Published:Updated:

பருப்பு... பாமாயில்... பத்தாயிரம் கோடி... பதில் சொல்லுங்க பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

தமிழக சத்துணவுத் திட்டம் மற்றும் ரேஷன் கடை களுக்கு பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனம் மீதும், அதன் பினாமி நிறுவனங்கள் மீதும் ஏற்கெனவே முறைகேடு வழக்கு பாய்ந்துள்ளது.

பருப்பு... பாமாயில்... பத்தாயிரம் கோடி... பதில் சொல்லுங்க பழனிசாமி!

தமிழக சத்துணவுத் திட்டம் மற்றும் ரேஷன் கடை களுக்கு பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனம் மீதும், அதன் பினாமி நிறுவனங்கள் மீதும் ஏற்கெனவே முறைகேடு வழக்கு பாய்ந்துள்ளது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

ந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு ‘பில்’ போட்டு பணத்தை எடுத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சத்துணவு ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், கிறிஸ்டிக்குச் சாதகமாக தமிழக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில், கிறிஸ்டி ஃபிரைடு கிராம் இண்டஸ்ட்ரி (கிறிஸ்டி ஃபுட்ஸ்) நிறுவனம் செயல்படுகிறது. 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்குத் தேவையான முட்டை, சத்துமாவு, பருப்பு வகைகளை விநியோகிக்கிறது. தற்போது வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வீதம் தினம்தோறும் 84 லட்சம் முட்டைகள், பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.

கிறிஸ்டி நிறுவனம்
கிறிஸ்டி நிறுவனம்

2012 ஆண்டுக்கு முன்னதாக சத்துணவுத் திட்டத்துக்குத் தேவையான முட்டைகள், சத்துமாவு, பருப்பு ஆகியவை அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்யப் பட்டன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் மொத்தமாகக் கொள்முதல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. 2013-14ம் ஆண்டுக்கான முட்டை டெண்டரில் நேச்சுரல் ஃபுட்ஸ் புராடக்ட்ஸ் (நாமக்கல்), ஸ்வர்ணபூமி என்டர்பிரைசஸ் (கோயம்புத்தூர்) ஆகிய நிறுவனங்கள் டெண்டரை எடுத்தன. ‘இந்த இரு நிறுவனங்களும், கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளரான குமாரசாமியின் பினாமி நிறுவனங்கள். ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டியே, இந்த நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு ‘பில்’ போடப்பட்டுள்ளது’ என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நுகர்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சிலர், “2013-ல் முதல்முறையாக டெண்டர் விடப்பட்டபோது தகுதியான பல நிறுவனங்கள் பங்கேற்கும்படி டெண்டர் கட்டுப்பாடுகள் இருந்தன. இரண்டாவது டெண்டரின்போது, பெருந்தொகையில் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும், முன் அனுபவம் தேவை என்று புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இதனால், கிறிஸ்டி நிறுவனத்தின் பினாமி நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனங்கள் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருப்பு... பாமாயில்... பத்தாயிரம் கோடி... பதில் சொல்லுங்க பழனிசாமி!

2014-ம் ஆண்டில், சத்துணவு முட்டை விநியோகத்தில் நேச்சுரல் ஃபுட்ஸ், ஸ்வர்ணபூமி ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தேசிய வங்கியில் அடுத்தடுத்த எண்களில் வரைவோலை எடுத்து ஒப்பந்தத்துக்கு விண்ணப்பித்துள்ளன. அத்துடன், ஒரே நபரிடம் 100 ரூபாய் மதிப்பிலான பத்திரத்தை மே 28, 2014-ல் பெற்று ஒப்பந்தத்துக்கு விண்ணப் பித்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட நபர், கிறிஸ்டி குமாரசாமியின் நிறுவனத்துக்கு வேண்டப் பட்டவர். இதன்படி பார்த்தால், இரு நிறுவனங்களும் கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்கள் என்பது உறுதியாகிறது.

இந்த நிறுவனங்களுக்கும் சொந்தமாக கோழிப்பண்ணைகூட கிடையாது. வெளி மார்க்கெட்டில் முட்டைகளைக் கொள்முதல் செய்து, ஒரு ரூபாய் கமிஷன் அடிப்படையில் அரசுக்கு விநியோகித்துள்ளனர். ஒரு நாளைக்கு 69 லட்சம் முட்டைகள் தேவைப்படும் நிலையில், இதில் விளையாடியிருக்கும் பணத்தைக் கணக்கிட்டால் தலைசுற்றும்! ஒப்பந்தப் புள்ளியில் முறைகேடு என்பது ஒருபுறமிருக்க, தரமில்லாத பொருள்களை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கர்நாடக அரசின் கறுப்புப் பட்டியலில் இருக்கிறது கிறிஸ்டி நிறுவனம். ஆனால், தமிழக அரசு அதைச் செய்ய மறுக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிறிஸ்டியின் வரி ஏய்ப்பு தொடர்பாக ரகசிய தகவல்கள் கிடைத்தவுடன், அந்த நிறுவனத்தை ரகசியமாகக் கண்காணித்து, ஜூலை 5, 2018-ல் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. நாடு முழுவதும் 75 இடங்களில் நடைபெற்ற இந்த ரெய்டில், ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 1,350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக வருமானவரித் துறை கண்டறிந்தது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருப்பதை தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் வருமானவரித் துறையும் உறுதி செய்திருக்கிறது.

இந்த நிலையில், டெண்டரில் மற்ற நிறுவனங்களும் கலந்து கொள்வதைத் தடுக்கும் வகையில், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருப்ப தாக முட்டை உற்பத்தி யாளர் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் நீதிமன்றம் சென்றனர். டெண்டர் விதிமுறைகளில் பாகுபாடு இருப்பதாகக் கூறி, டெண்டரை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தற்போது ரேஷன் கடைகளுக்குத் தேவையான பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட்ஸ், ஸ்வர்ணபூமி நிறுவனங்கள்தான் விநியோகிக்கின்றன. ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், வரி ஏய்ப்புப் புகாருக்குள்ளான ஒரு நிறுவனத்தில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான காசோலைகளும் அரசால் அளிக்கப்பட்டுள்ளன” என்றவர்கள், அதற்கான ஆதாரங்களாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய காசோலை விவரங்களையும் நம்மிடம் அளித்தனர்.

இதிலும் இன்னோர் ஊழல் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அதிகாரிகள், ‘‘சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ பாமாயில் வெளி மார்க்கெட்டைவிட ஐந்து ரூபாய் அதிக தொகைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. நயம் துவரம் பருப்பு வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 72 ரூபாய்க்குக் கிடைக்கும் நிலையில், 79.80 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகையில் பாமாயில், பருப்பு கொள்முதலில் மட்டும் மாதத்துக்கு 75 கோடி ரூபாய்க்குமேல் ஊழல் நடக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டியே, ஒப்பந்தம் முடிந்த நிலையிலும் கிறிஸ்டியின் பினாமி நிறுவனத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு ‘பில்’ பாஸ் செய்துள்ளனர்” என்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய காசோலை விவரம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய காசோலை விவரம்

கிறிஸ்டி நிறுவனம் தரப்பில் இந்தப் புகார்கள் தொடர்பாக நம்மிடம் விளக்கம் அளித்தவர்கள், ‘‘நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவரும், சில போட்டி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவதூறான செய்திகளைப் பரப்புகிறார்கள். நாங்கள் விநியோகித்த பொருள்கள் தரமற்றவை என்று தமிழகத்தில் எங்குமே புகார் எழுந்ததில்லை. சட்டத்துக்குப் புறம்பாகவும் நாங்கள் செயல்படவில்லை. நேச்சுரல் ஃபுட்ஸ், ஸ்வர்ணபூமி இவ்விரு நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. 1982 முதல் தொழில் செய்துவரும் பாரம்பர்யமான இந்த நிறுவனத்துக்கு, யாரிடமும் லஞ்சம் கொடுத்து தொழில் செய்ய வேண்டிய அவசியமில்லை. வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், மேற்கொண்டு எதுவும் கூற முடியாது” என்று சொன்னார்கள்.

அண்டை மாநிலத்தால் கறுப்புப் பட்டியலில் போடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்துக்கு... 1,350 கோடி ரூபாய் வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கியுள்ள ஒரு நிறுவனத்துக்கு... வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி பத்தாயிரம் கோடி ரூபாய் ஆர்டர் கொடுத்திருப்பதில் எந்த முறைகேடுமே இல்லையா?

பதில் சொல்லுங்கள் முதல்வர் பழனிசாமி அவர்களே!

ஒரு நாள் கலெக்‌ஷன் 69 லட்சம் ரூபாய்!

முட்டை டெண்டரில் ஊழல் தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோவிடம் பேசினோம். ‘‘சத்துணவுத் திட்டத்துக்கான முட்டை கொள்முதல் டெண்டரை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடத்தியபோது, சிறிய முட்டை உற்பத்தியாளர்கள்கூட பங்கேற்றார்கள். 2012-ம் ஆண்டிலிருந்து தமிழகம் முழுவதும் ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் அளித்ததில் தொடங்கியது ஊழல். முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடுத்ததால் கண்துடைப்பாக ஆறு மண்டலமாகப் பிரித்து வழங்குகிறார்கள். ஆறு மண்டலமாக இருப்பதால், அந்த டெண்டரில் பங்கேற்பதற்கான தகுதியான ஆண்டு வருவாயைச் சாதாரண முட்டை உற்பத்தியாளர் சங்கங்களால் காட்ட முடியவில்லை. இதைப் பயன்படுத்தியே தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு டெண்டர் தருகின்றனர்.

சிவ இளங்கோ
சிவ இளங்கோ

குறிப்பாக, கிறிஸ்டி நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்ட பிறகும் அதன் பினாமி நிறுவனங்களான ஸ்வர்ணபூமி ஃபுட்ஸ், நேச்சுரல் ஃபுட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம்தான் அந்த ஒப்பந்தம் போயிருக்கிறது. ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தால், ஒரே செட்டில்மென்ட்டில் பணம் வாங்குவதற்கு வசதியாக இருக்கும் என்பதாலேயே அந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். சத்துணவுத் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 69 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்றன. ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு மட்டும் 69 லட்சம் ரூபாய் கமிஷன் போவதாகக் கூறப்படுகிறது” என்கிறார்.

– ஜி.லட்சுமணன்

விளக்கம்

“அடிப்படை ஆதாரமற்றது”

- துர்கா ஸ்டாலின்

28.07.2019 தேதியிட்ட ஜூ.வி இதழின் ‘மிஸ்டர் கழுகு’ பகுதியில் ‘திராவிட முன்னேற்ற கம்பெனி’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் சார்பில் அவரின் வழக்கறிஞர் நமக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில், ‘திராவிட முன்னேற்ற கம்பெனி என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அட்டைப்படக் கட்டுரை எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் அற்றது, கற்பனையானது, பொய்யாகப் புனையப்பட்டுள்ளது. துர்கா ஸ்டாலினுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இத்தகைய சூழலில் துர்கா ஸ்டாலினையும் அவருக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பையும் குலைக்கும் விதத்திலும், அவமதிக்கும் நோக்கத்துடனும், இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கட்சிக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்நோக்கத்துடன் அவருடைய புகைப்படமும், அவருடைய மகன் மற்றும் மருமகன் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்பதுடன் 10 கோடி ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க இளைஞரணித் தலைவராக உதயநிதியை நியமனம் செய்த பிறகு நம்மைத் தொடர்புகொண்ட தி.மு.க நிர்வாகிகள், மூத்தத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்று பலரும் நேரடியாகக் கட்சித் தலைமையிடம் வெளிப்படுத்தத் தயங்கிய பல விஷயங்களை, நம்மிடம் குமுறலாக வெளிப்படுத்தினர். அதன் அடிப்படையில்தான் அந்தக் கட்டுரை எழுதப்பட்டது. மற்றபடி துர்கா ஸ்டாலின் உள்பட எந்தவொரு தனிநபரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலோ, உள்நோக்கத்துடனோ எழுதப்படவில்லை என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.