Published:Updated:

'7 வருடமாச்சு; நீதி கிடைக்கலையே'- நீதிபதி வழக்கைத் தள்ளிவைத்ததால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபர்

பி.ஆண்டனிராஜ்
'7 வருடமாச்சு; நீதி கிடைக்கலையே'- நீதிபதி வழக்கைத் தள்ளிவைத்ததால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபர்
'7 வருடமாச்சு; நீதி கிடைக்கலையே'- நீதிபதி வழக்கைத் தள்ளிவைத்ததால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபர்

நெல்லையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த ஒருவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

 கடந்த ஆண்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே, இசக்கி முத்து என்பவர் தன் மனைவி மற்றும் இரு பச்சிளம் குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வரக்கூடிய நபர்கள், தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இன்று, நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் உள்ளேயே தீக்குளிக்க முயன்ற நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அதில், அந்த நபர் எட்வர்ட் சவரிமுத்து என்பதும், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு எட்வர்ட் சவரிமுத்து, வள்ளியூரைச் சேர்ந்த தாசன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.

அந்தப் பணத்தில், 49,000 ரூபாயை தாசன் கொடுத்துவிட்டார். மீதித் தொகையான 51,000 ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லாததால் அவரது செக் திரும்பிவந்துவிட்டது. அதனால், நெல்லை நீதிமன்றத்தில் எட்வர்ட் சவரிமுத்து வழக்குத் தொடர்ந்தார். கடந்த 7 வருடமாக இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. இதனிடையே, வழக்கில் தொடர்புடைய தாசன் என்பவர் இறந்துவிட்டார். அந்தத் தகவல்கூட தெரிவிக்கப்படாததால், எட்வர்ட் சவரிமுத்து தொடர்ந்து விசாரணையில் பங்கேற்றுள்ளார்.

அதனால், இந்த வழக்கை விசாரிக்கும் நெல்லை மாவட்ட 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான மாலதி, எதிர்தரப்பைச் சேர்ந்த தாசன் இறந்துவிட்ட நிலையில், வழக்கு விசாரணையைத் தள்ளிவைப்பதாக அறிவித்தார். கடந்த பல வருடமாக நடந்த வழக்கில் தனக்கு நீதி கிடைக்காத நிலையில், அதிருப்தி அடைந்த எட்வர்ட் சவரிமுத்து, நீதிமன்றத்தின் உள்ளேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை, அருகில் இருந்த வழக்கறிஞர்களான சங்கரநாராயணன், லெட்சுமணன் ஆகியோர் தடுத்தனர். பின்னர் போலீஸார் அவரை பிடித்துச்சென்றனர்.