Published:Updated:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவரங்கள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ( ட்விட்டர் )

``பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்த மசோதா செல்லும்." - உச்ச நீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவரங்கள்

``பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்த மசோதா செல்லும்." - உச்ச நீதிமன்றம்

Published:Updated:
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ( ட்விட்டர் )

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் இணைந்தன. வழக்கு விசாரணையில் தி.மு.க சார்பில் ஆஜரான வில்சன் எம்.பி., "இட ஒதுக்கீடு அளவு என்பது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக செல்லக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், மத்திய அரசு வழங்கிய 10 சதவிகித இட ஒதுக்கீடு ஏற்கெனவே பல மாநிலங்களில் 50 சதவிகிதமாகிவிட்டது. மேலும், முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அசாதாரண சூழலில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்கிறது மத்திய அரசு. இதை எப்படி ஏற்க முடியும்... வறுமை என்பது அனைவருக்கும் சமமானது.

ஒரு வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது எப்படி அசாதாரண சூழலாகும்... வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கணக்கில்கொள்ளாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட வகுப்பினராக எப்படி வகைப்படுத்த முடியும்... இதை இந்திரா சஹானி தீர்ப்பும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் கிடையாது. மேலும், பொருளாதாரத்தின் நிலைமையை அடிப்படையாகக்கொண்டதும் கிடையாது. இட ஒதுக்கீடு என்பது சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு.

10% இட ஒதுக்கீடு
10% இட ஒதுக்கீடு

தமிழ்நாடு பட்டியலிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்னமும் முழுமையாக மத்திய அரசின் பணியில் சேர்க்கப்படவே இல்லை. அவர்களுக்கு மத்திய அரசுப் பணிகள் கிடைப்பதும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தோர் மற்றும் பழங்குடியினச் சமூகங்களை அரசியல் சாசனம் உருவாகிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் முன்னேறிய வகுப்பினரில் 31.2 சதவிகிதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக மத்திய அரசு தரப்பு முன்வைத்திருக்கும் வாதம் ஏற்கக்கூடியதல்ல" என வாதிட்டார்.

தீர்ப்பு
தீர்ப்பு

இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வில் வாசிக்கப்பட்டது. நீதிபதிகள் தனித்தனியாகத் தீர்ப்புகளை வாசித்தனர். அந்தத் தீர்ப்பில், ``103-வது அரசியலமைப்புச் திருத்தம் செல்லுபடியாகும். இந்தச் சட்டத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை" என்று கூறி மூன்று நீதிபதிகள் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று தெரிவித்தனர்.

நீதிபதி எஸ்.ரவீந்திர பட், ``பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது செல்லுபடியாகும். ஆனால் பிற்படுத்தப்பட்ட (SC/ST/OBC/SEBC)-வர்களைத் தவிர்ப்பது அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகும். பாரபட்சமற்ற ஆட்சிக்கு சாதி, வர்க்க வேறுபாடின்றி எல்லா ஏழைகளும் சமமானவர்கள்" எனத் தெரிவித்தனர். தலைமை நீதிபதி யு.யு.லலித்தும் நீதிபதி ரவீந்திர பட்டின் கருத்துடன் உடன்பட்டார்.

எனவே, உச்ச நீதிமன்றம் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அங்கீகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.