ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காளைகளும் கண்மணிகளும்! - ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் பெண்கள்

ஜல்லிக்கட்டு மாடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஜல்லிக்கட்டு மாடு

காளையோட தசை இறுக்கத்தைத் தளர்த்த வும், உடல் சூட்டை தணிக்கவும் வாரத்துக்கு ரெண்டு, மூணு நாள் நீச்சல் பயிற்சி கொடுப் போம்.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடிவாசலில் காளைகளைப் பிடிக்க ஆண்கள் சுற்றி நிற்பார்கள். பார்வையாளர் அரங்கிலும் ஆண்களே அதிமாக இருப்பார்கள். ஜல்லிக்கட்டுக்கு களமிறங்கும் காளைகளையும் பெரும்பாலும் ஆண்களே தயார் செய்வார்கள். என்றாலும் பெரும்பாலான வீடுகளில் அந்தக் காளைகளை நாள்தோறும் பராமரிப்பவர்கள் பெண்களே. ஆச்சர்யமாக சில பெண்கள், `ஹலோ... காளையை போட்டிக்குத் தயார்படுத்துறதும் நான்தான்’ என்று வாடிகளில் மாடுகளை அவிழ்த்து விடுவதை பார்க்கலாம். அப்படி சில பெண்கள் இங்கே...

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் ஜெயமணி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தனது காளைகளான காரி, வெள்ளையனை தயார்படுத்திக்கொண்டிருந்தார். ``நாங்க விவசாயக் குடும்பம். 10 பசு மாடு, 10 ஆடு, 20 கோழி வளக்குறோம். ரெண்டு அக்காக்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு. தம்பி ஜான் பீட்டர் மாடுபிடி வீரர். 17,000 ரூபாய்க்கு ஒரு கன்னுக்குட்டி வாங்கிட்டு வந்து, `வெள்ளையன்'னு பேரு வெச்சு ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்தினோம். ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்து தமிழகம் முழுக்க தன்னெழுச்சியா போராட்டம் நடந்தப்போ, எங்க காளையோட போராட்டத்துல பங்கேற்ற கையோடு இன்னொரு காளை வாங்க முடிவெடுத்தோம். மணப்பாறை மாட்டுச் சந்தையில, ஆயிரக்கணக்கான மாடுகளுக்கு நடுவுல காரி காளை தனியா தெரிஞ்சான். 51,000 ரூபாய்க்கு அவனை வாங்கிட்டு வந்தோம். வீரமா களத்துல நின்னு விளையாட அவனை உருவாக்கினோம்’’ என்றவர், காளையை தயார்படுத்தும் முறை பற்றி பகிர்ந்தார்.

காளைகளும் கண்மணிகளும்! - ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் பெண்கள்

``காளையோட தசை இறுக்கத்தைத் தளர்த்த வும், உடல் சூட்டை தணிக்கவும் வாரத்துக்கு ரெண்டு, மூணு நாள் நீச்சல் பயிற்சி கொடுப் போம். இரையை தின்னுட்டே ஒரே எடத்துல நின்னுட்டு இருந்தா தசை போட்டுரும்னு தெனமும் நடக்கவிட்டுக் கூட்டுட்டு வருவோம். வீரியம் குறைஞ்சுடாம இருக்க, மண்குவியல்ல குத்தல் பயிற்சி கொடுப்போம். காரி, முதல் வாடியில இறங்கினப்போவே பரிசு வாங்கிட் டான்ல காரியும், வெள்ளையனும் கோவை, திருச்சி, மதுரை, கருங்குளம், ஆவாரம்பட்டி, சூரியூர், விராலிபட்டினு தமிழ்நாட்டுல நடக்குற முக்கிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு கட்டில், பீரோ, சைக்கிள், டி.வி, தங்கச் செயின், மோதிரம், வெள்ளி, வெண்கல குத்துவிளக்குனு வாங்கியிருக்கானுங்க. இப்போ நீங்க உக்கார்ந்திருக்கிற வயர்கட்டில் கூட அப்படி பரிசா வாங்குனதுதான். ரெண்டு பேரும் எங்கயுமே பிடிமாடு ஆனதில்ல.

பருத்தி விதை, துவரம் தூசி, தவிடு, வைக் கோல், பச்சை தட்டை மட்டுமே காளைங் களுக்குக் கொடுப்போம். இதுக்கே ஒரு நாளைக்கு 400 ரூபா செலவாகும். போட்டி, திருவிழா, வீட்டுல விசேஷம்னா காளைகளுக்கு புது கயிறு, வேட்டினு 3,000 ரூபாக்கு மேல வாங்குவோம். ஒழுங்கா சாப்பிடலைன்னா ஒடம்புல பிரச்னைனு தெரிஞ்சுக்கிட்டு அதுக் கேத்த வைத்தியம் பண்ணுவோம். வெத்தலை, மிளகு, சுடுதண்ணி, அப்புறம் கருவாடு - சாம்பிராணி - சீவப்பட்ட மாட்டுக் கொம்பு கழிவுகளைப் போட்ட புகைனு இதெல்லாம் காளைகளுக்கு ரொம்ப நல்லது’’ என்று சொல்லும் ஜெயமணியின் வாடிவாசல் அனுபவங்கள் த்ரில்லானவை.

``வாடிவாசலுக்கு நான்தான் காளைகளைக் கூட்டுட்டுப் போவேன். டோக்கன், மருத்துவப் பரிசோதனைனு முடிச்சு, வாடியில மூக்கணாங்கயிறு அவிழ்த்த உடனே அதுங் களுக்கு காரமும், ரோசமும் அதிகமாகிரும். களத்துக்குள்ள போய் நின்னுக்குவேன். ஆக்ரோஷமா வெளியேறும் வெள்ளையன் ஜம்பிங் போட்டு வருவான். காரி களத்துல நின்னு விளையாட்டுக் காட்டுவான்; திமிலை பிடிக்க வந்தா பறக்கவிட்ருவான். ரெண்டு பேரும் சுத்தி நிக்கிறவங்களை எல்லாம் தெறிச்சு ஓடவிட்டாலும் என்னைப் பார்த்த தும் பக்கத்துல வந்து நின்னுக்குவானுங்க’’ எனும்போது பெருமையும் பாசமும் அவர் முகத்தில்.

ஜெயமணி
ஜெயமணி

``களத்துல வெற்றிபெற்ற காளைகள்னு ஆர்.கே.காரி, ஆர்.கே.வெள்ளையன்னு அறிவிக்கும்போதும், எல்லாரும் கைதட்டும் போதும், களத்தைவிட்டு வெளிய வரும்போது பலரும் வந்து என்கூட செல்ஃபி எடுத்துக்கும் போதும் ரொம்ப கெத்தா இருக்கும். கோவை யில நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில, சிறந்த காளைனு காரிக்கும், உரிமையாளரான எனக்கும் மாலை அணிவிச்சப்போ அவ்ளோ சந்தோஷமா இருந்தது.

இவனுங்க ரெண்டு பேருக்கும் இப்போ ஒன்பது வயசு. இன்னும் அஞ்சாறு வருஷம் நல்லா களமாடுவானுங்க. இவனுங்களுக்கு வாரிசுகளை உண்டாக்க, நாட்டுமாட்டு கன்று ஒன்றை வாங்கி வளர்க்குறோம்.

ஒரு வேண்டுகோள் இருக்குங்க... வாடியில காளைகளை அடக்கவரும் காளையர்கள் மூக்கணாங்கயிறு அவிழ்த்து காளை வெளி யேறினதுக்கு அப்புறம் பிடிங்க. அதுக்கு முன்னாடியே பிடிக்க வராதீங்க’’ - காரியின் கொம்பை வாஞ்சையோடு தடவியபடியே சொல்கிறார் ஜெயமணி.

காளைகளும் கண்மணிகளும்! - ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் பெண்கள்

2கே கிட் வளர்க்கும் காளைகள்!

மதுரை, ஐராவதநல்லூர் ப்ளஸ் டூ மாணவி யோக தர்ஷினி, ஜல்லிக்கட்டுக் காளைகளை செல்லக் குட்டிகளாக வளர்த்துவரும் 2கே கிட். தன் அப்பா, அண்ணனைப் பார்த்து இவருக்கும் இதில் ஆர்வம் வர, இவரே காளைகளை அவிழ்த்து விடுவது வரை இதில் எக்ஸ்பெர்ட் ஆகியுள்ளார். கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் வெற்றியை தவறவிட்ட தன் காளைக்கு அமைச்சர் மூர்த்தி ஆறுதல் பரிசு கொடுக்க முன்வந்தபோது, அதை வாங்க மறுத்து காளையுடன் இவர் கம்பீர நடை போட்டது வைரலானது. ``அப்புறம் அதே காளை பல பரிசுகளை வாங்கிருச்சு’’ என்று உற்சாமாகச் சொல்கிறார் யோகதர்ஷினி.

``பொம்பளைப்புள்ளை ஜல்லிக்கட்டு மாடுலாம் வளர்த்துக்கிட்டு திரியுறனு சொன்னவங்களை யெல்லாம் கண்டுக்காம, எங்கப்பா, அம்மா, அண்ணன் தந்த சப்போர்ட்டால முழு ஈடுபாட்டோட காளைகளை வளர்க்குறேன். இப்போ பல ஜல்லிக் கட்டு போட்டிகள்லயும் காளையை அவிழ்த்து விட்டு நான் பரிசு வாங்குறது டிவி, பத்திரிகை செய்திகள்ல வர்றதை பார்த்ததும் பலரும் பாராட்டுறாங்க. இது நம்ம மண்ணோட விளையாட்டு. பொண்ணுங் களுக்கும் சொந்தம்தான். இந்த வருஷம் என் காளைங்க கருப்பன், பாண்டிமுனி சீறிப்பாயப் போறதை பாருங்க!”

காளைகளும் கண்மணிகளும்! - ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் பெண்கள்

எட்டு காளைகள்... அசத்தும் திருநங்கை!

மதுரை, கருப்பாயூரணி அருகே பொட்டப் பனையூரில் சொந்த இடத்தில் நாட்டு மாடுகள், ஆடு, கோழி, வாத்து என வளர்த்து வரும் திருநங்கை கீர்த்தனா, எட்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து ஆச்சர்யப்படுத்துகிறார். வாடி அமைத்து, மணல் குத்த வைத்து, குளத் தில் நீந்த வைத்து என தினமும் பயிற்சி அளிக்கிறார். பாலா இயக்கிய `நான் கடவுள்’ படம் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன், சக திருநங்கை களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆதரவாகவும் இருந்து வருகிறார்.

``எங்க குடும்பத்துல காலம் காலமா ஜல்லிக் கட்டு மாடு வளர்த்து வருவாங்க. அதனால எனக்கும் இதுல ஆர்வம் வந்தது. குறிப்பா, ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்க 2017-ல தமிழகத்துல நடந்த போராட்டம் பெரிய எழுச்சியை ஏற்படுத்துச்சு. அதுதான் எனக்கும் ஆர்வத்தைத் தூண்டுச்சு. இன்னிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு என் மாடுகளோட போயி, கட்டில், மெத்தை, பீரோ, அண்டா, குண்டானு வாங்கிட்டு வர்றேன். காளைகளுக்கு எங்க தாத்தா ஞாபகமா சின்ன முத்தையா, பெரிய முத்தையா, அப்புறம் கருடன், செவ்வாழை, ருத்ரன், வீரானு பேரு வெச்சிருக்கேன்!’’

காளைகளும் கண்மணிகளும்! - ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் பெண்கள்

காந்தாராவை களமிறக்கும் கல்லூரி மாணவி!

மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி பூஜா, தன் காந்தாரா காளையை களமிறக்கத் தயராகி வருகிறார். ‘`பால் வியாபாரம் செய்யும் எங்க மாமா ராஜா, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்குறார். அவர்கிட்ட இருந்த ஒத்த கண்ணு (ஒற்றை கண் கொண்ட) ஜல்லிக்கட்டு காளை இளவரசி, என்கிட்ட பிரியமா இருக்கும். என் பேச்சுக் குக் கட்டுப்பட்டு வளர்ந்த அந்தக் காளைய அலங்காநல்லூர், பாலமேடு, கோவை, திண்டுக்கல், திருப்பூர்ல நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குக் கூட்டிட்டுப் போய் நானே வாடியில அவிழ்த்தேன். போட்டிக்குப் போன அஞ்சு இடங் கள்லயும் வெற்றி பெற்றுச்சு. ஜல்லிக்கட்டுக் கிளம்பும்போது நான் சொன்னா மட்டும்தான் வண்டியில ஏறும், இறங்கும். ஆனா, இப்போ இளவரசி எங்ககிட்ட இல்ல. அதுக்கு பதிலா, ஜெயங்கொண்டான் பகுதியில இருந்து ஒரு கறுப்புக் காளைய வாங்கிட்டு வந்தோம். அதோட பார்வையே பார்க்குறவங்களை மிரள வைக்கும். அதுக்கு `காந்தாரா'னு பேரு வெச்சு பயிற்சி கொடுத்துட்டு இருக்கேன். அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு நாங்க ரெடி!”