
வயதில் மூத்த பெண்களை மட்டுமல்ல, தகுதியில் முன்னேறிய வயது குறைவான பெண்களையும் ‘அவங்க’ என்றே குறிப்பிடலாம். இதனால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடெல்லாம் ஏற்பட்டுவிடாது.
அஃறிணை, உயர்திணை பற்றிப் பள்ளிக்கூடத்திலேயே படித்திருந்தாலும், பெரும்பாலான ஆண்களுக்கு அவர்கள் வீட்டுப் பெண்கள் ‘அது’, ‘இது’தான். அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத பெண்களை, ‘அவ’, ‘இவ’ என்று ஏக வசனத்தில் பேசுகிற ஆண்களும் இங்கே மிக அதிகம். சரி, ஆண்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? மனநல மருத்துவர் ஷாலினி விளக்குகிறார்.

‘‘பெண்களை ‘அது’, ‘இது’ என்று குறிப்பிடும் ஆண்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர், பெண்களை ‘அவ’, ‘இவ’ என்று சொல்ல விரும்பாதவர்கள். பெண்களுக்குக் கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஆண்கள் இவர்கள். இதில் ஒரு சுவாரஸ்யமான முரண் என்னவென்றால், இவர்களைப் பொறுத்தவரை, பெண்களைக் குறிப்பிடும் ‘அவள்’ என்பதைவிட விலங்குகளைக் குறிப்பிடும் ‘அது’, ‘இது’ மேலானது. பெண்கள் குறித்த இவர்களுடைய வரிசை ‘அவள்’, ‘அது’, ‘அவங்க’ என்பதுதான்.
இரண்டாம் வகை ஆண்கள், ‘‘நான் ‘அவங்க’ என்று சொல்கிற அளவுக்கு அந்தப் பெண்ணுக்கு வயதில்லை அல்லது பொருளாதாரம், பதவி போன்ற அந்தஸ்தில் அவர் இல்லை. அதனால்தான், அஃறிணையாகக் குறிப்பிடுகிறேன்’’ என்பதில் தீர்மானமாக இருப்பார்கள்.
மூன்றாம் வகை ஆண்கள், ‘தாங்கள் பெரிய ஆள்’ என்பதைப் பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதன் மூலம் காட்டிக் கொள்பவர்கள்.

பேச்சளவில் மட்டும் பெண்ணுக்கு மரியாதை தருகிற சமூகம் நம்முடையது. நிஜ வாழ்வில், பெண்களுக்கு எதிரான எந்தச் செயல்களிலும் மாற்றம் செய்துகொள்ள மாட்டோம். தன் தவறுகளை உள்நோக்கிப் பார்க்காத, அவற்றைத் திருத்திக்கொள்ளாத சமுதாயம் சக மனுஷியை அஃறிணையாகத்தான் குறிப்பிடும்.
வயதில் மூத்த பெண்களை மட்டுமல்ல, தகுதியில் முன்னேறிய வயது குறைவான பெண்களையும் ‘அவங்க’ என்றே குறிப்பிடலாம். இதனால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடெல்லாம் ஏற்பட்டுவிடாது. ‘என் மனைவி சொன்னாங்க’ என்று வீட்டுக்குள்ளேயோ அல்லது பொதுவெளியிலோ சொன்னால், தன்னைப் பெண்டாட்டிக்கு பயந்தவன் என்று நினைத்துக்கொள்வார்களோ என்ற எண்ணத்தில், பல ஆண்கள் அஃறிணைக்கு மாறிவிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் சக பெண்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
உதாரணத்துக்கு, உடன்பிறந்த அக்கா, தங்கை அல்லது மனைவியை `அது’, `இது’ என்று பேசும் மகனை ‘பேரைச் சொல்லிக் கூப்பிடு’ என்று அம்மாக்கள் அறிவுறுத்தலாம். அடுத்த வீட்டுப் பெண்களை, உடன் வேலைபார்க்கிற பெண்களை மரியாதைக் குறைவாக ஓர் ஆண் பேசுகிறான் என்றால், அவன் வீட்டுப் பெண்கள் அவனைச் சரிசெய்ய முயற்சி எடுக்க வேண்டும்’’ என்கிற டாக்டர் ஷாலினி, பெண்களை மரியாதையில்லாமல் பேசும் வழக்கத்தை அதிகப்படுத்தியதில் திரைப்படங்களுக்கும் பங்கிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

‘‘இங்கே பெரும்பான்மை நடிகர்களின் படங்களில் ‘பொம்பளைன்னா இப்படி இருக்கணும்; அப்படி நடக்கணும்’ என்று அறிவுரைகளாக இறைந்து கிடக்கும். அவர்கள் வீட்டுப் பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகுதான், இது போன்ற வசனங்களையெல்லாம் தங்கள் படங்களில் நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இத்தனை வருடங்களாக மன முதிர்ச்சி இல்லாமல் ஒரு தலைமுறைக்குப் பரப்பிவிட்ட நச்சுக் கருத்துகள் பரவிக்கொண்டேதான் இருக்கும். நடிப்பு வேறு, அவர்கள் வீட்டுப் பெண்கள் விஷயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய மாற்றங்கள் வேறு என்பதில் நடிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துதான் வேதவாக்கு என்று நம்பியவர்கள்தான் காலத்துக்கு ஏற்றபடி அப்டேட் ஆகாமல் தேங்கிப்போய் விடுகிறார்கள். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் இருப்பவர்கள், இன்று பெண்களுக்கெதிராகத் தாங்கள் பேசுவது தன் மகளுக்கு, பேத்திக்கு எதிராக எப்படி மாறும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்துப் பேச வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ஷாலினி.