
மகளையும் மருமகனையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்திட்டே இருக்கேன்யா. திடீர்னு `வந்துடுறாங்க, வந்துடுறாங்க’ன்னு ஒரே பேச்சா இருக்கு.
முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் கெட்டவனுமில்லைன்னு சொல்வாங்க. ஆனா என் குடும்பம் மட்டும் முப்பது வருஷம் கடந்தும் மீள முடியாமக் கிடக்கே” என்கிறபோது பத்மாவின் குரலில் துயரம் தோய்ந்திருந்தது.
ராஜீவ் கொலைவழக்கில் ஏழு தமிழர்கள் சிறைப்பட்டு 30 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை. மரணதண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டு, விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா என்று சட்ட சடுகுடு நடந்து, இப்போது ஏழு தமிழரின் விடுதலைக்கான முடிவு கவர்னர் கையில். எழுவரை விடுதலை செய்யப் பரிந்துரைத்த தமிழக அமைச்சரவையின் தீர்மானம், இரண்டாண்டு கடந்தும் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடக்கிறது. ஆளுநரின் பாரா முகத்துக்கு உச்ச நீதிமன்றமே அதிருப்தியை வெளிப்படுத்தி யிருக்கிற சூழலில் நளினியின் அம்மா பத்மாவிடம் பேசினேன்.

“மகளையும் மருமகனையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்திட்டே இருக்கேன்யா. திடீர்னு `வந்துடுறாங்க, வந்துடுறாங்க’ன்னு ஒரே பேச்சா இருக்கு. கொஞ்ச நாள்ல தானாவே அந்தச் சத்தம் அடங்கிடுது.
ஏழு பேர்ல ரெண்டு பேர் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அதுலயும் ஒத்தப் பொம்பளப் புள்ளயா என் மக. இந்த வழக்குல முதன்முதலா தூக்குத் தண்டனை தந்தப்ப, ஆறு பேர் கொண்ட என் குடும்பத்துல நாலு பேருக்குத் தூக்குன்னாங்களே. `அழிஞ்சோம்’னுதான் நினைச்சேன்’’ என்ற பத்மா, சில நிமிட மௌனத்திற்குப் பின் தொடர்ந்தார்..
‘‘ஜெயிலுக்குள் அனுபவிச்ச வேதனையெல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்து போன கஷ்ட காலமெல்லாம் திரும்பிப் பார்க்கக் கூடியதா என்ன? ஆனா, நடந்த சில சம்பவங்களைக் கோவையாப் பார்க்கிறப்பதான், மிச்சமிருக்கிற கொஞ்ச வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வருது. அந்தப் பிடிப்புதான் இன்னும் மகள், மருமகன் விடுதலையை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் தெம்பைத் தருது.
இந்த வழக்கு தொடர்பா நிறைய பேரைக் கைது பண்ணினாங்க, ஜெயில்ல வெச்சாங்க. துயரங்களை அனுபவிச்சோம். வழக்கு, கோர்ட்டு, அரசியல்னு வருஷங்களும் ஓடிடுச்சு.
அதேநேரம், முதன்முதலா விசாரணை அமைப்புகள் `சிவராசன், சுபா, தணு தவிர மத்த யாருக்கும் ராஜீவ் கொலையில் நேரடித் தொடர்பு இல்லை’ன்னு சொன்னாங்களே, அன்னைக்குதான் லேசா ஒரு வெளிச்சம் தெரிஞ்சது.

தொடர்ந்து நானும் என் மகனும் தூக்குத் தண்டனையில இருந்து விடுவிக்கப்பட்டோம். பிறகு எட்டாண்டு ஜெயில் வாசத்துல இருந்து நாங்க ரெண்டு பேரும் வெளியில வந்தோம். அப்புறம் நளினி தூக்கை ரத்து செய்தாங்க. அப்படியே முருகன் உள்ளிட்ட மத்தவங்க தூக்கும் ரத்தானது. இதையெல்லாம் பார்க்கிறப்ப, கடைசிக் காலத்துல என் குடும்பத்துல மிச்சமிருக்கிற சிலர் சேர்ந்து வாழணும்கிறது கடவுள் விருப்பம்தான்னு நம்பறேன். அதேநேரம் தம்பி, நல்லதைச் சிந்திக்கிற மனசுதான் கெட்டதையும் யோசிக்குது’’ என்றபடி பேச்சை நிறுத்திவிட்டு எங்கோ வெறித்துப் பார்த்தார்.
“விரக்தி, ஞாபக மறதி, தூக்கமின்மை, மூட்டு வலி, வயோதிகப் பிரச்னைன்னு அம்மாவுக்கும் நிறைய சிக்கல்கள். காலையில எழுந்தா காலண்டரைப் பார்த்துட்டே உட்கார்ந்தி ருக்காங்க. ராத்திரி தூங்கறதில்லை’’ என்ற பத்மாவின் மகன் தண்ணீர் கொண்டு வந்து தர, சில நிமிட ஆசுவாசத்திற்குப் பிறகு தொடர்ந்தார் பத்மா.
``மனுஷனோட சராசரி ஆயுசு 65. நான் அதையெல்லாம் எப்பவோ கடந்து, ஜெயில்ல இருந்து வர்றவங்களைப் பார்த்துட்டுப் போயிடலாம்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்னு நினைக்கேன். என் பொண்ணுமே அறுபதை நெருங்கிட்டா. இப்ப வெளியில வந்தாக்கூட இன்னொரு பத்து வருஷத்துக்கு இருப்பாளாய்யா? பத்து வருஷம்கிறது பத்து நாள் மாதிரி கடந்திடும்.
நளினி மகளுக்குக் கல்யாணம் பண்ணணும்னு ஒரு மாசம் பரோல்ல வந்தப்ப, பத்து நாள் நல்லாப் பேசிட்டிருந்தா. அதுக்குப் பிறகு திரும்பவும் ஜெயிலுக்குப் போகணும்கிற அந்த நினைப்பு அவளைப் பேச விடலை. கட்டிப்பிடிச்சு அழுதுக்கிட்டே ‘என் மகளைத்தான் தூக்கிக் கொஞ்ச முடியாமப் போச்சு. அவளுக்குக் கல்யாணம் முடிச்சு அவ பெத்த பிள்ளையவாச்சும் கொஞ்ச வந்துடுவேனா, இல்ல ஜெயிலுக்குள்ளேயே செத்துப் போயிடுவேனாம்மா’ன்னு கேட்டா. கேட்டராக்ட், தீராத பல்வலி, கருப்பைப் பிரச்னைன்னு அவளும் ரொம்பவே அவஸ்தைப் படறா. உடம்பு ரீதியான பிரச்னைகள்தான் அவளை இப்படியெல்லாம் பேச வைக்குது. ஒண்ணு மட்டும் நிஜம், என் மக நடைபிணமாத்தான் ஜெயிலுக்குள் இருக்கா. என் புள்ளக மட்டுமில்ல, அந்த எல்லாருமே வெளியே வந்துடுவாங்கல்ல தம்பி?” என்கிற அந்தத் தாய்க்குத் தர நம்மிடம் நம்பிக்கை வார்த்தைகளைத் தவிர வேறென்ன இருக்கின்றன?

நிறைவாக, ‘‘அந்தக் கட்சி விடச் சொல்லியிருக்கு; இந்தத் தலைவர் அறிக்கை தந்திருக்கார்னு என் பையன் வந்து சொல்றப்பெல்லாம் ‘அட போடா’ன்னு சொல்லியிருக்கேன். முன்னாடில்லாம் தேர்தல் வந்தா ‘வெளியில வர்றாங்க’ன்னு பேச்சு வரும். தேர்தல் முடிஞ்சதும் அந்தப் பேச்சு அடங்கிடும். நிறைய பார்த்துட்டேன்.
இப்ப என்னவோ, கவர்னர் கையிலதான் முடிவு இருக்குங்கிறாங்க. ராஜீவ் காந்தி மகளே வந்து என் மகளைப் பார்த்துட்டுப் போயிட்டாங்க. இந்த மகராசன் ஏன் நிறுத்தி வெச்சிருக்கார்னு தெரியலை. ஆரம்பத்துல இருந்தே நான் அற்புதம்மாள் அளவுக்குப் போராடலைன்னா, அதுக்குக் காரணம் இருந்திச்சு. வீட்டுக்காரர் போலீஸ், பிரபலமான மருத்துவமனையில நான் நர்ஸ்னு இருந்துட்டு ஒரே ராத்திரியில நிலைமை மாறுனது என்னை முடக்கிப் போட்டுடுச்சு. ஒரு கோயில், குளம், கடைத்தெருன்னு மத்தவங்க மாதிரி சகஜமா வீட்டை விட்டு வெளியில வர முடியலையே? அதனால காலத்து மேல பாரத்தைப் போட்டுட்டு உட்கார்ந்துட்டேன்’’ என்றவர், சில மாதங்களுக்கு முன் தனி ஆளாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றாராம்.
`‘முதல்ல நிறைய மனு எழுதிப் போட்டேன். அதெல்லாம் போய்ச் சேர்ந்ததான்னுகூடத் தெரியலை. அவரை எப்படிப் போய்ப் பார்க்கறதுன்னு தெரியலை. ‘அப்படியெல்லாம் போகக் கூடாது’ன்னு மகன் சத்தம் போட்டான். அதையும் மீறி ஒரு நாள் கிளம்பிப் போனேன். யார் என்னன்னு விவரம் கேட்ட வாசல்ல இருந்த போலீஸ்காரங்க கனிவாப் பேசி, ‘எல்லாம் நல்லபடியா நடக்கும். நீங்க இப்படித் தனியாளா எங்கயும் போகாதீங்க’ன்னு ஆறுதலாப் பேசி ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டாங்க” என்கிறார்.
இந்தத் தாய்மாரின் ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் ஆளுநரே!