Published:Updated:

`இந்தியா எங்களுக்கான நாடில்லையா?!' - மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் கோரிக்கைகள்; ஒரு விரிவான அலசல்

மாற்றுத்திறனாளிகள் - Accessible Bus
News
மாற்றுத்திறனாளிகள் - Accessible Bus

அதிகாரிகளிடம் முறையிடும் போது, ’உங்களைப் போல ஒருத்தர் ரெண்டு பேருக்காக எல்லாத்தையும் மாத்த முடியுமா?’ என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்கள்.

Published:Updated:

`இந்தியா எங்களுக்கான நாடில்லையா?!' - மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் கோரிக்கைகள்; ஒரு விரிவான அலசல்

அதிகாரிகளிடம் முறையிடும் போது, ’உங்களைப் போல ஒருத்தர் ரெண்டு பேருக்காக எல்லாத்தையும் மாத்த முடியுமா?’ என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் - Accessible Bus
News
மாற்றுத்திறனாளிகள் - Accessible Bus
உலக மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவர் (அதாவது நூறு கோடி மக்கள்) ஏதோவொரு உடற் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. ஆனால் நாம் தினமும் வெளியில் செல்லும் போது அவர்கள் யாரையுமே பார்ப்பதில்லை.

ஏனென்றால் அவர்கள் எல்லோருமே வீட்டில் எங்கோ முடங்கி இருக்கிறார்கள். அவர்களில் பலரும் கல்வி கற்காமல் போனதற்கு முக்கிய காரணம், பேருந்தில் பயணிக்க முடியாமல் போனதும், கல்வி நிலையங்களில் அவர்களுக்கான வசதிகள் இல்லாததும்தான். 

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மெட்ரோ ரயில் நிலையம், தியேட்டர், மால்கள், மருத்துவமனைகள் என சில இடங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதத்தில் மாறி வந்தாலும், மாற்றுத்திறனாளிகள் எல்லோரையும் போல சுயமாக எல்லா இடங்களுக்கும் சென்று வர இன்னும் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது.  

தொழில்நுட்ப வளர்ச்சியில் ரோபோக்கள் உணவு சமைத்துப் பரிமாறுகின்றன, கதைகள் எழுதுகின்றன; ஏன் பாடல்கள் கூட இயக்குகின்றன. இது வரவேற்கக்கூடிய வளர்ச்சி என்றாலுமே, இன்னொருபுறம், ஒரு குறிப்பிட்ட மக்கள் வெளியே வந்து கல்வி கற்கவே சிரமப்படுகிறார்கள் என்பது மிகப்பெரிய முரணாக இருக்கிறது.

Accessibility
Accessibility

வீல்சேர் உபயோகிப்பவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள். வாய்-பேச முடியாத, காது கேளாத மக்கள் என பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெரிய சிரமம் இன்றி அனைவரைப் போலவும் எளிதாகப் பயணித்து கல்வி முடித்து வேலைக்குச் செல்லவும், வார இறுதிகளில் தியேட்டர், ஷாப்பிங் மால் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கும் எளிதில் பயணிக்க டிசேபிள்ட் ஃப்ரெண்ட்லியான (Disabled Friendly) வசதிகளைப் பல வளர்ந்த நாடுகள் 80 சதவிகிதத்துக்கும் மேல் அறிமுகப்படுத்திவிட்டது. அவர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளையும், மூத்த குடிமக்களையும் கருத்தில் கொண்டுதான் ஒவ்வொரு சட்டமும் இயற்றப்படுகிறது. 

இந்தியாவில் 2016ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளை சமமாக நடத்தி, பொது இடங்களை அவர்களுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும் என்று இருந்தாலும், நடைமுறையில் எப்படி இருக்கிறது எனும் நிலவரத்தை சில மாற்றுதிறனாளி நண்பர்களிடம் கேட்டோம். 

பார்வைச் சவால் உடைய ’கண்ணம்மா’ புகழ் பாடகி ஜோதியின் அம்மா கலைச்செல்வி, ”சென்னையில் எங்களுக்கு பெரிய பிரச்னையே கழிவறைகள்தான். நம்ம சென்னையில எந்தக் கழிவறையுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதத்தில் இல்லை. கதவை திறந்துவைத்துதான் உபயோகப்படுத்த முடியும். பொது போக்குவரத்துகள் அனைத்துமே மாற்றுத்திறனாளிகள் பயணிக்கவே முடியாத சூழ்நிலையில்தான் இருக்கிறது. 

ஜோதியுடன், தாய் கலைச்செல்வி
ஜோதியுடன், தாய் கலைச்செல்வி

ஒரு இசை நிகழ்ச்சிக்காக நானும் ஜோதியும் ஸ்காட்லேண்டில் க்ளாஸ்கோ என்ற இடத்துக்குச் சென்றிருந்தோம். அந்த இடம் முழுவதுமே மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக எந்தத் தடையும் இன்றி பயணிக்கும் விதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. யார் உதவியும் இல்லாமல் தனியாகவே பார்க், மால், பீச்க்கு ரயிலிலும், பேருந்திலும், சாலையிலும் செல்ல முடியும். அதே போல அனைத்து பொது கழிவறைகளிலும் ஒரு வீல்சேர் உள்ளே செல்லும் அளவுக்கு போதுமான இடமும், கைப்பிடிகளுடன் டிஸ்சேபிள்ட் ஃப்ரெண்ட்லியாக இருந்தன. அதேபோல பல முக்கிய சுற்றுலா தளங்களும் அனைத்து விதமான மாற்றுதிறனாளிகள் வசதியாக வந்து செல்லும் விதத்தில் அமைந்திருந்தது” என்கிறார். 

ஏற்றம் அறக்கட்டளையின் செயல்பாட்டாளர்களின் ஒருவரான ரூபா வைரப்பிரகாஷ், வளர்ச்சி குறைபாடில் பாதிக்கப்பட்டிருந்தாலும், விளையாட்டு, ட்ராவல், ஃபேஷன் ஷோ என பிஸியாக இயங்கி கொண்டு இருக்கிறார். ”சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்ற போது, நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதே என் நினைவில் இருக்காது. எல்லோரையும் போல நினைத்த இடங்களுக்கு நிம்மதியாக வீல்சேரில் பயணிக்க முடிந்தது. 

ரூபா வைரப்பிரகாஷ்
ரூபா வைரப்பிரகாஷ்

ஆனால் இங்கு என் கணவரோடு வெளியே செல்ல வேண்டும் என்றாலும், கழிவறையில் அவர் என்னுடன் உள்ளே வர முடியாது, அதற்காகவே ஒரு பெண் துணையைத் தேட வேண்டி இருக்கிறது. வெளிநாடுகளில் ஆண், பெண் கழிவறைகளுடன் ’பொது’ என்ற கழிவறையும் இருக்கும். அங்கு பாலின பேதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அந்த கழிவறைகளை பயன்படுத்த முடியும். அப்படி இருக்கும் போது, என் அப்பாவோ கணவரோ கூட கழிவறைக்குள் வந்து எனக்கு உதவலாம்.

அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்குக்கூட செல்ல முடியவில்லை

வெளிநாடுகளில் நாலு படிகட்டுகள் இருந்தால்கூட பக்கத்திலேயே ரேம்ப் அல்லது மாற்றுத்திறனாளிகள் செல்ல லிஃப்ட் இருக்கும். ஆனால் இங்கே பல அரசு அலுவலகங்கள், வங்கிகள் கூட மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதத்தில் இல்லை. சில புதிய கட்டடங்கள் சறுக்குப் பாதைகள் அமைத்திருந்தாலும், அது பயன்படுத்தும் விதத்தில் இருப்பதில்லை. அங்கே ஒரு பெரிய ஜெனரேட்டரை வைத்திருப்பார்கள்.

அல்லது வீல் சேர் நுழையவே முடியாத அளவு குறுகலான பாதையில் இருக்கும். அதிகாரிகளிடம் முறையிடும் போது, ’உங்களைப் போல ஒருத்தர் ரெண்டு பேருக்காக எல்லாத்தையும் மாத்த முடியுமா?’ என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்கள். சரியான வசதிகள் இல்லாததால்தான் மாற்றுத்திறனாளிகள் வெளியவே வர முடியாமல் இருக்கிறார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதே இல்லை. 

நான் வெளியில் செல்ல வேண்டும் என்றால், கேப் புக் செய்துதான் செல்லவேண்டும். அதுக்கே ரூ.1000, ரூ.2000 ஆகும். மெட்ரோ ரயில்கள் மாற்றுதிறனாளிகளும் பயன்படுத்தும் விதத்தில் இருந்தாலும், அதில் எல்லா இடங்களுக்கும் பயணிக்க முடியாதே. மீண்டும் அங்கு இருந்து ஒரு கேப் புக் செய்து செல்ல வேண்டும். 

கல்வி நிலையங்களிலும் பிரச்சனை 

சென்னையில் ஒரு கல்லூரிக்கு சென்ற போது, அங்கு லிஃப்ட் இருந்தாலும் பத்து படிகட்டுகளை ஏறினால்தான் லிஃப்டுக்கு செல்ல முடியும். அந்தப் படிகளைக் கடக்க சில மாணவர்கள் என்னைத் தூக்கி சென்றார்கள். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. வெறும் இரண்டு படிக்கட்டுகள் தானே வீல்சேருடன் தூக்கி வைத்துவிடலாம் என்று எளிதாக நினைக்காமல், இன்று பல சாதனைகளை படைத்து வரும் மாற்றுத்திறனாளிகள் கண்ணியமாக இச்சமூகத்தில் வாழத் தகுந்த ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும்.

முக்கியமாக கல்வியும் மருத்துவமும் எல்லோரும் அணுகும் விதத்தில் இருக்க வேண்டும். பொதுமக்கள் என்று சொல்லும் போது, அதில் மாற்றுதிறனாளிகளும் அடங்குவார்கள். எங்களையும் கருத்தில் கொண்டுதான் எல்லா வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் ரூபா.

தனியார் வங்கியில் பணிபுரியும் சதீஷ், போசியா பாராலிம்பிக் விளையாட்டில் தேசிய அளவிலும் மாநில அளவில் விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இப்போது ஏக்தா அறக்கட்டளையுடன், போசியா அமைப்பில் செயல்பட்டு வருகிறார். ”சென்னை மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவிகித கூட டிஸ்சேபிள்ட் ஃப்ரெண்ட்லியாக இல்லை. 

சென்னையின் மிகப் பெரிய மால்களான பீனிக்ஸ் மால் மற்றும் பிவிஆரில் கழிவறைகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதாக இருக்கிறது. ஆனால், தியேட்டர் ஸ்க்ரீன்கள் உகந்ததாக இல்லை. மாயாஜாலில், தியேட்டர் ஸ்க்ரீன் மாற்றுதிறனாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. ஆனால் கழிவறைகள் உகந்ததாக இல்லை. இப்படி முழுமையான மாற்றங்கள் செய்யாததால், மாற்றுத்திறனாளிகள் நிம்மதியாக எங்குமே பயணிக்க முடிவதில்லை. 

சதீஷ்
சதீஷ்

ஐந்து வருட போச்சுவார்த்தைக்குப் பின் தான், மெரினாவில் இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான ஈகோ-ஃப்ரெண்ட்லி நிரந்த நடைபாதையை அரசாங்கத்திடம் பெற்றுள்ளோம். அதில் பலருக்கு பல கருத்துகள் இருந்தாலுமே, அந்த நடைபாதை எங்களின் பல ஆண்டு கனவு. 

பேருந்து, ரயில்களில் நாங்கள் பயணிக்க வாய்ப்பே இல்லை.  மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகள் 80% பயணிக்கலாம். ஆனாலும் அவர்கள் தனியாக பயணம் செய்ய முடியாது. டிக்கட் ஸ்கேனிங், டிக்கட் கவுண்டர்கள் போன்ற இடங்கள் வீல்-சேர் பயன்பாட்டாளர் உபயோகிக்கும் உயரத்தில் இல்லை. 

மெட்ரோ நிலையத்தில், நடைமேடைக்கும் ட்ரெயினுக்கும் இரண்டு அங்குலம் உயரமும் இடைவெளியும் இருக்கும். இதனால் நிச்சயம் வீல்-சேர் அந்த இடைவெளியில் மாட்டிக்கொண்டு விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. வைஷ்ணவி என்பவர் இதை சுட்டிக்காட்டி வழக்கு பதிவு செய்ததையடுத்து, இப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

2005ல் பேருந்துகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று வழக்குப் பதிவு செய்த போது, 2010ல் பத்து பேருந்துகள் மாற்றுதிறனாளிகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் அது குறிப்பிட்ட சில வழிகளில் மட்டுமே இயக்கப்பட்டதால், அந்தப் பேருந்துகள் எப்போது வரும், போகும் என்றுகூட யாருக்குக்கும் தெரியவில்லை. 

2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில், பொது இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டது. 

பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் இயங்கும் பேருந்துகள், தாழ்ந்த படிகட்டுகளுடன் இருக்க வேண்டும். அதாவது 400 மில்லிமீட்டர் உயரத்தில்தான் இருக்க வேண்டும். இதனால், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பேருந்தில் ஏறி இறங்க முடியும். இது வீல் சேர் பயன்பாட்டாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் கூட வசதியாக இருக்கும். அதே போல புதிதாக கட்டப்படும் கட்டிடங்களும்கூட மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற சட்டம் வெளியானது. 

400 பேருந்துகள் இப்போது தாழ்ந்த படிகட்டுகளுடன் வரவிருக்கிறது. சென்னையில் 200 பேருந்துகளும், திருச்சி மற்றும் மதுரையில் தலா 100 பேருந்துகளும் வரவுள்ளன. 

அரசு அலுவலகங்களில், பலரும் சறுக்குபாதை வைத்துவிட்டால் அது மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதாக மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பேருந்துகள் கொண்டு வர தொடர்பான வழக்குக்கு, கவிதா என்பவர் உயர் நீதிமன்றத்துக்கு வீல் சேரில் சென்றிருந்தார். ஆனால் அங்கிருக்கும் சறுக்கு பாதையே செங்குத்தாக வீல்சேர் போக முடியாதபடி இருந்தது மிகுந்த அதிர்ச்சியளித்தது" என்கிறார் சதீஷ்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர், தனது காலில் ஏற்பட்ட காயத்தால், நாடாளுமன்றத்துக்கு வீல் சேரில் சென்றார். அப்போது, பாராளுமன்றத்தில் ஒரே ஒரு நுழைவு வாயிலில்தான் சறுக்குபாதை இருந்ததாக தெரிவித்தார். இதன் மூலம், மாற்றுதிறனாளிகளுக்கு உகந்த வசதிகள் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளமுடிவதாக தெரிவித்தார்.

எந்த ஒரு வளர்ச்சி திட்டமாக இருந்தாலும், அதில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், திருநர் சமூகத்தினர் என அனைவரது நன்மையையும் கருத்தில் கொண்டு தான் உருவாக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.