இத்தாலியின் ஃபிடென் நகரிலுள்ள ஒரு மதுக்கூடத்தில் நேற்று குடியிருப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அதில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் நண்பர் உட்பட குடியிருப்புவாசிகள் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது உள்ளூர்வாசி ஒருவர் திடீரென கூட்டத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சாரமாரியாகச் சுட்டார். அதில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்துத் தாக்கியிருக்கிறார்கள். அதனால், மேலும் அசம்பாவிதம் நடப்பது தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் செய்தியாளர்களிடம், ``குற்றம்சாட்டப்பட்டவர் திடீரென எங்கள் கூட்டத்துக்குள் புகுந்து அறைக் கதவைப் பூட்டிவிட்டார். மேலும், உங்கள் எல்லோரையும் கொல்லப்போகிறேன் எனக் கூறிக்கொண்டே சுடத் தொடங்கினார். அதில் மூன்று பேர் இறந்துவிட்டார்கள். அவர், அடிக்கடி எங்கள் குடியிருப்புவாசிகளிடம் தகராறு செய்வார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இறந்தவர்களில் ஒருவரான நிகோலெட்டா கோலிசானோவுடன் இணைந்திருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, "நீ இப்படி எங்களைவிட்டுப் பிரிந்திருக்கக் கூடாது" எனப் பதிவிட்டிருக்கிறார். குற்றவாளி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.