
கொரோனாச் சூழலில் திருநங்கைகளுக்காகப் பல்வேறு செயல்திட்டங்களோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஸ்வாதி பிதான் பரூவாவிடம் உரையாடினேன்.
அடிப்படை அங்கீகாரத்துக்காகவும், அடையாளத்துக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள். 2014-ம் ஆண்டு, திருநர் சமூகத்தை மூன்றாம் பாலினத்தவர் என அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். சட்டம் அவர்களின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனாலும், சமூகம் இன்னும் அங்கீகரிக் கவில்லை. அதற்காகப் போராடுகிறார் அசாம் மாநிலத்தைச் சார்ந்த ஸ்வாதி பிதான் பரூவா. லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்வாதி, பிறகு அப்பொறுப்பிலிருந்து விலகி இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் (Airports Authority of India, AAI) வழக்கறிஞராகச் செயல்பட்டுவருகிறார்.

கொரோனாச் சூழலில் திருநங்கைகளுக்காகப் பல்வேறு செயல்திட்டங்களோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஸ்வாதி பிதான் பரூவாவிடம் உரையாடினேன்.
“பதின்பருவத்தில்தான் நான் ஆண் உடலில் அடைபட்டிருக்கும் ஒரு பெண் என உணர்ந்தேன். அத்தையின் கிரீம் முழுக்க முகத்தில் தடவி ஓரிரவில் அதைத் தீர்த்தது, சகோதரியின் உடையைத் திருட்டுத்தனமாக அணிந்து பார்த்து என் பெண்மையை ரசித்தது எனக் கனவுகளின் காலம் அது. பள்ளிப்பருவத்திலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை பற்றியும், திருநங்கைகள் பற்றியும் நிறைய படித்துத் தெரிந்துகொண்டேன். பள்ளி செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அறுவை சிகிச்சைக்காகப் பகுதிநேர வேலை செய்து சிறுக சிறுக பணம் சேர்த்தேன். எனக்கு 21 வயது ஆனபோது ஒரு நாள் அம்மாவிடம் லேப்டாப் ரிப்பேர் செய்யப் போகிறேன் எனப் பொய் சொல்லிவிட்டு, ஒரே ஒரு கைப்பையுடன் மும்பை சென்றுவிட்டேன்.

அறுவை சிகிச்சைக்குத் தேதியெல்லாம் முடிவு செய்தாகிவிட்டது. கனவுகளோடு காத்திருந்த எனக்குப் பேரிடியாய் ஒரு செய்தி வந்தது. நண்பர் என நினைத்தவர் எனக்குத் துரோகியாகி, அவர் மூலம் என் பெற்றோர் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டனர். எனக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனைக்கு, ‘என் மகனுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யக் கூடாது’ என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
நீதிமன்ற அனுமதியில்லாமல் சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் மறுத்துவிட்டார்கள். அறிமுகமில்லாத ஊர், தெரியாத முகங்கள், பரிச்சயமில்லாத வாழ்க்கைமுறை என மும்பை மிகவும் பயமுறுத்தியது. ஆனால் என் பெண்மையை உடல் ரீதியாகவும் முழுமையாக்கும் அந்த அறுவை சிகிச்சை எனக்கு முக்கியம். தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன். வாழ்க்கைக்குச் சேர்த்துவைத்த பணமெல்லாம் இந்த வழக்கிற்குச் செலவு செய்வது என முடிவு செய்து ஒரு வழக்கறிஞரை அணுகினேன்.

ஆறு மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ‘18 வயது நிரம்பிய ஒரு நபர், தன் உடல்குறித்த முடிவுகளைத் தானே எடுக்கலாம், அதற்குப் பெற்றோர் சம்மதம் தேவையில்லை’ எனத் தீர்ப்பு வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம். திருநங்கைகளின் உரிமைகளுக் கான முதல் சட்டபூர்வமான வெற்றி இது.”
“ஏன் சட்டப்படிப்பைத் தேர்வு செய்தீர்கள்?”
“என் உரிமைகளை மீட்டுத் தந்தது சட்டம்தான். என்னைப் போன்ற திருநங்கை களுக்கு சட்டம்தான் பாதுகாப்பு. அதனால் சட்டம் படிப்பது என்று முடிவு செய்தேன். என் பெற்றோர் என்னை ஏற்றுக்கொண்டு உறுதுணையாக நின்றபிறகு கவுஹாத்தி சட்டக்கல்லூரியில் இணைந்தேன். வழக்கறிஞர் ஆனதும் அரசு எனக்களித்த பெரும் அங்கீகாரம்தான் லோக் அதாலத் நீதிபதி பதவி.

அந்த அங்கீகாரம் பெருமையாக இருந்தாலும், அது நீடிக்க ஏதுவான சூழல் இல்லை. லோக் அதாலத் நீதிபதிக்கு அரசு அளிக்கும் மாதாந்திர மானியம் வெறும் 1000 ரூபாய் மட்டுமே. அது என் வாழ்க்கைத் தேவைக்குப் போதுமானதாக இல்லை. அதனால் அப்பணியிலிருந்து விலகி, தனியாக வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கிறேன்.”
“ஒரு திருநங்கையாக பணிச்சூழலில் எந்தமாதிரி நெருக்கடிகளை எதிர்கொள்கிறீர்கள்?”
“நம் சமூகத்தில் திருநங்கைகள் பற்றிய புரிதல் மிகவும் குறைவு. படித்தவர், படிக்காதவர் என யாருமே இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒருமுறை, திருநங்கைகளின் உரிமைக்காக ஒரு வழக்கில் நான் ஆஜராகியிருந்தேன். அப்போது மாவட்ட நீதிபதி, என்னைச் சங்கடப்படுத்துவதற்காகவே ஒரு கேள்வி கேட்டார். “ஒரு திருநங்கை ஆணுடன் எப்படி உடலுறவு வைத்துக்கொள்ளமுடியும்?” என்பதே அந்தக் கேள்வி. வழக்கிற்காக அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றத்தில் அதை அவர் கேட்ட விதமும் பார்வையும் என்னை மிகவும் பாதித்தது. அவசியமில்லாத அந்தக் கேள்வி அவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் நபரிடம் இருந்து வந்தது என்னை மிகவும் வருந்தச் செய்தது. இது மாதிரி நிறைய... பொதுவாழ்வில், திருநங்கைகளுக்கான முழு அங்கீகாரமும் சுதந்திரமும் தேவை. அதற்கு அரசு முதலில் எங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். திருநங்கைகள் மசோதா-2019, அடிப்படை விஷயங்களில் தவறாக இருக்கிறது. இந்த மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.”

“கொரோனாச் சூழல் திருநங்கைகளின் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது?”
“கொரோனாவும், லாக்டௌனும் ஒட்டுமொத்த மக்களுக்கும் சவாலானதாகத்தான் இருந்தது. சாதாரண நாள்களிலேயே அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் திருநங்கைகளின் நிலை இன்னும் கடினமாகியிருக்கிறது. உணவு, இருப்பிடம் என எல்லாமே அவர்களுக்குக் கேள்விக்குறியாகிவிட்டது. அவர்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பையேனும் தரவேண்டும் என்பதற்காக அசாம் மாநில அரசோடு இணைந்து, ‘த்ரிதியோ நிவாஸ்’ என்ற விடுதியைத் தொடங்கியிருக்கிறோம். திருநங்கைகளுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் முதல் முழுநேர விடுதி இதுதான். உணவு, தங்குமிடத்தோடு தொழிற்பயிற்சியும் இங்கு வழங்கப்படுகிறது.”