Published:Updated:

சமந்தாவின்`ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ்... ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்திரிக்கிறதா? #TheFamilyMan2

ஃபேமிலி மேன் 2
ஃபேமிலி மேன் 2

``நான் எல்லாரையும் சாகக் கொல்லுவேன்'' என்று இலங்கைத் தமிழில் வசனம் பேசுகிறார் சமந்தா... `ஃபேமிலி மேன்' வெப் சீரீஸ் டிரெய்லரில் என்ன பிரச்னை?

2019-ம் ஆண்டு அமேஸான் ப்ரைமில் வெளியாகி ஹிட்டடித்த வெப் சீரிஸ்தான் `தி ஃபேமிலி மேன்.' பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் இந்திய உளவுப்பிரிவின் அதிகாரியாக நடித்திருப்பார். உளவுப் பிரிவில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கும் அதேநேரத்தில், வீட்டில் நடக்கும் பிரச்னைகளையும் சமாளிக்க முயலும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மனோஜ். இவரின் மனைவி கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்திருந்தார். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்த வெப் சீரிஸ் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஹிட்டானது.

இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்த நிலையில், நேற்று 2-வது சீஸனுக்கான டிரெய்லர் வெளியானது. அதோடு இரண்டாம் பாகம் ஜூன் 4-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் அமேஸான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்டது.

ஃபேமிலி மேன் 2
ஃபேமிலி மேன் 2
Twitter/ Amazon Prime video
``என்.ஐ.ஏ பணியில் லெஜெண்ட்... வீட்டில் டம்மி பீஸ்!’’ - எப்படி இருக்கிறது #TheFamilyMan சீரிஸ்?

`ஃபேமிலி மேன்’ தொடரின் முதல் சீஸன் மும்பையில் நடைபெறுவதுபோல எடுக்கப்பட்டிருந்தது. நேற்று வெளியான டிரெய்லரை வைத்துப் பார்க்கும்போது, இரண்டாம் பாகத்தின் பெரும் பகுதி சென்னையில் நடப்பதுபோல எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த சீஸனில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி தவிர நடிகை சமந்தாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிரச்னை என்ன?

இந்த டிரெய்லரில், உளவுப் பிரிவு அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒருவர், ``நமக்குக் கிடைத்த தகவலின்படி ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கும் போராளிக்குழுவுக்கும் எதிர்பாராத வகையில் கூட்டணி ஏற்பட்டிருக்கிறது'' என்று பேசும் வசனம் இடம்பெற்றிருக்கிறது. ராஜி என்ற கதாபாத்திரத்தில் ஈழத் தமிழ்ப் போராளிபோல வேடமிட்டு நடித்திருக்கும் சமந்தா, ``நான் எல்லாரையும் சாகக் கொல்லுவேன்'' என்று இலங்கைத் தமிழில் வசனம் பேசுகிறார்.

மேலும், டிரெய்லரில் சமந்தா அணிந்திருக்கும் சீருடை விடுதலைப்புலிகளின் சீருடையைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை வரைபடமும் டிரெய்லரில் காட்டப்படுகிறது.

ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா
ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா
You tube Screen shot
`விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்... ஆனால்?’ - முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

இதையடுத்து, இந்தத் தொடர் இலங்கைப் போரைத் தவறாகச் சித்திரிப்பதாகவும், தமிழ்ப் போராளிகளைத் தீவிரவாதிகள்போலக் காட்ட நினைப்பதாகவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ஈழ ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள் எனப் பலரும் #FamilyMan2_against_Tamils என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதுவரை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் சுமார் இரண்டு லட்சம் ட்வீட்கள் பதிவாகியிருக்கின்றன.

நெட்டிசன்கள் சொல்வதென்ன?

இந்த ஹேஷ்டேக் கொண்டு நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கும் கருத்துகளுள் சிலவற்றை இங்கே காணலாம். ``இந்திய இயக்குநர்களே, நடிகர்களே... ஏற்கெனவே `இஸ்லாமியர்கள்' என்ற சொல்லுக்குத் தீவிரவாதிகள் என்று பொருள்படும்படி செய்து வலதுசாரிகளுக்கு உதவினீர்கள். இப்போது தமிழர்களுக்கும் இதைச் செய்ய விரும்புகிறீர்களா? ஈழத் தமிழர்கள் யாரும் தீவிரவாதிகள் அல்ல... ஈழ விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராளிகள்.

1953 முதல் தற்போது வரை சிங்கள இனவெறியால் தமிழர்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். இதை எதிர்த்து போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை எப்படி தீவிரவாத அமைப்பு என்பீர்கள்? தமிழர்களை எப்போதும் தவறானவர்களாகச் சித்திரிப்பதே பாலிவுட்டின் வழக்கம்'' என்று பதிவிட்டிருக்கின்றனர்.

மேலும், ``விடுதலைப்புலிகளைத் தீவிரவாத அமைப்புபோல சித்திரித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ் இனத்தை அவமதிக்கும் செயல் இது. `ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் இயக்குநர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். இந்த வெப் சீரிஸுக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கும் நெட்டிசன்களில் சிலர், அமேஸான் ப்ரைமை Unsubscribe செய்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், `ஃபேமிலி மேன் சீஸன் 2’ டிரெய்லரை, டிஸ்லைக் செய்ய யூடியூப் நோக்கிப் படையெடுத்துவருகின்றனர் தமிழ் நெட்டிசன்கள். இது குறித்து வெப் சீரிஸின் இயக்குநர்கள் தரப்பிலிருந்தோ, அமேஸான் ப்ரைம் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் உங்கள் பார்வை என்னவென்பதை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு