சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்!” - இரா.முருகவேள்

இரா.முருகவேள்
பிரீமியம் ஸ்டோரி
News
இரா.முருகவேள்

எழுத்து

சுற்றுச்சூழலும் பொருளாதாரமும்தான் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் சவாலாக மாறியிருக்கின்றன. இவை குறித்து தொடர்ந்து எழுதிவருபவர்களில் இரா.முருகவேள் முக்கியமானவர். வழக்கறிஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர் என அனுதினமும் பம்பரமாகச் சுற்றிவருபவரை ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்…

``எழுத்துப் பயணம் எங்கிருந்து ஆரம்பித்தது?’’

``அப்பா, அம்மா இருவருமே தீவிரமாக வாசிப்பவர்கள். அப்பா தமிழ்ப் பற்றாளர் என்பதால், அவருடைய படிப்பு ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். அம்மா கமர்ஷியல் எழுத்துக்களைத்தான் விரும்பிப் படிப்பார். அப்பா, என் வயதுக்கேற்ற புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார். கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்புமேல் ஈர்ப்பு வந்துவிட்டது. ரஷ்ய இலக்கியங்களின் அறிமுகம் கிடைத்த பிறகு, என் வாசிப்பு வேறொரு தளத்துக்கு மாறியது. வாசிப்புப் பழக்கம் இருப்பவர்கள் சுலபமாக எழுதிவிடுவார்கள். நானும் அப்படித்தான். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கதைகளும் கட்டுரைகளும் எழுதினேன். இப்போது மொழிபெயர்ப்பு, நாவல்கள் என்று என் எழுத்துப் பயணம் தொடர்கிறது.’’

“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்!” - இரா.முருகவேள்

``முதல் புத்தகம் எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?’’

``வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்த பிறகு, ஏழெட்டு ஆண்டுகளாக என்னால் எழுத முடியவில்லை. தொழிலில் கவனம் செலுத்த வேண்டிய சூழல். வேலை இல்லாத நேரங்களில் மேற்குத்தொடர்ச்சி மலை ஓரமாகவும், நொய்யல் ஓரமாகவும் பைக் ரைடு செல்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி ஒரு சமயத்தில் நொய்யல் ஓரத்தில் பழைய கல்வெட்டுகளைப் பார்த்தேன். அவற்றைப் பற்றித் தெரிந்துள்ள ஆர்வம் வந்தது. விசாரித்தால், யாருக்கும் அது குறித்தத் தகவல் தெரியவில்லை. `கோவைக் கிழார் புத்தகங்களைப் படிங்க. ஒரு ஐடியா கிடைக்கும்' என்று நண்பர்கள் சொன்னார்கள். அவற்றைப் படித்த பிறகுதான் கோவையின் நீர்ப்பாசன முறை பற்றியெல்லாம் ஒரு தெளிவு வந்தது. அதை மக்களுக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

எனக்கு சினிமாமீது ஆர்வம் என்பதால், நொய்யல் பற்றி ஆவணப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தேன். அப்போது அதற்கான பொருளாதாரம் என்னிடம் இல்லை. பணம் முதலீடு செய்ய ஒரு வழக்கறிஞரை கூட்டுச் சேர்த்தேன். ஷூட்டிங் முடித்து, எடிட்டிங் வேலைகளையும் பாதி முடித்துவிட்டேன். முழுதாக எடிட் செய்வதற்குள் பணம் முதலீடு செய்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்குத் தெரியாமல் கன்னாபின்னாவென எடிட் செய்து, அதை வெளியிட்டுவிட்டார். கடும் கோபத்தில் தள்ளுமுள்ளுவரை ஆகிவிட்டது. `உழைப்பெல்லாம் வீணாகப் போய்விட்டதே' என்று வெறுப்பில் சுற்றிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் விடியல் பதிப்பகத்தின் சிவா, `ஏன் இப்படி வீணாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறாய்... உருப்படியாக ஏதாவது செய்யலாமே’ என்று கேட்டார். `இன்னொரு டாக்குமென்டரி எடுக்கப்போகிறேன்’ என அவரிடம் சொன்னேன். `அதெல்லாம் உருப்படாத வேலை. திரும்பவும் இன்னொருவரிடம் சிக்கி அவஸ்தைப் படாதே’ என்று அன்போடு எச்சரித்தவர், `புத்தக மொழிபெயர்ப்பு செய்’ என்று அக்கறையோடு சொன்னார். மொழிபெயர்ப்புமேல் எனக்கும் ஈடுபாடு இருந்ததால், ஓகே சொல்லிவிட்டேன். லைப்ரரிக்கு அழைத்துக்கொண்டு போனார். சுமார் பத்தாயிரம் புத்தகங்கள்... எல்லாம் குண்டு குண்டாக இருந்தன. ரொம்ப நேரம் தேடி, ஜான் பெர்க்கின்ஸின் `பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூல’த்தை செலக்ட் செய்தேன். `ஏன் இதை செலக்ட் பண்ணீறீங்க?’ என்று சிவா கேட்டார், `என் இயல்புக்கு இதுதான் செட் ஆகும்னு தோணுது’ என்று சொன்னேன். சிவாவும் ஓகே சொல்லிவிட்டார். பாதி எழுதி, என் மனைவியிடம் காட்டினேன். அவர் படித்துவிட்டு, `ஒண்ணுமே புரியலை. என்று சொல்லிவிட்டார். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு எழுதியதால் என் தமிழ் அவ்வளவு மோசமாக இருந்திருக்கும்போல. திரும்பவும் உட்கார்ந்து முதலில் இருந்து எழுதினேன். `பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்' வெளியாகி, இவ்வளவு ஹிட் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை. என்னுடைய எல்லாப் புத்தங்களுக்கும் என் மனைவியும் இரண்டு மகள்களும்தான் முதல் வாசகர்கள். என் மனைவி தமிழ் படித்தவர். அவர்தான் பிழை திருத்துவார்.’’

இரா.முருகவேள்
இரா.முருகவேள்

``மொழிபெயர்ப்பை விட்டுவிட்டு, நாவல் எழுத ஆரம்பித்த காரணம்?’’

``தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்துகொண்டே இருப்பத்தில் எனக்கு விருப்பமில்லை. மொழிபெயர்ப்பு செய்ய நிறைய பேர் உண்டு. `எனக்கு மட்டுமே அறிமுகமான சில விஷயங்களை எல்லாம் எழுத வேண்டும்' என்று தோன்றியது. `நாவலில் வரலாறு, பொருளாதாரத்தைப் பற்றியெல்லாம் இணைத்துப் பேசலாம்’ என்பதற்காகத்தான் இதற்கு வந்தேன். நாவலில் உள்ள வசதி என்னவென்றால், அதில் வரும் எந்த கேரக்டரையும் நம் தேவைக்கு மாற்றிக்கொள்ளலாம். `நொய்யல்’ டாக்குமென்டரியின்போது கிடைத்த அனுபவங்களை வைத்து `மிளிர்கல்’ எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு. பிறகு `முகிலினி’, `செம்புலம்’, என நாவல் பயணம் தொடர்கிறது.’’

``வழக்கறிஞர் வேலைகளுக்கு மத்தியில் எழுதுவதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?’’

``நான் ரொம்பக் கற்பனையாக எழுதுவதில்லை. நான் கேட்ட, பார்த்த மனிதர்களின் வாழ்க்கையைத்தான் எழுதுகிறேன். அதனால், எனக்குப் பெரிய சிக்கல் இல்லை. வழக்கறிஞராக இருப்பது ஒருவகையில் ப்ளஸ்தான். நினைத்த நேரத்துக்கு எழுத முடிகிறது. ஆனால், ரொம்பச் சுலபம் என்றும் சொல்லிட முடியாது. இரண்டு குதிரைகளில் சவாரி செய்யும் கதைதான்.

எழுத ஆரம்பித்த பிறகு எல்லாவற்றையும் கவனித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எதையும் விளையாட்டாகப் பார்த்துவிட்டுப் போய்விட முடிவதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், எழுத்து என்னை வேலை வாங்குகிறது.’’

``உங்கள் எழுத்துகள் சுற்றுச்சூழல், பொருளாதாரம், உழைக்கும் வர்க்கத்தை மையப்படுத்தியே இருப்பதற்கு என்ன காரணம்?’’

``அதற்கு நான் சார்ந்திருக்கும் இயக்கம் மிக முக்கியக் காரணம். மார்க்சியக் கல்வி எல்லாவற்றையும் முழுதாகப் பார்க்கச் சொல்லித் தருகிறது. சுற்றுச்சூழல் அழிகிறது என்றால், ஒரு சுற்றுச்சூழல் போராளி உயிரைக்கூடக் கொடுக்கத் தயாராக இருப்பார். ஒரு மரத்தை வெட்டுகிறார்கள் என்றால், `என் உயிரைக்கூட எடுத்துக்கோங்க, மரத்தை வெட்டாதீங்க’ என வந்து போராடுவார். ஆனா, `பத்துப் பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. போராட வாங்க’ என்றால், `அது என்னோட வேலை இல்லை’ என்பார். இப்படிப் போராட்டங்கள் தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்துகிடக்கின்றன. ஒரு தொழிற்சாலையால் பவானி ஆறு அழிகிறது என்றால், `அந்தத் தொழிற்சாலை எதற்காக இங்கே வந்தது... அதை அனுமதித்தவரின் நோக்கம் இந்த ஆற்றைச் சீரழிப்பதுதானா…’ என இப்படி அதைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதனுடைய பின்னணியும் அரசியலும் நமக்குப் பிடிபடும். நானும் அதைத்தான் முயற்சி செய்கிறேன். பொருளாதாரம் இல்லாத ஒரு சுற்றுச்சூழல் இருக்க முடியாது.’’

``உங்கள் எழுத்து அநியாயங்களுக்கு எதிரான குரலாக இருக்கிறது. ஒரு வழக்கறிஞராக, தவறு செய்தவர்களுக்காகவும் வாதாட வேண்டியிருக்குமே… எதிரெதிர் துருவங்களில் எப்படி இயங்குகிறீர்கள்?’’

``வழக்கறிஞர்களின் விழுமியங்கள் வேறு என்பதால், எனக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும், பாலியல் வழக்குகளில் ஆஜராவது இல்லை என்பது என்னுடைய கொள்கை முடிவு. கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஆதிவாசிகளுக்காக நான் ஆஜராகியிருக்கிறேன். அவர்கள் அதைச் செய்திருக்கலாம், செய்யாமலும் இருந்திருக்கலாம்.ஆனால், அவர்களுக்காக நான் ஆஜரானேன். அதில் எனக்குக் கடுகளவும் குற்ற உணர்ச்சி இல்லை. ஏனெனில், அவர்களுக்காக நான் ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு வேறு வக்கீல் இல்லை. அதில் `எஸ் ஆர் நோ' என்று பார்க்க முடியாது. `நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்' என ஒரு நியாயம் இருக்கிறது. `அவர்களை அந்த நிலைக்குத் தள்ளியது யார்' என்று பார்க்க வேண்டும். அவர்களிடமிருந்து காட்டைப் பிரிக்காமல் இருந்திருந்தால், ஏன் கஞ்சா விற்கப் போகிறார்கள்?’’

``இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?’’

``தமிழ்ச் சமூகம்போல எழுத்தாளனைக் கொண்டாடிய ஒரு சமூகம் கிடையாது. இன்றைய எழுத்து, மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. `என்னுடைய தளத்திலிருந்து நான் எழுதுகிறேன்' என்று சொன்னால், உன்னைக் காப்பாற்றும் பொறுப்பைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. ஒன்று, மக்களுக்காக எழுத வேண்டும் அல்லது மக்களை மகிழ்விக்க வேண்டும். இல்லையென்றால், எழுத்தாளரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.’’