லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

படைப்பாளிகள் மீது தேசத்துரோக வழக்கு... இந்தியாவுக்குத் தலைக்குனிவு!

கவிஞர் சல்மா
பிரீமியம் ஸ்டோரி
News
கவிஞர் சல்மா

அரசியல் பெண்கள்: ஆறு கேள்விகள்

கவிஞர் சல்மா, தி.மு.க மகளிர் அணி துணைச் செயலாளர்

‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ (நாவல்), ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ (கவிதைத்தொகுப்பு) உள்ளிட்ட படைப்புகள் வாயிலாக தமிழ் இலக்கிய உலகில் கவனம்பெற்றவர் கவிஞர் சல்மா. திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சல்மா, 2006-ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். பின்னர், தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவராகச் செயல்பட்டார். அவருடன் உரையாடியதிலிருந்து…

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது பற்றி..?

இஸ்லாமியர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்று சமூக அக்கறைகொண்ட இந்தக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள். இவர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்திருப்பது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

நாட்டின் மிகப்பெரிய சொத்து எனக் கருதப்பட வேண்டிய படைப்பாளிகள்மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்திருப்பது இந்தியாவுக்குத் தலைக்குனிவு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் தடைச் சட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முத்தலாக் பிரச்னையில் 0.01 சதவிகிதம் என்கிற அளவில்தான் இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள். பட்டியலின மக்களுக்கு எதிராக நாடு முழுவதும் எவ்வளவோ வன்முறைகள் நடக்கின்றன. இன்னும் எத்தனையோ மோசமான பிரச்னைகள் நாட்டில் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் பிரச்னையைப் பற்றி மட்டும் ஆட்சியாளர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்? மேலும், முத்தலாக் பிரச்னையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்தச் சட்டம் உதவப்போவது இல்லை என்பதுதான் யதார்த்தம். இஸ்லாமிய இளைஞர்களைப் பழிவாங்கவே இந்தச் சட்டம் பயன்படும்.

`பெண்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்' என்று தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவரான கண்ணகி பாக்கியநாதன் கூறியது பற்றி...

எந்த அர்த்தத்தில் அவர் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், சுய ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.

ஜெயலலிதா அரசுடன் ஒப்பிடும்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சிமீது பெரிய அளவுக்கு அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லையே!

இந்த ஆட்சிமீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த திலும், அந்த விவகாரத்தில் தமிழக அரசு எப்படி நடந்துகொண்டது என்பதிலும் மக்கள் எந்த அளவுக்குக் கோபத்துடன் இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு என்ற மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் தமிழக மக்கள் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கம் போன்ற நடவடிக்கைகளை தி.மு.க ஏன் முன்னெடுக்க வில்லை?

சாதிமறுப்பு திருமணத்தை ஊக்கு விப்பதற்காக கலைஞர் ஆட்சியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகத்தான் தமிழகத்தில் சாதிய ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளன. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், இதற்கு எதிராக மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

கவிஞர் சல்மா
கவிஞர் சல்மா

`30 சதவிகிதப் பெண்கள்தான் பெண்மைத் தன்மையுடன் இருக்கிறார்கள்' என்கிற ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆணாதிக்கச் சிந்தனைகொண்ட ஒருவரின் உளறல் இது. பெண்மை, ஆண்மை என்பதெல்லாம் சமூக ரீதியில் உருவாக்கப்பட்டவை. `பெண்கள் என்றால் குனிந்த தலை நிமிராமல் நடக்க வேண்டும்; ஆண் என்றால் வீரம்' என்பதெல்லாம் நம் சமூகத்தில் உருவாக்கிவைக்கப்பட்டுள்ளன கற்பிதங்களே.