார். ‘டைட்டில் எப்படியிருக்குன்னு மட்டும் சொல்லுங்க’ன்னேன். ‘சூப்பரா இருக்கு’ன்னார். ‘இந்த டைட்டிலுக்காகவே படம் பண்ணுவேன்’னும் சொன்னார். முறைப்படி லெட்டர் எழுதிக் கொடுத்து அதிகாரபூர்வமா பெயரை வாங்கினோம். தயாரிப்பாளர் சுந்தரும் உறுதுணையா இருந்தார். தமிழகத்தின் மாபெரும் தலைவர் பெயரை சும்மா வெச்சிடக் கூடாது. இதனால, ஒரு சின்ன பேக் கிரவுண்ட் கதை வெச்சிருக்கேன். ‘எந்த இடத்துலயும் தலைவருடைய பெயருக்கு சின்ன இழுக்குகூட வந்துடக் கூடாது’ன்னு சத்யராஜ் சாரும் சொன்னார். முக்கியமா, ‘என்னோட கேரக்டர்ல எம்.ஜி.ஆர்னு தலைவரோட பேர் இருக்குறப்போ திட்டுறதுக்காகக்கூட யாரும் தப்பா யூஸ் பண்ணிறக் கூடாது’ன்னார். சரியான முறையில தலைவரோட பெயரைப் படத்துல பயன்படுத்தியிருக்கேன்.’’
``ஹீரோயின் மிருணாலினி?’’
‘‘புது ஹீரோயினை நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். முக்கியமா, தமிழ் பேசத் தெரிஞ்சவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைச்சேன். அவங்க பண்ணியிருந்த டிக்டாக், டப்ஸ்மாஷ் வீடியோஸ் பார்த்தேன். நல்லாருந்தது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துலயும் ஆக்டிங் நல்லாருந்தது. ஆடிஷன் வெச்சு செலக்ட் பண்ணினேன். டயலாக்ஸ் எல்லாத்தையும் உள்வாங்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிருவாங்க. தமிழ் சூப்பரா பேசுனாங்க.’’
``மியூசிக் டைரக்டரா அந்தோணி தாசனை அறிமுகப்படுத்தியிருக்கீங்களே?’’
‘‘என்னோட மூணு படத்துக்கும் இமான்தான் மியூசிக். ‘எம்.ஜி.ஆர் மகன்’ பொறுத்தவரைக்கும் புதுசா பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். இமான் சார் உட்பட எல்லார்கிட்டயும், ‘நீங்கள்லாம் வேற வேற டைரக்டர், நடிகர்கள்கிட்ட டிராவல் பண்றீங்க. நான் மட்டும் ஒரே மாதிரி இருக்கேன். எனக்கும் சின்னதா மாற்றம் வேணும்’னு சொன்னேன். எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க. அப்போ அந்தோணி தாசனைக் கூப்பிட்டு விட்டேன். ‘சார், இந்தப் படத்துலயாவது நடிக்க வாய்ப்பு கொடுங்க’ன்னார். ‘உங்களை நடிக்கக் கூப்பிடல, படத்துக்கு மியூசிக் போடணும்’னேன். ‘என்ன சார் சொல்றீங்க. என் மேல இவ்வளவு நம்பிக்கை எப்படி வந்துச்சு’ன்னார். ‘உங்க மேல உங்களுக்கே டவுட்டா’ன்னு கேட்டேன். கதையோட ஒரு சூழலை மட்டும் சொல்லிட்டு, ட்யூன் கேட்டேன். ஒத்தயடில ட்யூன் கொண்டு வந்திருந்தார். ரொம்ப நல்லாருந்தது. உடனே, யுகபாரதிகிட்ட வரிகள் எழுதச் சொல்லி ‘ஜில்லா சந்து நிக்கும்’ பாட்டை உருவாக்கினோம். ஒத்தயடி சாங்க்ஸ் எப்போவும் ரீச் ஆகும். கிராமியப் பின்னணில இசையறிவு இயற்கையாவே தாசனுக்கு இருக்கு. இதை சினிமா வடிவமா மாத்த முயற்சி பண்ணினேன். அந்தோணி நல்லா மியூசிக் பண்ணியிருக்கார்.’’

``நந்திதாதாஸை ஒரு பாட்டோட டான்ஸுக்குக் கூப்பிட்டதுக்கு எதுவும் சொல்லலையா?’’
‘‘ ‘ஒரு படத்துக்குக் கூப்பிடாம ஒரு பாட்டுக்கு மட்டும் கூப்பிடுறீங்க?’ன்னு கேட்டாங்க. ‘இல்லங்க, நீங்க பண்ணுனா நல்லாருக்கும். கிளாமர் பாட்டுலாம் இல்ல. டீசன்ட்டா இருக்கும்’னேன். மூணு நாள் கால்ஷீட் கொடுத்திருந்தாங்க. நல்லா வொர்க் பண்ணுனாங்க.’’
``பழ.கருப்பையாவும் படத்துல இருக்காரே?’’
‘‘அவர்தான் வில்லன். கதையோட மெயின் தூண். சத்யராஜ் மற்றும் பழ.கருப்பையா மேலதான் கதையே டிராவல் ஆகும். அரசியல்வாதியா இருக்குற இவர், கல்குவாரி வெச்சிருக்குற தொழிலதிபரா இருப்பார். ஒரு வார்த்தை ஈகோவுல முட்டிக்கும். படம் முழுக்க இந்த ஈகோ டிராவல் ஆகும். ஸ்பாட்ல பேசுறப்போ நிறைய டயலாக்ஸ் இவரே சொன்னார். எல்லாத்தையும் படத்துல யூஸ் பண்ணியிருக்கேன்.’’

``பெருசா பார்க்கப்படுற ஆணவப் படுகொலை மற்றும் பஞ்சாயத்துக் காட்சியெல்லாம் சட்டயர் டோன்ல திரையில கடத்திட்டுப் போயிடறீங்களே?’’
‘‘பல இடங்கள்ல ஆணவப் படுகொலை தெரிஞ்சோ தெரியாமலோ இன்னும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல அதைத்தான் வெச்சிருந்தேன். க்ளைமாக்ஸ்ல கொலை பண்ணியிருந்தா விருது கிடைச்சிருக்கும். எல்லாரும் பாராட்டியிருப்பாங்க. ஆனா, இது வேண்டாம்னுதான் ஃபன்னா முடிச்சிட்டேன். மக்கள் எனக்கு அவார்டு கொடுத்துட்டாங்க. நான் விருது வாங்கணும்ங்குறதுக்காக என்னை நம்புன தயாரிப்பாளரைப் பணயம் வைக்கமுடியாது. சினிமாங்குறது தயாரிப் பாளருக்கு வியாபாரம். இந்த வியாபாரத் துக்குள்ள லைட்டா கருத்தைச் சொல்லணுமே தவிர, முழுக் கருத்தையும் திணிக்கக் கூடாது. இந்தப் படத்துல மருத்துவத்தை எப்படிப் பார்க்கணும்னு சட்டயர் டோன்ல சொல்லி யிருக்கேன். கொரோனாவுக்கு முன்னாடியே நம்ம மருத்துவம் எந்த அளவுக்கு நமக்குத் துணையா இருக்குன்னு சொல்லி இந்தப் படத்தையும் எடுத்துட்டேன்.’’
`` ‘தமிழன்’ படத்துல விஜய்கூட வேலை பார்த்திருக்கீங்க, அவருக்குக் கதை ரெடி பண்ணியிருக்கீங்களா?’’
‘‘எஸ்.ஏ.சி சார்கிட்ட உதவி இயக்குநரா நானும் இயக்குநர் ராஜேஷும் இருந்தப்போ விஜய் சாரைப் பார்த்துப் பேசுற வாய்ப்பு கிடைக்கும். நிறைய டிஸ்கஷன்ஸ் சந்திரசேகர் சார் வீட்டுல நடக்கும். அப்பாவைப் பார்க்க விஜய் சார் ரூமுக்கு வருவார். அப்போ, ‘என்ன ஸ்க்ரிப்ட் பண்ணியிருக்கீங்க’ன்னு கேட்பார். சில நேரங்களில் கலாய்ச்சும் பேசுவார். ‘சுக்ரன்’ படத்துல கெஸ்ட் ரோல் பண்ணியிருப்பார். அந்தப் படத்தோட டிஸ்கஷன் நடந்தபோது, ‘காமெடி ரோலா இருந்தாக்கூடப் பரவாயில்ல. சீரியஸ் ரோல் கொடுத்திருக்கீங்களே’ன்னு சிரிச்சார். ரொம்ப கேஷுவலா பேசுவார். அப்புறம் கால ஓட்டத்துல விஜய் சாரைப் பார்க்க முடியல. ஆனா, அவருக்குக் கதை யோசிச்சு வெச்சிருக்கேன். சரியான சந்தர்ப்பத்துக்காக வெயிட்டிங்.’’
`` ‘நவரசா’ அனுபவம் சொல்லுங்க?’’
‘‘மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா சார் தயாரிப்புல நானும் வேலை பார்க்குறேன். கொரோனாச் சூழலால, மணி சார நேரா பார்க்குற அனுபவம் கிடைக்கல. அடிக்கடி ஜூம் மீட்டிங் நடக்கும். முதல்ல ஸ்க்ரிப்ட் எழுதி அனுப்பியிருந்தேன். படிச்சிட்டு, ‘நல்லாருக்கு, இன்னும் கொஞ்சம் இன்டர்நேஷனல் வெலவல்ல யோசிங்க’ன்னார். சில மாற்றங்கள் பண்ணிட்டு, திரும்பவும் அனுப்பி வெச்சேன். ஓகே சொன்னார். ‘நவரசா’ல ஹ்யூமர் போர்ஷன் பண்ணியிருக்கேன். கெளதம் கார்த்திக், ரோபோ சங்கர், ‘பருத்திவீரன்’ சரவணன் நடிப்புல ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இந்தப் பார்ட்ல ஹீரோயின் யாருமே இல்ல. ஒரு கிராமத்துக்கு ஒரு முறை மட்டும் வந்து போகக்கூடிய டவுன் பஸ்தான் கான்செப்ட். நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்துல சீக்கிரமே ரிலீஸ். அடுத்த ஜெனரேஷன் மக்களுக்கு ஓடிடி பெரிய பிளாட்பாரமா இருக்கும்.’’
`` ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தை தியேட்டர்ல எதிர்பார்க்கலாமா?’’

‘‘கண்டிப்பா பார்க்கலாம். புரொடியூசரும் உறுதியா இருக்கார். தியேட்டரை நம்பி எண்ணற்ற தொழிலாளர்களுடைய வாழ்க்கை இருக்கு. படத்தோட டெக்னீஷியன்ஸ் டீம் இதுகாக நிறைய உழைச்சிருக்காங்க. ‘நெடுநல்வாடை’ படம் பார்த்துட்டு விஷூவல் பிடிச்சிருந்ததனால கேமராமேன் வினோத்தை கமிட் பண்ணினேன். என் டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி சூப்பரா பண்ணிக் கொடுத்தார். எடிட்டர் விவேக் மற்றும் ஆர்ட் டைரக்டர் துரைராஜ் எல்லாரும் நல்லா பண்ணியிருக்காங்க. டிசம்பர் அல்லது பொங்கலுக்குப் படத்தை தியேட்டர்ல எதிர்பார்க்கலாம்.’’
``கிராமப் பின்னணி தாண்டி சிட்டி ஸ்டைல்ல படம் எப்போ பண்ணப்போறீங்க?’’
‘‘அடுத்த புராஜெக்ட் கொஞ்சம் இப்படியிருக்கும்... மிட்டவுன் ஸ்க்ரிப்ட். ஹீரோவா விஜய்சேதுபதி நடிக்க இருக்கார்.’’