Published:Updated:

கேரி பேக் வழங்க பணம் வசூலித்த நிறுவனத்துக்கு அபராதம்! -நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

பி.ஆண்டனிராஜ்
கேரி பேக் வழங்க பணம் வசூலித்த நிறுவனத்துக்கு அபராதம்! -நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு
கேரி பேக் வழங்க பணம் வசூலித்த நிறுவனத்துக்கு அபராதம்! -நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

வணிக நிறுவனத்தில் வாங்கிய பொருளைக் கொண்டு செல்ல கேரி பேக் கொடுத்துவிட்டு அதற்கு தனியாக பணம் வசூல் செய்த நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

கேரி பேக் வழங்க பணம் வசூலித்த நிறுவனத்துக்கு அபராதம்! -நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துக்கிருஷ்ணன். இவர், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.821-க்கு பொருள்கள் வாங்கியுள்ளார். அந்தப் பொருள்களைக் கொண்டு செல்ல அவர் பை எடுத்துச் செல்லவில்லை. இதனால் அந்த நிறுவனமே அதை ஒரு கேரி பேக்கில் வைத்துக் கொடுத்தது.

ஆனால், பை வழங்கியதற்கு அந்த நிறுவனம் ரூ.6 எடுத்துக்கொண்டது. இதுபற்றி அந்த நிறுவனத்திடம் அவர் கேட்டதற்கு, ’எங்கள் நிறுவனத்தின் உள்ளே வெளியில் இருந்து பையை எடுத்துக்கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது. அதேசமயம் நாங்கள் கொடுக்கும் பைக்கு கட்டணம் வசூலிப்போம்’ எனத் தெரிவித்ததுடன், பணத்தையும் எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பாக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

பாதிக்கப்பட்ட முத்துக்கிருஷ்ணன் சார்பாக வழக்கறிஞர் பிரம்மா ஆஜராகி வாதாடினார். அப்போது, ‘வணிக நிறுவனம் கொடுத்த பையில் அந்த நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறதே தவிர, அதை அச்சடித்த நிறுவனம் அல்லது வேறு எந்த பெயரோ முகவரியோ இருக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு முத்துக்கிருஷ்ணன் தெருவில் சென்றபோது, அதைப் பார்த்தவர்கள், அந்த நிறுவனத்தில் பொருள் வாங்கியது தொடர்பாக விசாரித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சுய விளம்பரம் கொண்ட அந்த பைக்கு விலை வசூலித்தது தவறு’ என வாதிட்டார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, தனியார் வணிக நிறுவன விளம்பரம் அச்சிடப்பட்ட கேரி பேக்கை 6 ரூபாய்க்கு வழங்கியிருப்பது சேவை குறைபாடு என்றும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாய், வழக்குச் செலவுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தமாக ரூ.8,000 வழங்க வேண்டும். இந்தத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்காவிட்டால், 6 சதவிகித வட்டியுடன் முத்துக்கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.