Published:Updated:

11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... ‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை!’’ - அ.தி.மு.க;

11 எம்.எல்.ஏ-க்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
11 எம்.எல்.ஏ-க்கள்

‘‘கடுமையான சிக்கலை அ.தி.மு.க சந்திக்கும்!’’ - தி.மு.க

2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வரான போது தர்மயுத்தம் தொடங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அன்றைக்கு பெரும்பான்மையை எடப்பாடி அரசு நிரூபித்தாலும், நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பினர் வாக்களித்தது சர்ச்சையானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்து அப்போதே தி.மு.க சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. தி.மு.க கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். அப்போது அ.தி.மு.க-வில் இருந்த தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட ஆறு பேரும் தனியாகப் புகார் மனுவைச் சபாநாயகரிடம் அளித்ததுடன், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தனர். ‘‘சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று கூறி இந்த வழக்கை உயர் நீதிமன்றம் அப்போதே தள்ளுபடி செய்தது.

11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... 
‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை!’’ - அ.தி.மு.க;

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் சக்கரபாணி வழக்கு தாக்கல் செய்தார். பிப்ரவரி 4-ம் தேதி, ‘‘மூன்று மாதங்களுக்குள் இந்த வழக்கில் முடிவெடுக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். தமிழக அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட 11 பேருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகக் கூறியதால், வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

இந்தநிலையில் ஜூன் 7-ம் தேதி தி.மு.க சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘மூன்று மாதங்களைக் கடந்தும் இந்த வழக்கில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று முறையிட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘இந்த வழக்கு குறித்து சபாநாயகருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்’’ என்று பதில் அளிக்கப்பட்டது. “இந்த விவகாரத்தில் கடந்த நான்கு மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என்று கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள்.

இது குறித்து சட்டப்பேரவை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “11 பேருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்துள்ளார் சபாநாயகர்.

இன்பதுரை - என்.ஆர்.இளங்கோ
இன்பதுரை - என்.ஆர்.இளங்கோ

11 பேரிடமும் தனித்தனியாக விளக்கம் பெறப்படும். அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். முதல்வர் தரப்பிலிருந்து சபாநாயகருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ‘11 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதைச் சபாநாயகர் தனக்குச் சாதகமாகக் கொண்டுசெல்வார்’’ என்றார்கள்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான இன்பதுரையிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘பொதுவாக, சபாநாயகர்களின் நடவடிக்கை களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை.

11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக சபாநாயகர் தவறான உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. எனவே, அவரது விசாரணையிலிருக்கும் ஒரு பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் தங்களுடன் இருந்த 122 எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும்தான் ஆதரவு தெரிவிக்கக் கேட்டு உத்தரவிட்டார்.

11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... 
‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை!’’ - அ.தி.மு.க;

11 எம்.எல்.ஏ-க்களுக்கு அவர் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, `11 பேர் கொறடா உத்தரவை மீறினார்கள்’ என்று கூற முடியாது. அந்தச் சமயத்தில் 11 பேரும் தனி அணியாகச் செயல்பட்டனர். பிறகு இணைந்து விட்டனர். இணைப்பைத் தேர்தல் கமிஷனும் அங்கீகரித்துவிட்டது.

தற்போது தி.மு.க இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதனால், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருக்கிறது. ‘சபாநாயகர் தனது விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்’ என அவரை நிர்பந்திக்கவும் சட்டத்தில் இடமில்லை. புகார் கொடுத்தவர்களை விளக்கம் அளிக்கும்படி சபாநாயகர் அழைத்திருக்கிறார். அவர்கள் விளக்கம் அளித்த பிறகுதான், குற்றம்சாட்டப்பட்ட 11 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் அழைத்து விளக்கம் கேட்க முடியும்’’ என்றார்.

தி.மு.க சார்பில் இந்த வழக்கைக் கையாண்டுவரும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம் பேசினோம். ‘‘சபாநாயகரிடம் முதல்வர் கொடுத்த கடிதத்தில், ‘122 பேருக்கு மட்டுமே கொறடா உத்தரவு கொடுக்கப்பட்டது. இப்போது அவர்கள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணை, கட்சித்தாவல் தடைச்சட்டம் குறித்துப் பேசுகிறது. அதன்படி, அன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அ.தி.மு.க-வின் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தபோது, அந்தக் கட்சி சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தது தவறு. அரசியலமைப்பு சட்டப்படி ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு பேர் வெளியேறினால் மட்டுமே, தனி அணியாகச் செயல்பட முடியும். எனவே, இந்த வழக்கில் கடுமையான சிக்கலை அ.தி.மு.க சந்திக்கும்’’ என்றார்.