அரசியல்
அலசல்
Published:Updated:

விஜயபாஸ்கரின் நிழல்... சரவணனின் சாம்ராஜ்ய பின்னணி!

சரவணன் - விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
சரவணன் - விஜயபாஸ்கர்

சில மாதங்களுக்கு முன்பாக, சிவில் சப்ளை கார்ப்பரேஷனுக்கான பருப்பு கொள்முதலை திருப்பூர் நிறுவனமும், சரணவனும் சேர்ந்தே செய்திருக்கிறார்கள்.

‘‘விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது சிக்கிய ஆவணங்களைவிட, அவரின் நிழலாக இருந்த அவருடைய உதவியாளர் சரவணனால்தான் விஜயபாஸ்கர் வீழப்போகிறார்’’ என்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்!

விஜயபாஸ்கருக்குக் கல்லூரி நண்பராக அறிமுகமாகி, விஜயபாஸ்கர் அமைச்சரான பிறகு அவரின் தனி உதவியாளராக வலம் வந்தவர்தான் சரவணன். “சிதம்பரத்தில் படிக்கும்போது சைக்கிளில் பவனிவந்தவர், இன்று பல கோடிக்கு அதிபதியாகி, தனியாக ‘செந்தூரான் என்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக வளர்ந்த கதையே மிகவும் சுவாரஸ்யமானது” என்கிறார்கள் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள். சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்தபோது, அமைச்சர் ஓ.கே சொன்னாலும், சரவணன் மனதுவைத்தால் மட்டுமே எதுவும் நடக்கும்’ என்று மருத்துவத் துறையின் அதிகாரிகள் முதல் ஒப்பந்ததாரர்கள் வரை அனைவரும் அறிந்துவைத்திருந்தனர். அவர்களின் நெருக்கம் ஊரறிந்தது. எனவே, விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியபோது, சரவணனின் நந்தனம் வீடு, அவரது அலுவலகங்களுக்கும் காவல்துறையினர் சோதனையிடச் சென்றனர். ஆனால், சரவணனின் வீடு பூட்டியிருந்ததால் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

சரவணன்
சரவணன்

விஜயபாஸ்கரின் நிழலாக சரவணன் வளர்ந்தது எப்படி?

விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்... ‘‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விஜயபாஸ்கர் மருத்துவம் பயின்றபோது, அதே பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பயின்றார் சரவணன். அவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை. கல்லூரியில் படிக்கும்போதே விஜயபாஸ்கர் அ.தி.மு.க-வில் இணைந்தார். அப்போதிருந்து சரவணனும் அவருடன் இருக்கிறார். படிப்பை முடித்தவுடன் இருவருமே சென்னைக்கு ஒன்றாக வந்து, அண்ணாசாலை பகுதியில் மெஸ் நடத்தினார்கள். இன்னொரு பக்கம் விஜயபாஸ்கர் மருத்துவராகப் பணியாற்ற, சரவணன் மேன் பவர் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். விஜயபாஸ்கர் முதன்முறையாக எம்.எல்.ஏ-வானபோதே, சரவணன் அவருடன் நிழலாக உடனிருந்தார். அமைச்சரான பின்னரும் தொடர்ந்த அந்த நட்பு, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு வரை தொடர்கிறது’’ என்றவர்கள், மேற்கொண்டு விவரித்தார்கள்...

‘‘சுகாதாரத்துறை அமைச்சரின் தனி உதவியாளர் அந்தஸ்தோடு பவனிவந்த சரவணன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் அசுர வளர்ச்சியைக் கண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சுகாதாரத் துறையில் நடந்த அனைத்து டெண்டர்களுமே சரவணனின் கண்ணசைவில்தான் நடந்தன. குறிப்பாக, கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் மாஸ்க், பிபிஇ உடை சப்ளைகள் நடந்தன. பல கொள்முதல்கள் இவர் கைகாட்டிய டம்மி நிறுவனங்கள் மூலமாகவே நடந்தன. திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சரவணன் நெருக்கமாக இருந்ததாலேயே, கடந்த ஆட்சியில் மாஸ்க் கொள்முதலில் அந்த நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.

அமைச்சரைச் சந்திக்க எந்த முக்கியப் புள்ளிகள் வந்தாலும், அவர்களை மரியாதையுடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்துவிடுவார். அதன் பிறகு வந்திருக்கும் முக்கியப் புள்ளிகளிடம், ‘உங்களுக்கு ஒதுக்கியுள்ள டெண்டரில், நான் சொல்லும் நிறுவனத்தையும் சப் கான்ட்ராக்டராகச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று நாசுக்காக இவரது டம்மி கம்பெனியை நுழைத்துவிடுவார். இப்படி பல கோடிகளை அமைச்சருக்கே தெரியாமல் சுருட்டினார். ஒருகட்டத்தில் சரவணனை மீறி விஜயபாஸ்கர் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. காரணம், விஜயபாஸ்கரின் அனைத்து கொடுக்கல் வாங்கலும் சரவணனின் மேற்பார்வையில்தான் நடந்தன. அதனால், சரவணன் சொல்வதுதான் சுகாதாரத்துறையில் சட்டமாக நடந்தது. அந்த அதிகாரத்தை வைத்து மற்ற துறைகளிலும் கச்சிதமாகக் காரியம் சாதித்துக்கொண்டார். ஆனால், அது இந்த ஆட்சியிலும் தொடர்வதுதான் வருத்தமான செய்தி’’ என்றார்கள்.

தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவர், கடந்த ஆட்சியில் மருத்துவக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்தார். அதற்கான அனைத்து அனுமதிகளையும் வாங்கிக் கொடுத்து, அவருடன் அப்போதே நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அந்த நெருக்கத்தை வைத்துத்தான், இந்த ஆட்சியிலும் சில டெண்டர்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார். தனக்கு நெருக்கமானவர்கள் பெயரில் ஏழுக்கும் மேற்பட்ட டம்மி நிறுவனங்களை சரவணன் நடத்திவந்திருக்கிறார். இந்த விவரங்களையும் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்திருக்கிறது.

‘‘கடந்த ஆட்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத் ஐ.ஏ.எஸ்-க்கும் கடும் நெருக்கடியைக் கொடுத்தார் சரவணன். ‘தான் சொல்லும் நிறுவனங்களுக்கு, சொல்லும் தொகையில் டெண்டர் கொடுக்க வேண்டும்’ என்று நிர்பந்தம் செய்ய, அதை உமாநாத் மறுத்தது அப்போது துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த டெண்டர் குறித்த ஆவணங்கள் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை வசம் உள்ளன. சரவணன் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியுள்ள ஆவணங்களில், கடந்த ஓராண்டில் மருத்துவத் துறையில் நடந்த சில டெண்டர்கள் குறித்தும், அதில் கைமாற்றப்பட்ட கமிஷன்கள் குறித்தும் விவரங்கள் இருந்துள்ளன. ஏற்கெனவே, சரவணன் வருமான வரித்துறை ரெய்டிலும் சிக்கியவர். அந்த வழக்கும் இன்னும் நடந்துவருகிறது. அவர் விரைவில் எங்கள் முன்னிலையில் ஆஜராகித்தான் தீர வேண்டும்’’ என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கொங்குமண்டல அமைச்சர் ஒருவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, சில வேலைகளைக் கையிலெடுத்திருக்கிறார். அந்த அமைச்சர் மூலமே தன் வீட்டுக்கு ரெய்டு வரப்போகும் விஷயத்தையும் தெரிந்துகொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் சரவணன்’’ என்கிறார்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். சரவணனால் பாதிக்கப்பட்ட பல மருத்துவ சப்ளை நிறுவனங்கள், சரவணன் குறித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கொடுத்துவருவதுதான் ஹைலைட்.

சில மாதங்களுக்கு முன்பாக, சிவில் சப்ளை கார்ப்பரேஷனுக்கான பருப்பு கொள்முதலை திருப்பூர் நிறுவனமும், சரணவனும் சேர்ந்தே செய்திருக்கிறார்கள். அதேபோல் சென்னை சாலைகளில் கேமராக்கள் பொருத்தும் ஒப்பந்தத்தையும் சரவணனின் பினாமி நிறுவனமே கையில் எடுத்திருக்கிறது. இப்படிக் கடந்த ஆட்சியிலும் கோலோச்சி, இந்த ஆட்சியிலும் சத்தமில்லாமல் சரவணன் சாம்ராஜ்யம் செய்துவருவதைக் கண்டு அரசியல் வட்டாரத்தினர் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். ‘தங்கள் கைவசமுள்ள ஆவணங்களைவைத்து சரவணனிடம் விசாரணை நடத்தினாலே விஜயபாஸ்கர் சிக்கிவிடுவார்’ என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

இது குறித்தெல்லாம் விளக்கம் கேட்க, சரவணின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். `ஸ்விட்ச்டு ஆஃப்’ என்றே தொடர்ந்து பதில் வந்தது.

பரமசிவன் கழுத்தில் பாம்புபோல இருந்தவர்... இன்று அதே கழுத்தையே இறுக்க ஆரம்பித்திருப்பதுதான் வேடிக்கை!