
இலக்கியம்
80-களில் தமிழின் தனித்துவமான படைப்பாளிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், வண்ணநிலவன். இவருடைய `கடல்புரத்தில்’, `ரெயினீஸ் ஐயர் தெரு’ இரு நாவல்களும் வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. சிறுகதைகளில் தனக்கென அழுத்தமான தனி பாணியை வகுத்துக்கொண்டவர். பத்திரிகைப் பணி, கூடவே படைப்பு என இன்றைக்கும் எழுத்தில் வலம்வருகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் வண்ணநிலவனை சந்தித்துப் பேசினோம். அதிராத குரலில், எளிய வார்த்தைகளில் அவர் பகிர்ந்துகொண்டவை...
``தாமிரபரணி, உங்கள் குடும்பம் பற்றி...’’
``நாங்கள்லாம் ஆற்றங்கரை மனிதர்கள். வளர்ந்ததெல்லாமே தாமிரபரணி ஆற்றங்கரை ஓரமாகத்தான். பிறந்தது தாதன்குளம் என்ற கிராமம். ஒரு காலத்தில் அங்கே நஞ்சை நிலம், வீடுன்னு சொத்தெல்லாம் இருந்தது. அப்புறம் அதையெல்லாம் வித்துட்டு திருநெல்வேலிக்கு வந்துட்டோம். நான் படிச்சது, தங்கைகள் பிறந்ததெல்லாமே திருநெல்வேலியில்தான். நான்தான் மூத்தவன். எனக்குப் பிறகு மூன்று தங்கைகள்.’’
``வண்ணதாசன், கலாப்ரியா இருவரும் உங்கள் கூடவே வளர்ந்த நண்பர்கள்தானே..?’’
``என் கூடவே வளர்ந்தவர்கள்னு சொல்ல முடியாது. மூணு பேரும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம்... ஷாஃப்டர் ஹை ஸ்கூல். ஆனா, ஒருத்தருக்கொருத்தர் யாருன்னே அப்போ தெரியாது. அந்த ஸ்கூலுக்கு வெஸ்டர்ன், ஈஸ்டர்ன்னு ரெண்டு பிராஞ்ச் இருந்தது. நாங்க ஈஸ்டர்ன் பிராஞ்ச்லதான் படிச்சோம். பின்னாள்களில் இலக்கியத்துல ஆர்வம், செயல்பாடுன்னு வந்தப்போதான் மூணு பேரும் ஒரு வருஷ, ரெண்டு வருஷ வித்தியாசத்துல அங்கே படிச்சது தெரியும். ஒருமுறை வண்ணதாசனோட சிறுகதை ஒண்ணு `தீபம்’ பத்திரிகையில வெளியாகியிருந்தது. அதைப் படிச்சேன். வல்லிக்கண்ணன், கவிஞர் விக்ரமாதித்யன் மூலமா எனக்கு வண்ணதாசன் முகவரி கிடைச்சது. அவரை அடிக்கடி பார்ப்பேன். அவர் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் கலாப்ரியா வீடு. அப்படியே நாங்க நண்பர்களாகிட்டோம். இது நடந்தது 1970-கள்ல. அதுலேருந்து நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.’’

``அண்மையில் நீங்கள் பெற்ற கொடிசியா வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து...’’
``இந்த விருதை நான்கு வருடங்களாகக் கொடுக்கிறாங்க. முதல்ல பாலகுமாரனுக்குக் கொடுத்தாங்க. அதற்கடுத்த ஆண்டு ஜெயமோகன் வாங்கினார். மூணாவதா எஸ்.ராமகிருஷ்ணனுக்குக் கொடுத்தாங்க. இந்த ஆண்டு நான் வாங்கியிருக்கேன். கடந்த ஜூலை 21-ம் தேதி கொடுத்தாங்க. அப்போ கொடிசியாவுல புத்தகக் கண்காட்சி நடந்துகிட்டிருந்தது. பத்து நாள்கள் கண்காட்சியில் தினம் ஒரு நிகழ்வு நடந்துகிட்டிருந்தது. அன்றைக்குக் காலை நிகழ்ச்சியில் வண்ணதாசன் பேசினார். எனக்கு விருது கொடுக்கும்போது கலாப்ரியா வாழ்த்திப் பேசினார். நண்பர்களோடு நடந்த நிகழ்வு மகிழ்ச்சியாக, நிறைவாக அமைந்துபோனது.’’
``விருதுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?’’
``ஒரு காலத்தில் எந்த விருதையும் வாங்கக் கூடாதுன்னு நினைச்சேன். `விளக்கு’ விருதை வேண்டாம்னு சொல்லிட்டேன். திருச்சியிலிருந்து ஒரு கிறித்தவ அமைப்பு விருது கொடுக்கறோம்னு சொன்னப்பவும் வாங்கலை. கமல்ஹாசன், அவரோட அம்மா ராஜலட்சுமி பேருல ஒரு விருது கொடுத்துக்கிட்டிருந்தார். அந்த அமைப்பிலிருந்து கேட்டப்பவும் வேண்டாம்னு தவிர்த்துட்டேன்.
என் மூத்த மகன் கோயம்புத்தூர் சி.ஐ.டி காலேஜ்ல சேர்றதுக்கு என் நண்பர் நஞ்சப்பன்னு ஒருத்தர் உதவி பண்ணினார். அவர் `வைகறை புத்தக வெளியீடு’ன்னு ஒண்ணு நடத்திக்கிட்டிருந்தார். கோயம்புத்தூர்லேருந்து கொஞ்சம் தூரத்துல இருக்குற ஊர்ல ஒரு ஸ்கூலும் நடத்தறார். அவர், வண்ணதாசனோட கடிதங்களைப் புத்தகமாகப் போடணும்னு நினைச்சார். நான், வண்ணதாசன், கலாப்ரியா, ரவிசுப்ரமணியன் நாலு பேரையும் அங்கே கூப்பிட்டிருந்தார். அப்போதான் அவரை நான் முதன் முதலா பார்த்தேன். வண்ணதாசன் கடிதங்கள் புத்தகமாகவும் வந்தது. அந்த நண்பர் அங்கே வாசகர் வட்டம் மாதிரி ஒரு கூட்டமும் நடத்திக்கிட்டிருந்தார். அதில் பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கந்தர்வன்லாம் வந்து பேசியிருக்காங்க. அவர் எனக்கு ரொம்ப நெருங்கின நண்பராகிட்டார்.
அப்போ புதுடெல்லியில் ஓர் அமைப்பு, `ராமகிருஷ்ண ஜெய் தயாள்’னு மனிதநேய விருதை, பல மொழிகள்ல சிறப்பா பங்களிப்பு செஞ்சவங்களுக்குக் கொடுத்துகிட்டு இருந்தாங்க. தமிழ்ல வலம்புரிஜான், அசோகமித்திரன்லாம் அந்த விருதை வாங்கியிருக்காங்க. 1997-ம் வருஷம் எனக்கு விருது கொடுக்க முடிவு பண்ணியிருந்தாங்க. வெங்கட்சாமிநாதன் என்கிட்ட போன் பண்ணிச் சொன்னார். நான், `சார்... விருதெல்லாம் வேண்டாம்’னு சொன்னேன். அவர், `நல்லா யோசிச்சுட்டுச் சொல்லுங்க’ன்னு சொல்லிட்டார். என் மனைவி, நஞ்சப்பனுக்கு போன் பண்ணி இந்த விஷயத்தைச் சொல்லிட்டாங்க. அவர் என்னைக் கூப்பிட்டு, `அவங்களா கூப்பிட்டு விருது கொடுக்குறாங்க, அதை ஏன் வேண்டாம்னு சொல்லணும்... அவங்க மனம் வருத்தப்படாதா?’ன்னு கேட்டார். அவர் எனக்குப் பல உதவிகள் செஞ்சவர். அவரோட வார்த்தைகளை என்னால தட்ட முடியலை. அந்த விருதை மட்டும் அவருக்காகப் போய் வாங்கும்படி ஆச்சு. அதுக்கு முன்னாடி `இலக்கிய சிந்தனை’ விருது என்னோட `கடல்புரத்தில்’ நாவலுக்குக் கொடுத்தாங்க. அப்போ எப்படியோ வாங்கிட்டேன். இடையில இந்த மாதிரி விருது வாங்கக் கூடாதுன்னு ஒரு மனநிலை. அதைக் கூச்சம்னுகூடச் சொல்லலாம்.’’
``எழுதுவதில் ஒரு நீண்ட இடைவெளி விட்டீர்களே... என்ன காரணம்?’’
``1976-ம் ஆண்டு `துக்ளக்’ல சேர்ந்தேன். அது முழுநேரப் பணியாக இருந்தது. அப்போ எனக்கு இன்சார்ஜா அனந்தகிருஷ்ணன்னு ஒருத்தர் இருந்தார். வெள்ளம், கலவரம், துப்பாக்கிச்சூடுன்னு முக்கியமான ரிப்போர்ட்டிங்குக்கெல்லாம் அவருதான் போவாரு. நான் வேலைக்குச் சேர்ந்த மூணாவது ஆண்டு அவரு வேலையை விட்டுப் போயிட்டார். அவர் செஞ்ச வேலையை நானும் இன்னொரு உதவி ஆசிரியரும் சேர்ந்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு இதழ் பணி முடிஞ்சதுமே அடுத்த இதழ் செய்தி சேகரிப்புக்காக வெளியூர் போக வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகமாகிடுச்சி. அதனால என்னால எழுத முடியலை. 1984-ம் ஆண்டுவரைக்கும் அந்த வேலைப்பளு இருந்தது. அதுக்கப்புறம் பத்திரிகைக்கு சரியான ஆட்கள் கிடைச்சாங்க. அந்த இடைவெளி விழுந்ததால, `டச் விட்டுப் போச்சு’ன்னு சொல்வாங்களே... எனக்கு எழுதுறதுல இடைவெளி விழுந்து போச்சு.’’
``கலாப்ரியாவை தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர்னு சொல்வாங்க. அவருக்கு இருந்தது மாதிரி உங்களுக்கும் சினிமாவுல ஈடுபாடு இருந்ததா?’’
``சினிமா பார்ப்பேன். ஆனா, யாரோட ஃபேனாகவும் இருந்ததில்லை. திருநெல்வேலியில கோயிலை விட்டா சினிமாதான் நேரப்போக்கு. தியேட்டர்ல எப்பவும் கூட்டமிருக்கும். தீபாவளி, பொங்கல் அன்னிக்கெல்லாம் டிக்கெட்டே கிடைக்காது. எல்லாப் படங்களும் பார்ப்பேன். ஸ்ரீதர் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.’’
``உங்களுடைய சிறுகதைகளில் ஒரு தனித்தன்மை இருக்கும். `மனைவியின் நண்பர்’ மாதிரியான பல கதைகளில் ஓர் அலாதியான நுட்பம் இருக்கும். இந்த வடிவம் உங்களுக்கு எப்படிக் கைவரப்பெற்றது?’’
``தமிழ்ல புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி போன்றவர்களின் படைப்புகளையெல்லாம் வாசிச்சிருக்கேன். வாசிச்சுட்டுதான் எழுத வந்தது. ஆரம்பத்துல எழுதின முதல் இரண்டு கதைகள்ல புதுமைப்பித்தனின் நடை பாதிப்பு அப்படியே இருக்கும். அப்புறம் புதுமைப்பித்தனோட பாதிப்புலேருந்து வெளியே வந்துட்டேன். பிறகு எழுத்துல சொந்தமா ஒரு நடை சேர்ந்தது. இதெல்லாம் நாமளேதான் உருவாக்கிக்கிறது. எழுத, எழுத வர்ற வடிவம். அதை, எப்படி வந்ததுன்னு சொல்ல முடியாது.’’
``நாவலோ, சிறுகதையோ எழுதி முடித்ததும் அதில் உங்களுக்கான அரசியல் வெளிப்பட்டிருக்கிறதா என்று சரிபார்ப்பீர்களா?’’
``அரசியல்னு ஒண்ணு இல்லை. ஜெயகாந்தன் நேரடியாகவே கம்யூனிஸ்ட்களோட தொடர்புல இருந்திருக்கார். கலாப்ரியா தி.மு.க அனுதாபியாக இருந்திருக்கார். வண்ணதாசன் எந்தக் கட்சியையும் சாராதவராகத்தான் இருந்திருக்கார். எனக்கும் எந்தக் கட்சி சார்பும் கிடையாது. கேட்டது, பார்த்ததைவெச்சு எழுதறோம். அவ்வளவுதான். பெண்ணியம், தலித்தியமெல்லாம் 90-கள்ல வந்தது. நான் கோட்பாடுகளின் அடிப்படையில் கதை எழுதறதில்லை. எனக்கு எந்த அரசியலும் கிடையாது. ஓட்டு போடும்போதுகூட அந்தந்த நேரத்துல எந்தக் கட்சிக்குப் போடணும்னு தோணுதோ, அந்தக் கட்சிக்குப் போட்டிருக்கேன். மார்க்ஸியம் படிச்சிருக்கேன். அவ்வளவுதான். துக்ளக்ல பணியாற்றியதால மற்ற கட்சிகளின் அரசியல் என்னன்னு தெரியும். ஆனா, என் கதைகள்ல எந்த அரசியலையும் நான் சொன்னது கிடையாது.’’
`` `அவள் அப்படித்தான்’ படத்தில் நீங்கள் வசனம் எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய சினிமா அனுபவம்...’’
``அந்தப் படத்தில் நான் பணியாற்ற நேர்ந்தது தற்செயலான விஷயம். பொதுவா, நிறைய படங்கள் பார்ப்பேன். சென்னைக்கு வந்த பிறகு நிறைய பிற மொழிப் படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆனா, சினிமாவுக்கு எப்படிக் கதை எழுதணும்கிறது எனக்குத் தெரியாது. திருநெல்வேலியில `கொடிக்கால் செல்லப்பா’ன்னு என் நண்பர் ஒருத்தர் இருந்தார். அவர் மலையாள இயக்குநர் பி.என்.மேனனோட நண்பர். செல்லப்பா தமிழ்ல ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டார். ஒரு கதையைச் சொன்னார். `இதுக்குத் திரைக்கதை எழுதுங்க’ன்னார். திருநெல்வேலியில ரெண்டு நாள் ரூமெல்லாம் போட்டுக் கொடுத்தார். ஆனா ஒண்ணும் வரலை. ருத்ரையா மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சவர். என் நண்பர். அவர் ரூம்லயே நான் தங்கியிருந்திருக்கேன். அவர் படம் பண்ணும்போது, `நீயும் எழுது’ன்னு சொன்னார். மூணு பேரு வசனம் எழுதியிருக்கோம். நான், அனந்து, சோமசுந்தரேஸ்வர்னு ஒருத்தர். வேலை இல்லாத காலத்துல பாலுமகேந்திராகூட வேலை பார்க்கலாம்னு முயற்சி பண்ணினேன். அவர் சொன்னார்... `இதெல்லாம் உங்களுக்கு முடியாது. எனக்கு ஒண்ணும் இல்லை. வர்றதா இருந்தா வாங்க’ன்னார். நான் ரெண்டு நாள் அவர்கிட்ட போய்ப் பார்த்தேன். சினிமாவுக்கான டிஸ்கஷனே சரியாகப் படலை. ரெண்டு, மூணு வாய்ப்புகள் வந்தும் நான் சினிமாவுக்கு ஏனோ போகலை. ஏவி.எம்மோட மருமகன் அருண் வீரப்பன், `அவள் அப்படித்தான்’ பார்த்துட்டு, `நீங்க ஒரு கதை குடுங்க... நாம படம் பண்ணுவோம்’னெல்லாம் சொன்னார். பேசுவோம். ஆனா, ஒண்ணும் நடக்கலை. எனக்கு சினிமாவுல ஆர்வமும் இல்லை. அதுக்காக முயற்சியும் செய்யலை.’’
``இது கேட்ஜெட்ஸ் காலம்... செல்போனிலேயே எல்லாவற்றையும் பார்த்துவிடலாம் என்கிற சூழல்... இனி தமிழ் இலக்கியம் எப்படி இருக்கும்?’’
``இத்தனைக்கும் மத்தியில் புத்தகங்கள் வந்துகிட்டுதானே இருக்கு? எழுத்தாளர் மௌனி, ஒரு பேட்டியில `தீபம், மணிக்கொடி போன்ற இதழ்களே 500 பிரதிகள்தான் வித்துது’ன்னு சொல்லியிருக்கார். அந்த நிலைமைதான் இப்பவும் இருக்கு. சிறு பத்திரிகைகள் அவ்வளவுதான் விக்குது. புத்தகங்களும் 500 பிரதிகள் போடுறாங்க. அதை நான்கு, ஐந்து வருடங்கள் வைத்திருந்து விற்கிறார்கள். அப்போ இருந்த நிலைமைதான் இப்பவும் இருக்கு. ஆனாலும் இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டுகிட்டுதான் இருக்காங்க.’’
``சோவுடனான உங்கள் அனுபவம் எப்படி?’’
``அவரோடு 13 ஆண்டுகள் வேலை பார்த்துட்டு இடையில் வெளியே வந்துட்டேன். மறுபடியும் அவரிடமே வேலைக்குப் போனேன். திரும்ப வெளியே வந்தேன். இப்படிப் பலமுறை நடந்திருக்கு. அதுக்காக அவர் என்னை எதுவும் சொன்னதில்லை. என் எழுத்து அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால என்மேல அவருக்கு ஓர் அன்பு இருந்தது. மத்தவங்க அப்படி வேலையை விட்டுட்டுப் போயிட்டுத் திரும்ப வந்தா ஏத்துக்க மாட்டார். ஒவ்வொரு வருஷமும் துக்ளக் ஆண்டுவிழாவில் வாசகர்களின் கேள்வி-பதில் மேடை நடக்கும். எந்தக் கேள்வியாக இருந்தாலும் கேலி, நையாண்டியோடு நகைச்சுவையாக பதில்கள் அவரிடமிருந்து வரும். அதுல விஷயமும் இருக்கும். அவருடைய இந்த அசாத்தியமான திறமை எனக்குப் பிடிக்கும். பழகுறதுக்கு ரொம்ப இனிமையானவர். மதியச் சாப்பாடு அவர் வீட்லேருந்துதான் வரும். ஆபீஸ்ல இருந்த நாலு பேரும் ஒண்ணா உட்காந்து சாப்பிடுவோம். `வண்ணநிலவன் என்ன வண்ணநிலவன்... உங்களை ராமச்சந்திரன்னுதான் கூப்பிடுவேன்’பாரு. அப்படித்தான் கூப்பிடுவார். அவருக்கு என்மேல அன்பு நிறைய. நான் வேலையை விட்டுட்டு வந்துட்டாலும், என் வீட்டுக் கல்யாணம், விசேஷங்களுக்கெல்லாம் வந்திருக்கார். நல்ல மனிதர், உயர்ந்த மனிதர்.’’

``புனைவில் அந்தந்தக்கால அரசியலும் சமூகமும் பிரதிபலிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்... இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’
``புனைவுல வாழ்க்கையைத்தானே எழுதறாங்க. மன்னன் வீதியில போறதை ஒளிஞ்சிருந்து பார்த்ததாக சங்க இலக்கியத்துல, முத்தொள்ளாயிரத்துல சொல்லியிருக்கு. அந்த அரசன் எப்படியிருந்தான், அவன் தோள்கள் எப்படி இருந்தன, அவன் நடை வேகம் எப்படி... எல்லாம் சொல்லப்பட்டிருக்கு. கோவலன், கண்ணகி, மாதவி வாழ்ந்த வாழ்க்கையைத்தானே சிலப்பதிகாரம் சொல்லுது. அதனால எல்லாமே எங்கேயோ இருந்து வரலை. சுற்றி நடக்குற வாழ்க்கையைத்தான் எழுத்தாளர்கள் சொல்றாங்க. ராமாயணமும் மகாபாரதமும் அப்படித்தான். நான் வாழ்ந்த சமூகத்தைப் பற்றித்தானே நான் சொல்ல முடியும்...’’
``திருநெல்வேலி நினைவுகள்...’’
``தமிழ்நாட்டில் தஞ்சை, மதுரை, கொங்குன்னு ஒவ்வொரு பகுதிக்கும் தனிக் கலாசாரம், அடையாளம் இருக்கு. பேச்சுவழக்கிலிருந்து உணவுமுறைவரை எல்லாத்துலயும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதே மாதிரி திருநெல்வேலிக்கும் ஓர் அடையாளம் இருக்கு. நான் பிறந்தது திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் மரபில். இதை சாதிக்காகச் சொல்லவில்லை. இந்தப் பிரிவினருக்கும் ஒரு காலத்தில் தனி அடையாளம் இருந்தது. உணவு சமைப்பதில் தொடங்கி, `இது இதை இப்படித்தான் செய்யணும்’னு ஒரு வரைமுறை இருந்தது. `சொதி’ன்னு தேங்காய்ப்பால்ல செய்வாங்க. அது ஸ்ரீலங்காவுல ஒரு முக்கிய உணவு. அதுக்கப்புறம் திருநெல்வேலிலதான் அதைச் செய்வாங்க.
என் பள்ளி நாள்கள்ல, பொங்கல் பண்டிகையின்போது வாசல்ல முற்றத்துலதான் பொங்கலிடுவோம். இப்போ மாதிரி ஸ்டவ்வெல்லாம் கிடையாது. அப்போ `அடுப்புக்கட்டி’ன்னு சொல்வோம். மண்ணுல செஞ்ச மூணும் மூணும் ஆறு அடுப்புக்கட்டி. அதில் தீயைவெச்சு, பொங்கலிடுவோம். இப்பவும் அங்கே அந்த மாதிரி பொங்கல் வைக்கிறவங்க இருக்காங்க. வீதி முழுக்க, எல்லா வாசலிலும் பெரிய பெரிய கோலம் போட்டிருப்பாங்க. கண்கொள்ளாக் காட்சி. எனக்கு தீபாவளியைவிடப் பொங்கல்தான் மனசுல நிறைஞ்சிருக்கு. தீபாவளியன்னிக்கி பசங்களோடு சினிமாவுக்குப் போறதுண்டு.
என்னோட தாத்தா, என்னை ஆத்துல குளிக்கவைக்கக் கூட்டிட்டுப் போனது இன்னும் ஞாபகத்துல இருக்கு. அப்போ அஞ்சு வயசு இருக்கும். தோள்ல தூக்கிட்டுப் போயி, என்னைக் கரையில நிக்கவெச்சு, அவரோட துண்டை ஆத்துத் தண்ணியில முக்கி, தண்ணியைக் கோரி என் தலையில விடுவாரு. `குழந்தை தண்ணிக்குள்ள இறங்கிட்டா எங்கே வழுக்கிடுமோ’ன்னு அப்படிச் செய்வாரு. வளர்ந்த பிறகு நாங்களே ஆத்துக்குப் போய்க் குளிக்க ஆரம்பிச்சோம். ஆற்றங்கரைகளில் சிறிய அல்லது பெரிய கோயில்கள் இருக்கும். அந்தச் சூழலே அருமையா இருக்கும். இப்போ அங்கே இருக்கும் ஆற்றுக்கும் நான் சொல்ற ஆற்றுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. நான் சொல்றது, பாழாக்கப்படாம இருந்த ஆறு.
திருநெல்வேலியில் திருவிழாக்கள் ரொம்ப விசேஷம். தேரோட்டம் பிரமாதமா இருக்கும். கோயில் சப்பரங்களே ரொம்ப பிரமாண்டமா, அழகா இருக்கும். அந்த மாதிரி பூ முதற்கொண்ட அலங்காரங்களை வேற எங்கேயும் பார்க்க முடியாது. ராத்திரி பத்து மணிக்கு சாமியை வெச்சுத் தூக்கிட்டுப் போற சப்பரத்துக்கு மதியத்துலேருந்தே அலங்காரம் நடக்கும்.
திருநெல்வேலியில காருக்குறிச்சி அருணாசலம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி கச்சேரியெல்லாம் கேட்டிருக்கேன். இதெல்லாம் கல்யாண வீடுகள்ல நடந்த கச்சேரிகள். இப்போ மாதிரி திருமண வீடுகள்ல ஆர்கெஸ்ட்ரா பாட்டெல்லாம் அப்போ கிடையாது. அப்போ சங்கீத சபாக்கள் இருந்தன. அங்கே பிரபல பாடகர்களெல்லாம் வந்து பாடியிருக்காங்க. திருநெல்வேலி நாள்கள் ரொம்ப இனிமையானவை. 24 வயசுலயே சென்னைக்கு வந்துட்டேன். அப்பப்போ போய் வந்துன்னு இருந்தாலும், திருநெல்வேலியோடு ரொம்ப நெருக்கமாக இருந்தது 24 ஆண்டுகள்தான்.’’
``சென்னை எப்படி இருந்தது, இருக்கிறது?’’
வேலைக்காகத்தான் சென்னைக்கு வந்தேன். `கண்ணதாசன்’ பத்திரிகையிலதான் முதல்ல வேலைக்குச் சேர்ந்தேன். சென்னையில பெரிய கஷ்டமெல்லாம் கிடையாது. வெயில் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். திரும்ப ஊருக்குப் போயிடணும்னு தோணிகிட்டே இருக்கும். என் மனைவிக்கு சென்னையிலேயே வேலை கிடைச்சது. இங்கேயே வீடு வாங்கிட்டோம். அதுக்கப்புறம் ஊருக்குப் போறதைப் பத்தி யோசிக்கவே முடியலை. திருநெல்வேலியில வாழ்ந்த நாள்களைவிட சென்னையில வாழ்ந்த நாள்கள்தான் அதிகம்.’’