லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

சும்மா பண்ணினோம்... சூப்பர் புகழ் பெற்றோம்!

இந்து கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்து கண்ணன்

அசத்தும் டிக்டாக் பெண்கள்

`டிக்டாக்' என்றதும் நாலு பேருக்கு நாலுவிதமான கருத்துகள் இருக்கும். ஆனால், அந்த நாலு பேரும் ஒரே விதமாகப் பாராட்டித் தள்ளும் டிக்டாக் பர்ஃபாமர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் நாலு விதங்களில் கலக்கியெடுக்கும் நால்வரைச் சந்தித்து பேசியதில்...

மஞ்சு
மஞ்சு

டிக்டாக்கின் லேடி மைக்கேல் ஜாக்சன்!

“என் பெயர் மஞ்சு. மஞ்சுன்னா மேகம், மேகம்னா கிளவுட். அதான் மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைல்ல தமிழ், ஆங்கிலம் இரண்டும் சேர்த்து மஞ்சு கிளவுடின்னு வெச்சுகிட்டேன். சின்ன வயசுல இருந்தே டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும். நல்லா ஆடவும் செய்வேன். குடும்ப விழாக்கள்ல ஆரம்பிச்சு ஊர் கோயில் திருவிழா வரைக்கும் ஸ்கூல் டைம்ல டான்ஸ் ஆடியிருக்கேன். சிலர் இப்பவும் என் உருவத்தைப் பார்த்து ஸ்கூல் பொண்ணுன்னுதான் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, என் வயசு 28. முக்கியமான விஷயம், எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. டிக்டாக் இன்ஸ்டால் செய்தப்ப என் கணவர், நண்பர்களோடு சேர்ந்து காமெடி வீடியோக்கள் பண்ணிட்டு இருந்தேன். ஒருகட்டத்துக்கு மேல அவங்க எல்லோரும் கடுப்பாகி, நடிக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. நாம மட்டும் தனியா என்ன பண்ணலாம்னு யோசிச்சபோதான், நம்ம பழைய திறமையை தூசு தட்டுவோம்னு டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். `பேட்ட’ படத்துல வர்ற `மாஸ் மரணம்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஒரு வீடியோ பண்ணினேன். அந்த வீடியோதான் என்னை டிக்டாக் பிரபலமாக்குச்சு. என் தலைவர் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்குற வாய்ப்பும் கிடைச்சது. என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணம் அது. சிலர், படம் வெளியான பிறகு நீங்க ஆடினதுதான் ஒரிஜினலைவிட நல்லாருந்ததுன்னு சொன்னாங்க. அதைத்தான் எனக்கு வந்த பெரிய பாராட்டா நினைக்கிறேன். திரைப்படங்கள், சீரியல்கள்ல நடிக்க கூப்பிடுறாங்க. நான்தான் இன்னும் எந்த ஆஃபருக்கும் டிக் பண்ணாமல், தொடர்ந்து டிக்டாக் பண்ணிட்டிருக்கேன்” என உற்சாகமாகப் பேசுகிறார் மஞ்சு கிளவுடி.

https://www.tiktok.com/@manjucloudy

பழைமையின் பெருமை போதிக்கும் நவயுக யுவதி!

“என் பெயர் லலிதாம்பிகை. கிருஷ்ணரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் டிக்டாக்ல லலிதா கிருஷ்ணன். புதுச்சேரி பொண்ணு நான். பரதநாட்டியத்தில் பட்டப்படிப்பு முடிச்சுருக்கேன். டிக்டாக் ஆரம்பிச்சப்போ, எல்லார் மாதிரியும் புதுப் பாடல்களுக்கு எக்ஸ்பிரஷன் கொடுக்குற வீடியோக்கள்தான் பண்ணிட்டிருந்தேன். என் அம்மாதான் `பழைய பாடல்களுக்கு டிக்டாக் பண்ணு’ன்னு ஐடியா கொடுத்தாங்க. சமீபத்துல 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தேன். 41,000 பேர் லைக் பண்ணியிருந்தாங்க. ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டு அம்மா!

லலிதாம்பிகை
லலிதாம்பிகை

பரதநாட்டியத்துல நவரச ஸ்பெஷலிஸ்ட் நான். அதனால், பழைய பாடல்கள் எனக்கு பக்காவா செட் ஆகிடுச்சு. 86 வீடியோக்கள்ல 10 லட்சம் லைக்ஸ் வாங்கிட்டேன். இதை எனக்குக் கிடைச்ச வெற்றியா பார்க்கலை... நம்ம பாரம்பர்யமான விஷயங்களுக்குக் கிடைச்ச வெற்றிதான் இது. என் போன்ற இளைய தலைமுறைகிட்ட பழசு, அதன் அருமை, அழகை, அற்புதத்தை மறுபடியும்கொண்டு போய் சேர்க்கணும்கிறதுதான் என் ஆசை. அதை சரியா பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்.

எங்கம்மா மாலதி செல்வத்துக்கு கலை, கலாசாரம் மேல ஈடுபாடு அதிகம். அவங்ககிட்டே இருந்துதான் எனக்கும் நம் கலை, கலாசாரம் மேல் ஆர்வம் வந்ததுன்னு சொல்லலாம். அம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வாங்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா, அது இதுவரை நிறைவேறலை. நான் பத்மஸ்ரீ விருது வாங்கி, அதை அம்மா கையில் கொடுக்கணும். அதுதான் என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே.

சினிமா வாய்ப்புகள் நிறைய வருது. சிறப்பான வாய்ப்புக்காகக் காத்திருக்கேன்” எனப் புன்னகைக்கிறார் லலிதா.

https://www.tiktok.com/@lalithakrishna0

அப்போ பர்ஃபாமர்... இப்போ இன்புளுயன்ஸர்!

“என் செல்லப்பெயர் இந்து, அப்பா பெயர் கண்ணன். இரண்டும் சேர்த்து இந்து கண்ணன். வயசு ஜஸ்ட் 20-தான் ப்ரோ. பிறந்தது தேனி. வளர்ந்ததெல்லாம் சென்னையில். பி.எஸ்ஸி கணிதம் படிச்ச வேலையில்லா பட்டதாரி. எல்லார் மாதிரியும்தான் ஜாலியா பண்ண ஆரம்பிச்சேன். அப்படி இப்படி எப்படியோ பிரபலமாகிட்டேன். `மாமா உன்னைக் கூப்பிடத்தான் மனசு சொல்லுதே'ன்னு ஒரு பாட்டுக்கு டிக்டாக் பண்ணினேன். அதுதான் என்னை எல்லோர் மனசுலேயும் கொண்டு சேர்த்தது. ஆரம்பத்துல `இதெல்லாம் எதுக்குப் பண்ணிட்டு இருக்கே'ன்னு வீட்ல திட்டினாங்கதான். அப்புறம், நான் டீசன்டாதான் வீடியோ பண்ணுவேன். இரட்டை அர்த்த வசனங்கள்கூட பேசினது கிடையாது.

இந்து கண்ணன்
இந்து கண்ணன்

வெளியூர் எங்கேயாவது போகும்போது சிலர் என்னை கரெக்டா கண்டுபிடிச்சு, ‘நீங்க டிக்டாக் இந்து கண்ணன்தானே’ன்னு முகம் நிறைய சிரிப்போட கேட்பாங்க. அதெல்லாம் பார்த்துட்டு வீட்ல புரிஞ்சுகிட்டாங்க, சப்போர்ட் பண்ண தொடங்கிட்டாங்க. முன்னாடி ஜாலியா பண்ணிட்டிருந்த டிக்டாக், இப்போ எனக்கு பகுதிநேர வேலையாகிடுச்சு. `அடிக்ட் ஆகிட்டாளோ’ன்னு பயப்படாதீங்க. புது சினிமாக்களை டிக்டாக், ஷேர்சாட், லைக் மாதிரியான ஆப்கள்ல புரொமோட் பண்ற வேலைகளைப் பார்த்துட்டிருக்கேன். அதாவது, ஐஎம் ஆன் இன்ஃபுளுயன்ஸர், யு நோ! சினிமாவில் நடிக்கக் கேட்டு, சில வாய்ப்புகளும் வந்தது. நான்தான் இப்போதைக்கு எதுவும் வேண்டாம்னு இருக்கேன்” என்கிறார் டிக்டாக் பர்ஃபாமர், மன்னிச்சூ... இன்ஃபுளுயன்ஸர் இந்து கண்ணன்!

https://vm.tiktok.com/fcVsKm

மில்லினியல் கீதங்களை டிக்டாக்கி கலக்கும் 40’ஸ் கிட்!

“என் பெயர் ராஜாமணி. வயசு வெறும் 72 தான். ஸ்கூல் டீச்சரா இருந்தேன். எங்களோடது காதல் திருமணம். கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். எனக்கு ஒரே ஒரு பொண்ணு. அவளுக்கு ரெண்டு பசங்க. என்னுடைய பேரனுங்கதான் என்னுடைய உலகம். டிக்டாக்ல தனியா பர்ஃபார்ம் பண்ணிட்டு இருந்த என் பேரன், ஒருநாள்...`வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல ‘ஆமாப்பே... ஒரு கோடிப்பே’னு ஒரு வசனம் வருமே, அந்த வசனத்தை பேசிக்கொடுக்கச் சொன்னான். அதுக்கு செம வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து வீடியோ பண்ண ஆரம்பிச்சோம். நான் டிக்டாக் பண்றது என் சொந்தபந்தங்களில் சிலருக்குப் பிடிக்கலை. ஆனால், என் பேரனுக்கு பிடிச்சுருக்கே! அவன் சந்தோஷத்துக்காக நான் பண்றேன்.

ராஜாமணி
ராஜாமணி

முதுமைங்கிறது பழைய நினைவுகளை அசைப்போடுறதுக்கான பருவம். ஆனா, அதுக்குள்ளே என்னை சுருக்கிக்காம இப்படி வீடியோக்கள் பண்றது எனக்கும் சந்தோஷம் தருது. வெளிநாடுகள்ல இருந்து எத்தனையோ பேர் போன்ல, கமென்ட்ல, மெயில்ல பாராட்டுறாங்க. என் பேரனைப் பார்த்து `இப்படி ஒரு பாட்டி கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும்’னு சொல்றாங்க. இதைவிட வேற என்ன வேணும் எனக்கு! ஸ்கூல் படிக்குற சின்னக்குழந்தைங்க என்னைப் பார்த்து `டிக்டாக் பாட்டி'ன்னு ஆசையா வந்து பேசுறாங்க. வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆனதுக்குப் பிறகு, குழந்தைங்களை மறுபடியும் என்னை நோக்கி வரவெச்சது இந்த டிக்டாக்தான். என்ன, அப்போ நான் டீச்சர். இப்போ டிக்டாக் பாட்டி, அவ்வளவுதானே!

முன்னாடி, என் குடும்பம் மட்டும்தான் என் உலகமா இருந்தது. இப்போ என்னை ரசிக்குற ஒவ்வொருத்தரும் என் குடும்பத்து ஆளுகதான். ஒரு காலத்துல, `உள்ளங்கையில் உலகம்’னு பாடம் சொல்லிக்கொடுத்தேன். நம்ம உள்ளங்கையில் இருக்கும் செல்போன் மூலமா என்னுடைய உலகம் விரிவடைஞ்சுருக்குன்னுதான் சொல்லணும். எல்லாப் புகழும் என் பேரனுக்கே” எனப் பேரனின் கன்னத்தில் அன்பு முத்தம் பொழிகிறார் ராஜாமணி என்கிற டிக்டாக் பாட்டி!

https://vm.tiktok.com/fcnHL3