Published:Updated:

ராகுல் காந்தி - கமல்ஹாசன் நெருக்கம்... பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகளா?!

கமல் - ராகுல் காந்தி
News
கமல் - ராகுல் காந்தி

``ராகுல், கமல்ஹாசன்மீது வைத்திருக்கும் அன்பாலும் தோழமையாலும் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். செங்கோட்டையில் பேசவும்வைத்தார். அவர்களாகத்தான் இது அனைத்தையுமே செய்தார்களே தவிர நாங்கள் எதுவுமே செய்யவில்லை.” - ம.நீ.ம

Published:Updated:

ராகுல் காந்தி - கமல்ஹாசன் நெருக்கம்... பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகளா?!

``ராகுல், கமல்ஹாசன்மீது வைத்திருக்கும் அன்பாலும் தோழமையாலும் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். செங்கோட்டையில் பேசவும்வைத்தார். அவர்களாகத்தான் இது அனைத்தையுமே செய்தார்களே தவிர நாங்கள் எதுவுமே செய்யவில்லை.” - ம.நீ.ம

கமல் - ராகுல் காந்தி
News
கமல் - ராகுல் காந்தி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டிவருகிறார். இந்த நெருக்கத்தின் பின்னணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்குகள் இருக்கின்றனவா?

பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்!

கடந்த டிசம்பர் 24 அன்று, டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கைகோத்து நடந்தார் கமல்ஹாசன். அன்று மாலை நடைப்பயணம் முடிந்த பிறகு டெல்லி செங்கோட்டை அருகே பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் பேசிய கமல், ``இந்தக் கூட்டத்தில் தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரும் தன்னைத் தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக அவரை நான் என்னுடைய சகோதரராக ஏற்றுக்கொண்டேன் என்றில்லை. இது இந்தியாவின் இரண்டு கொள்ளுப்பேரன்கள் கலந்து நடத்தும் யாத்திரை. நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி, நான் காந்தியின் கொள்ளுப்பேரன். இதுதான் எங்கள் இருவருக்குமான உறவு.

கமல், ராகுல்காந்தி
கமல், ராகுல்காந்தி

இந்தியாவில் அதுபோல நிறைய கொள்ளுப்பேரன்கள் இருக்கின்றனர். அதனால், கட்சி உள்ளிட்ட பாகுபாடுகளெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் தெருவில் இறங்கிப் போராட நாங்கள் வருவோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன்'' என்று பேசினார்.

இந்த நிலையில், ராகுலும் கமலும் கலந்துரையாடும் வீடியோ ஒன்று ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில், சீனா எல்லைப் பிரச்னை, தமிழர்களின் அன்பு, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை பற்றி ராகுல் காந்தி பேசியிருக்கிறார். `ஹே ராம்' படம் எடுக்கப்பட்டதற்கான காரணம், காந்தி மீதான பற்று, தமிழர்களின் பெருமை எனப் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார் கமல். அதில், `எங்க அப்பா காங்கிரஸ்காரர்' என்பதையும் ஓர் இடத்தில் பதிவுசெய்திருக்கிறார் கமல். அவரின் இந்தப் பேச்சும், தொடர்ந்து ராகுல் காந்தியுடன் நெருக்கம் காட்டும் போக்கும் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்திருக்கின்றன.

நெருக்கம் காட்டுவது ஏன்?

இது குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``2017-ல் சென்னைக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்தித்தார். அப்போது `ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள் ஒன்றிணைய வேண்டும்; கமல் அரசியலுக்கு வர வேண்டும்' என்று கூறிவிட்டுச் சென்றார் கெஜ்ரிவால். பின்னர், ம.நீ.ம-வை ஆரம்பித்த கமல், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், ஆம் ஆத்மியின் சாயல்கொண்ட கட்சியாகவே அது பார்க்கப்பட்டது. அதேபோல தன்னை காந்தியவாதியாகவும் அடையாளப்படுத்திக்கொண்ட கமல், தற்போது, காங்கிரஸுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

கமல், உதயநிதி
கமல், உதயநிதி

உதயநிதியுடன் நெருக்கம் காட்டினாலும், மய்யம் என்ற அடையாளத்துடன் இருக்கும் கமல் நேரடியாக தி.மு.க கூட்டணியில் இணைந்தால் அது சலசலப்பை உண்டாக்கும் என்பதால், காங்கிரஸ் வழியாகக் கூட்டணியில் இணையப் பார்க்கிறார் என்றே தோன்றுகிறது. காங்கிரஸும், தமிழ்நாட்டில் வாக்குவங்கியை உயர்த்த கமல்ஹாசன் போன்ற ஒரு ஸ்டாரை பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறது'' என்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். ``ம.நீ.ம கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தந்தை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தேசிய உணர்வாளர் என்பதால், கமலை ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தோம். அவரை மட்டுமல்ல; பல்வேறு கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்தோம். எங்கள் தலைவர் ராகுல் காந்தியைப்போலவே பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம்கொண்டவர் கமல் என்பதால், ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டார். இதைத் தாண்டி இந்த விஷயத்தில் வேறெந்த யூகங்களுக்கும் இடமேயில்லை'' என்றார்.

கமல் - ராகுல்
கமல் - ராகுல்

ம.நீ.ம-வைச் சேர்ந்த முரளி அப்பாஸிடம் பேசியபோது, ``காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கமல்ஹாசன்மீது வைத்திருக்கும் அன்பாலும் தோழமையாலும் அவரை பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். செங்கோட்டையில் பேசவும்வைத்தார். பின்னர், இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை வீடியோ பதிவுசெய்து, அதை ராகுல் காந்தியின் யூடியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார்கள். அவர்களாகத்தான் இவை அனைத்தையுமே செய்தார்களே தவிர நாங்கள் எதுவுமே செய்யவில்லை. இதை வைத்துக்கொண்டு எப்படி 2024 தேர்தல் கூட்டணி கணக்குகளுக்காக ம.நீ.ம காங்கிரஸுடன் நெருக்கம் காட்டுகிறது என்று சொல்ல முடியும்... அதேநேரம், பிரிவினையை ஏற்படுத்தும் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்பதே ம.நீ.ம கட்சியின் எண்ணம்'' என்று கூறினார்.