கொரோனா பரவல் தீவிரமாகியிருக்கும் நிலையில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வை மீண்டும் ஒத்திவைத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஜே.இ.இ, நீட் தேர்வுகள்!
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. மேலும், மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியும் தேசிய அளவில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ (JEE) முதன்மைத் தேர்வு ஜூலை 18 முதல் 23-ம் தேதிகளுக்குள் நடத்தப்படும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
ஆனால், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன்மூலம் சி.பி.எஸ்.இ குறித்த குழப்பம் முடிவுக்கு வந்தநிலையில், பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான ஜே.இ.இ மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான நீட் ஆகியவற்றின் நிலை குறித்த குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது. அந்தத் தேர்வுகள் குறித்த தெளிவான அறிவிப்பு எதுவும் மத்திய அரசிடம் இருந்து வெளிவராமல் இருந்து வந்தது.
இந்தநிலையில், ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ``மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் தரமான கல்வியைக் கருத்தில்கொண்டும் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதிகளிலும், ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு செப்டம்பர் 27ம் தேதியும் நடத்தப்படும். அதேபோல், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும்’’ என்று அறிவித்தார்.
முன்னதாக, ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அவர்களது கருத்தை இன்றைக்குள் கேட்டிருப்பதாக அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.