Published:Updated:

தொடர்ந்து நடக்கும் குற்றச் சம்பவங்கள்! அச்சத்தில் பொதுமக்கள்

தொடர்ந்து நடக்கும் குற்றச் சம்பவங்கள்! அச்சத்தில் பொதுமக்கள்
தொடர்ந்து நடக்கும் குற்றச் சம்பவங்கள்! அச்சத்தில் பொதுமக்கள்

கரூரில் அடுத்தடுத்து திருட்டு, கொலை, கத்திக்குத்து என்று நடக்கும் தொடர் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கரூரில் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவு போலீஸ் ஏட்டு இளங்கோவை, லைசென்ஸ் கேட்டதற்காகக் கத்தியால் முரளி என்ற வாலிபர் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளங்கோவை நேற்று திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜூ சந்தித்து, நலம் விசாரித்துவிட்டுச் சென்றார். `போலீஸுக்கே பாதுகாப்பில்லாத அளவுக்கு இங்கே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதே' என்று நிருபர்கள் கேட்டதற்கும் பதிலேதும் சொல்லாமல் காரில் ஏறி பறந்தார் ஐ.ஜி வரதராஜு.

இந்நிலையில், அவர் வந்துபோன நேற்று (23.1.2018) நள்ளிரவு கரூர் பெரிய குளத்துப்பாளையத்தில் உள்ள பண்டரிநாதன் ஆலயத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மக் கும்பல் இரண்டரை அடி உயரம் உள்ள பண்டரிநாத பெருமாள் ஐம்பொன் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சிலை 1979-ல் வைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் குழு சோதனையில் ஈடுபட்டது. இதுபற்றி, வெங்கமேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் அண்மையில் பசுபதிபாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம், காந்திகிராமம் பகுதியில் திருட்டு, ஆத்தூர் காளிபாளையத்தில் மூதாட்டியைத் தாக்கிவிட்டு, 7 பவுன் கொள்ளை என்றும், அதற்கும் மேலாக கரூர் பேருந்து நிலையம் அருகே போலீஸாரைக் கத்தியால் குத்திய சம்பவம் என நடக்கும் தொடர் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபற்றி பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், "கரூர் எஸ்.பி ராஜசேகரன் உடனே எல்லா காவல்நிலையத்தையும் அலர்ட் செய்யணும். அவர் செயல்பாடு மந்தமாக இருப்பதால், கரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்கள் வேகமா நடக்குது" என்றார்.