`யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’ என்பது பழமொழி. `மருத்துவர் ராமதாஸ் வருவார் பின்னே... ஜி.கே.மணியின் ஓசை வரும் முன்னே’ என்பதுதான் பா.ம.க-வின் மொழி. அந்த அளவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸின் மனதோடு நெருக்கமாக இருப்பவர் ஜி.கே.மணி. ஆரம்பகாலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த ஜி.கே.மணி ராமதாஸின் சமூகரீதியான அரசியல் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, வன்னியர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னாளில், பா.ம.க-வின் தலைவராக அரியணை ஏறியவர், கால் நூற்றாண்டுக்காலமாக அந்த இருக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், 25 ஆண்டுகளாக தலைவர் பதவியை வகித்துவரும் ஜி.கே.மணிக்கு வரும் 24-ம்தேதி வெள்ளிவிழா எடுக்கிறார் டாக்டர் ராமதாஸ். சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கத்தில், அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

அதைத் தொடர்ந்து, மே 28-ம் தேதி சென்னை அருகேயுள்ள திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் மஹாலில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஜி.கே.மணி. இந்தக் கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி மற்றும் தமிழகம், புதுச்சேரியிலுள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளவிருப்பதாகவும் ஜி.கே.மணி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பா.ம.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்சியின் மேல்மட்டத்தில் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது. கால் நூற்றாண்டுக்காலமாக அந்தக் கட்சியின் தலைவராக இருக்கும் ஜி.கே.மணிக்கு புதிய பதவி வழங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இது குறித்து, பா.ம.க நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். ``ஜி.கே.மணி 1998-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் இப்போது வரை 12 முறை தலைவராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். 25-வது ஆண்டாக இந்தப் பதவியை அவர் வகித்துவருகிறார். வெள்ளிவிழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், பா.ம.க-வின் அடுத்தகட்ட நகர்வுக்காக அன்புமணியை தலைவராக்க வேண்டுமென்ற குரல் கட்சியினருக்குள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

திராவிட மாடலுக்கு எதிராக பாட்டாளி மாடலை முன்னிறுத்தி அடுத்துவரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறார் அன்புமணி. ‘2016-ல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணியை பார்த்தீர்கள். இப்போது, பி.எம்.கே 2.0 அன்புமணியைப் பார்க்கப்போகிறீர்கள்’ என்று மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் அன்புமணியே பேசிவருகிறார். எனவே, அன்புமணியை முன்னிறுத்த வேண்டுமெனில் அவர் தலைவராக வேண்டும். அதற்கான நேரமும் வந்துவிட்டது. இதுதான் டாக்டர் ராமதாஸின் புதுக் கணக்கும்கூட’’ என்றனர்.
இது தொடர்பாக, பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலுவிடம் கேட்டபோது, ``பொதுக்குழு அறிவிப்பு குறித்த தகவல் தற்போதுதான் வந்திருக்கிறது. அதில், எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.