பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“என் கட்சியிலும் வாரிசு அரசியலா?

கிருஷ்ணசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணசாமி

1930-ல் இருந்த இந்தியா இப்போது இல்லை. கல்வி, சுகாதாரம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறது.

ண மதிப்பிழப்பில் ஆரம்பித்து ஜி.எஸ்.டி., நீட், முத்தலாக், சிறப்பு அந்தஸ்து ரத்து, புதிய கல்விக் கொள்கை என அடுத்தடுத்து மத்திய பா.ஜ.க அரசின் அறிவிக்கப்படாத தமிழக கொ.ப.செ-வாக வலம் வருகிறார் `புதிய தமிழகம் கட்சி’யின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடு முழுக்க சாதி - மத மோதல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்தேன்...

‘`சாதி - மத மோதல்கள் அதிகரித்துவரும் இவ் வேளையில், பெரியார் - அம்பேத்கர் கொள்கைகளை இன்னும் வீரியமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய நீங்களே, அக்கொள்கைகள் காலாவதியாகி விட்டன என்று சொல்வது சரிதானா?’’

‘`இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்ட போதே சட்டரீதியாகத் தீண்டாமை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் நடை முறையில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை எனும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடரத்தான் செய்கின்றன. அவற்றை சட்டத்தின் துணை கொண்டு ஒழிக்கவேண்டும். அதை விடுத்து, எந்த ஒரு கொள்கைக்கும் யாராவது ஒருவரைக் கொண்டுவந்து இணைக்கும் போக்கு என்பது தவறானது. இந்திய அரசியல் சட்டம்தான் நமக்கெல்லாம் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, வேறு எந்தத் தனிப்பட்ட நபரும் அல்ல.’’

‘`சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமத்துவத்தை மலரவைக்க அம்பேத்கர் - பெரியார் கொள்கைகள் தேவையில்லை என்கிறீர்களா?’’

‘`ஏன் மீண்டும் அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளையே நினைக்கிறீர்கள்... ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக மாற்றத்துக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். இந்திய அளவிலான ஒரு பிரச்னைக்கு எதிராக இந்த இரண்டு தலைவர்கள் மட்டுமே போராடினார்கள் என்ற அடையாளத்தைக் கொடுப்பது தவறான போக்கு.

1930-ல் இருந்த இந்தியா இப்போது இல்லை. கல்வி, சுகாதாரம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறது. காலத்தால் நிகழ்ந்த இந்த மாற்றங்களைப்போல், தீண்டாமை ஒழிப்பும் நிகழ்த்தப்படும்! அம்பேத்கர், பெரியார் என இருபெரும் தலைவர்களும் அவரவர் காலகட்டத்தில் அவர்களால் முடிந்ததைச் செய்திருக்கிறார்கள். அந்தவகையில், ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற சட்ட வழிமுறையை முழுமையடையச் செய்வதற்கான போராட்டங்களை இப்போது நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்!’’

“காவல் நிலையம் எதிரிலேயே அம்பேத்கர் சிலை உடைப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதை அனைத்துக் கட்சிகளும் கண்டித்திருக்கின்றன. ஆனால், உங்கள் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்புக்குரலும் எழவில்லையே?’’

‘`உங்கள் கூட்டணி, எங்கள் கூட்டணி என்றெல்லாம் நான் பிரித்துப்பார்க்கவில்லை. எல்லோருக்குமே இதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது. 1967-க்கு முன்புவரை தமிழகத்தில் எத்தனை சிலைகள் உடைக்கப் பட்டிருக்கின்றன? அதன்பிறகுதானே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்திருக் கின்றன.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய தளகர்த்தர் ஒருவரது சிலையை உடைக்கிறோம் என்ற புரிதல் இல்லாதவர்கள் இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள். இந்தப் புரிதல்கூட இல்லாமல்போனதற்கு யார் காரணம்? தொடர்ச்சியாக இங்கே ஆட்சி செய்துவந்த திராவிடக் கட்சிகள்தானே...?

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், மக்கள் தொடர்பாளர்கள், அமைச்சர்களின் உதவியா ளர்கள் மற்றும் நிதியைக் கையாளக்கூடிய முக்கிய உயர் பதவிகளில் பட்டியலின மக்களை எவ்வளவு எண்ணிக்கையில் அமர்த்தினார்கள்? இதைக்கூடச் செய்யாத வர்கள் எப்படி சமூக நீதி பேசலாம்?

திராவிடக் கட்சிகள் பேசுகிற இட ஒதுக்கீடு என்பது ஏமாற்றுவேலை. இதனால் எந்தச் சமூகமும் முன்னேற்றமடையவில்லை. என்னைப் பொறுத்தவரையில், இட ஒதுக்கீடு என்பது கட்டாயம் தேவை. ஆனால், அதற்காக ‘எஸ்.சி’ என்ற முத்திரையைக் குத்தித்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.’’

“என் கட்சியிலும் வாரிசு அரசியலா?

‘`இட ஒதுக்கீட்டினால், எந்தச் சமூக முன்னேற்றமும் இல்லை என்று கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘உயர்சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டும் வலியுறுத்துவது ஏன்?’’

‘`பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கக்கூடிய மக்களைக்கூட வாக்கு வங்கிக்காக, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் என்றெல்லாம் மாற்றியமைத்து இட ஒதுக்கீட்டின் பலனைக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் சூழலில், வாக்கு வங்கிக்குப் பெரிதும் பலன் இல்லை என்ற நிலையில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான மக்களைக் கண்டு கொள்ளாமலேயே விட்டுவிட்டனர். எல்லாவற்றுக்குமே எதிர்வினை உண்டு. சுதந்திரம் அடைந்துவிட்ட இந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் குறிப்பிட்ட மக்களை, வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் புறந்தள்ளிவிட்டோம். இது சமூகத்தில் பல்வேறு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும் என்பதனாலேயே உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை நான் வரவேற்கிறேன்.’’

‘`உயர் சாதி ஏழைகளுக்கான வருமான வரம்பு ‘எட்டு லட்சம் ரூபாய்’ என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதே, இதன் உண்மையான நோக்கம் என்ன என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?’’

‘`எட்டு லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் நாங்கள் சொல்கிற ஒரே விடை... உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், எல்லோரையும் சாதி ரீதியாகக் கணக்கெடுத்து அவரவர் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போன்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது ஒன்றேதான்.’’

“என் கட்சியிலும் வாரிசு அரசியலா?

‘`தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் சாதியிலிருந்து நீக்கி, பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை மாநில அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க கண்டுகொள்ள வில்லையே?’’

‘`தொல்காப்பியக் காலத்திலிருந்து வயலும் வயல் சார்ந்த தொழிலுமாக மருத நிலத்தில் வாழ்ந்துவந்த மக்கள்தான் தேவேந்திர குல வேளாளர்கள். கால மாற்றத்தில் நிலவுடைமை இழந்து, கூலிகளாகிவிட்ட இம்மக்களை ஆதி திராவிடர் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் முத்திரை குத்திப் பட்டியலில் அடைத்து விட்டார்கள். ‘வேளாண் குடிமக்கள்’ என்ற தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க விரும்பும் இந்த மக்களின் உணர்வுகளை இங்குள்ள திராவிடக் கட்சிகள் புரிந்துகொள்ளவே இல்லை. முதன்முதலில், மத்திய பா.ஜ.க-தான் எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால், இங்கே உள்ள மாநில பா.ஜ.க-வினர் எங்கள் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வில்லை. சொல்லவேண்டிய இடத்தில் இருப்பவர் கள் சொன்னால்தான், செய்யவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் செய்வார்கள். அதே போல், தமிழக முதல்வரும், தேர்தல் வேலைகள் முடிந்தவுடன், தேவேந்திர குல வேளாளர் எனும் பெயர் மாற்றத்துக்கான அரசாணை வெளியிடப்படும் என்று உறுதியளித்திருந்தார். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்!’’

‘`வாரிசு அரசியலை மிகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டே, உங்கள் மகனைப் புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் ஆக்கியிருக்கிறீர்களே?’’

‘`நான் முதல் அமைச்சராக இருந்து, என் மகனைத் துணை முதல்வராக நியமித்தால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். அல்லது, நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பதவியில் ஏற்கெனவே இருப்பவரை நீக்கிவிட்டு என் மகனை அந்தப் பொறுப்புக்குக் கொண்டு வந்தாலும்கூடக் கேட்கலாம். என் மகன் படித்து முடித்துவிட்டு, கட்சி வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருகிறார், அவ்வளவுதான்!’’