காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டிலேயே அரசாணை வெளியிடப்பட்டும், இதுவரை அமைக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற தீர்ப்பாயம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பு மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதுதொடர்பாக தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநிலங்கள் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு இன்று தனது வாதத்தை முன்வைத்தது.
அதில், காவிரி தீர்ப்பாய உத்தரவைத் திருத்தும் அல்லது முழுமையாக நிராகரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்க முடியும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்துதான் முடிவெடுக்க முடியும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு தேவை என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை எட்டத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.
2013-ம் ஆண்டிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டும், அதை அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்றத்தில் இந்த விவகாரம் நிலுவையில் இருப்பதால் முடிவெடுக்கவில்லை என்று மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆனால், இதில் தாமதம் ஏற்படுத்தும் மத்திய அரசின் அணுகுமுறை தவறானது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நிரந்தரத் தீர்வை எட்ட மத்திய அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும், அதை அமல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத் தீர்ப்பே இறுதியானது என்று கூறப்பட்ட நிலையில், தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கிலேயே மத்திய அரசு, தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.