Published:Updated:

குடிசைகள் அகற்றம்; அடக்கி வாசிக்கின்றனவா வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள்?

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைப்பகுதி மக்கள், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் வெளியேற்றப்படும்போது, இந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கின்றனவா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட நதிக்கரைகளின் ஓரமாக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பல தலைமுறைகளாக வசித்துவருகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை நகரிலிருந்து வெளியேற்றப்படும் அந்த எளிய மக்கள், நகரிலிருந்து வெகு தொலைவில் குடியமர்த்தப்படுகிறார்கள். அதனால், குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுவது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உட்பட பல பிரச்னைகளை அந்த மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

வெளியேற்ற நடவடிக்கை
வெளியேற்ற நடவடிக்கை

மக்களை வெளியேற்றும் இந்த நடவடிக்கை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நேர்மறையான பார்வை இருந்துவரும் நிலையில், சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு, கூவம் ஆற்றையொட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான குடும்பங்கள் வசித்துவந்த நிலையில், திடீரென அவர்களை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றியிருக்கிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் குடிசைப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். குடிசைப்பகுதி மக்களில் பெரும்பாலோர் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அ.தி.மு.க ஆட்சியில் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், தி.மு.க அதைக் கண்டுகொள்ளாது. அதேபோல, தி.மு.க ஆட்சியில் அவர்கள் வெளியேற்றப்பட்டால், அ.தி.மு.க கண்டுகொள்ளாது. வழக்கமாக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுமே இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்.

முன்னாள், இந்நாள் அரசுகளின் சிங்காரச் சென்னையும், பூர்வகுடி மக்களின் பிரச்னையும் -ஒரு விரிவான பார்வை
லெனின்
லெனின்

தற்போது தி.மு.க தலைமையிலான கூட்டணியில் சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தி.மு.க ஆட்சியில் அரும்பாக்கத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அரும்பாக்கம் பகுதிக்கு வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்று பார்வையிட்டதுடன், சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடியைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனாலும், தி.மு.க ஆட்சி நடைபெறுவதால், இந்த விவகாரத்தில் மென்மையான போக்கை வி.சி.க-வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கையாளுவதாகப் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விமர்சனம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரான த.லெனினிடம் முன்வைத்தோம். “சிங்காரச்சென்னை, எழில்மிகு சென்னை என்ற பெயர்களில் எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே அரும்பாக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பார்க்க வேண்டும். ஆற்றங்கரையையொட்டி கல்வி நிறுவனங்களும் வணிக வளாகமும் பெரும் கட்டடங்களும் அமைந்திருக்கும்போது, குடிசைகளை மட்டும் அகற்றுவது நியாயமல்ல. அந்த மக்களுக்கு சென்னை நகருக்கு உள்ளேயே குடியிருப்புகளை அரசு அமைத்துக்கொடுக்க வேண்டும்.

வெளியேற்ற நடவடிக்கை
வெளியேற்ற நடவடிக்கை

நியாயமான இந்தக் கோரிக்கையை ஆட்சியாளர்களிடம் எடுத்துச்சொல்லியிருக்கிறோம். மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகளில் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முடியாது. கோரிக்கை வைத்தாலே நிறைவேற்றுகிற அரசுதான் தற்போது இருக்கிறது. இந்தப் பிரச்னையிலும் நல்ல முடிவை எடுப்பார்கள். கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்” என்றார் லெனின்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவிடம் பேசினோம்.

“எளிய மக்களின் வாழ்வாதாரமும் அவர்கள் வசிக்கிற இடமும் காலியாகும்போது, அதில் எந்த சமரசமும் இல்லாமல் களமிறங்கும் கட்சிதான் விடுதலைச் சிறுத்தைகள். மென்மையான போக்கு என்பதற்கெல்லாம் இடமே இல்லை.கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் தீவுத்திடல் எதிரில் குடிசைகளை இடித்தார்கள். தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சியினர் உடனடியாகக் களத்துக்குப் போனோம். நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் எங்கள் தலைவர் பேசினார். ஆனால், நோட்டீஸ் கொடுத்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று வழக்கமான காரணத்தை ஆட்சியாளர்கள் சொன்னார்கள்.

வன்னியரசு
வன்னியரசு

தற்போது அரும்பாக்கத்தில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையின்போது, எங்கள் தலைவர் நாடாளுமன்றத்தில் இருந்தார். உடனடியாக சென்னை வந்து நேராக அரும்பாக்கம் சென்றார். கடந்த முறை ஆட்சியாளர்களிடம் என்ன கோரிக்கையை முன்வைத்தோமோ, அதையேதான் இப்போதும் முன்வைத்தோம். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகளை அகற்றுவது இந்த ஆட்சியிலும் தொடர்கிறது என்று சொன்னோம். இதைவிட என்ன கடுமையான விமர்சனத்தை வைத்துவிட முடியும்? கடந்த ஆட்சியின் அணுகுமுறை இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொன்னோம்.

ஆக்கிரமிப்புகளை அகற்றினால், எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றுங்கள் என்று சொல்கிறோம். எளிய மக்களின் குடிசைகளை மட்டும் அகற்றுகிறீர்கள்... மாட மாளிகைகளையும் அகற்றுங்கள் என்று சொன்னோம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளை ஒரே மாதிரிதான் பார்க்கிறோம். வன்மத்துடன் வி.சி.க-வுக்கு எதிராக இதுபோன்ற கருத்துகளை சிலர் பரப்பிவிடுகிறார்கள். பொதுவெளியில் கோரிக்கையை வைத்துவிட்டுப் போகாமல், சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையரைச் சந்தித்து எங்கள் தலைவர் கோரிக்கையை வலியுறுத்தினார்.

அரும்பாக்கம் வீடு
அரும்பாக்கம் வீடு

எந்த அரசாக இருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. எல்லா உத்தரவுகளையுமா அதிகாரிகள் நிறைவேற்றுகிறார்கள்? இந்த கேள்வியைத் துணிச்சலுடன்தான் முன்வைக்கிறோம். இதில் எங்கே மென்மையான போக்கு இருக்கிறது?” என்றார் வன்னியரசு.

தீவுத்திடல் எதிரே இருந்த சத்தியவாணி முத்து நகரிலும் இந்திரா நகரிலும் அரும்பாக்கத்தில் ராதாகிருஷ்ணன் நகரிலும் வசித்த மக்களில் எத்தனை பேர் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வி.சி.க-வுக்கும் வாக்களிப்பவர்கள் என்பது தெரியவில்லை. ஆனால், உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களிப்பவர்களே இந்த குடிசைப்பகுதி வாசிகளில் கணிசமாக இருப்பார்கள். ‘மதுரையில் பென்னிக்குக் வாழ்ந்த வீட்டை இடித்து கலைஞர் நினைவு நூலகம் அமைக்கக்கூடாது’ என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கோபம் கொப்பளிக்க அறிக்கை வெளியிடுகிறார்கள். இந்த எளிய மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, ஒரு அரசியல் நாடகத்துக்காகவாவது ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் பெயரளவுக்கு ஓர் அறிக்கை வெளியிடலாமே? ஏன் வெளியிடவில்லை? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு