
வழிகாட்டிஎழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி
பொதுவாக அனைத்துச் சட்டப் பிரிவுகளும் பெண்ணுக்குப் பக்கபலமாகவே நிற்கின்றன. ஆனால், அதுபற்றிய விழிப்பு உணர்வு கிடைக்கப்பெற்று அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்த இடைவெளியைக்களையும் ஒரு முயற்சியே ‘சட்டம் பெண் கையில்’ பகுதி. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, இந்தத் தொடரைத் தரவிருக்கிறார்.
``பெண்களின் தோள்பற்றி உதவ, கரம் கொடுத்து அன்பை உறுதிசெய்ய, கண்களில் துளிர்க்கும் நீரைத்துடைத்து ஆறுதல் சொல்ல, நெஞ்சில் வடியும் செந்நீரை நம்பிக்கை அருவியாக மாற்றிப்போட... சக மனிதர்களோடு சட்டமும் காத்திருக்கிறது. ‘இந்த உலகமே என்னை வஞ்சித்துவிட்டது’ என்று நிராதரவாக உணரும் பெண்களுக்கு உதவ கையில் தராசு ஏந்தி, கண்களில் கறுப்புத் துணி கட்டியபடி காத்திருக்கிறாள் நீதி தேவதை. அவள் தரும் பாதுகாப்புக் கவசத்தைப் பெண்ணுலகிடம் சேர்ப்பதற்கான அக்கறையின் வடிவமே `சட்டம் பெண் கையில்!' பகுதி.
இணைய பாலியல் குற்றங் கள் முதல் குடும்ப வன்முறை வரை... பெண்ணுக்கான சொத்துரிமை முதல் சிங்கிள் பேரன்ட் சிக்கல்கள் வரை... விவாகரத்து முதல் ஜீவனாம் சம் வரை... இன்னும் பெண் உலகின் பிரச்னைகளைத் தீர்க்கும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்து கொடுக்கும் சட்டப்பிரிவுகள் உள்பட அனைத்தையும் பேசுவோம்.

பல்வேறு இக்கட்டான சூழல்களில் சட்டத்தின் வழியாகத் தீர்வுகண்ட பெண்களின் அனுபவங் களின் மூலமாகவும் நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறோம். பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தோழமைச் சட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்வது தன்னம்பிக்கையை அளிக்கும். நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ பிரச்னை வரும்போது கரம் கொடுத்து உதவ வழி காட்டியாகவும் இருக்கும்.
இன்று, பல்வேறு துறை களில் பணியாற்றும் பெண் கள் தங்களின் உழைப்பால் நாட்டின் உற்பத்திக்கும் பொருளாதார மேம் பாட்டுக்கும் உதவுகின்றனர். ஆனால், பணியிடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களுக்கு எதிர் வினையாற்றும் பெண்களை விட அதைச் சகித்துக் கொள்ளும் பெண்களே அதிகம். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு உள்ள சட்டங்களைத் தெரிந்துகொள்வது அவர்களுக்குத் தற்காப்பு அளிக்கும். படித்த பெண், படிக்காத பெண் என்கிற பாகுபாடின்றி குடும்பம் என்ற அமைப்பில் பெண்கள் சந்திக்கும் வன்கொடுமைகளை நாம் தினமும் பார்க்கிறோம். அவர்களுக்கு ‘குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்’ என்ற கேடயத்தைக் கையில் தருவோம்.
சட்டத்தைப் பணவசதி உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற மூட நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு உதவும் விதமாக மாவட்ட நீதிமன்றங்களில் சட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன. சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் பாதிக்கப் பட்ட பெண்களுக்காக வாதாடி உதவுகின்றனர்.
நிர்பயாவில் தொடங்கி, கோத்ரா சம்பவத்தை அடுத்து குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட பில்கிஸ் பானு வரை... அவர்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்குச் சட்டம் தண்டனை அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி காவல் உதவி ஆய்வாளர் பணியில் அமர்ந்தது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடவில்லை. அந்தப் பணிக்காகத் தேர்வு எழுதியதிலிருந்து, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை, உடல்தகுதித் தேர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் சந்தித்த தடைகளைத் தகர்க்க, அவர் சட்டத்தின் கரம்பற்றி வழக்குத் தொடர்ந்து போராடினார். அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாக, இன்று அவர் முன்னுதாரண மனுஷியாக வலம்வருகிறார். இன்னும் பல திருநங்கைகள் காவல்துறைப் பணிகளுக்கு வர பிரித்திகா யாஷினியின் போராட்டம் நம்பிக்கை அளிப்பதோடு, அதற்கான வாசலையும் திறந்துவிட்டுள்ளது.
தனக்கு எதிராக அல்லது தனது பெண் சமூகத்துக்கு எதிராக நடக்கும் எந்தவிதமான அடக்குமுறையையும் சட்டத்தின் துணை கொண்டு பெண் வெற்றிகாண முடியும். அப்படி அவள் வெற்றிகண்டுவிட்டால் அது அவளுக்கான வெற்றி மட்டுமன்று; அடுத்து வரும் பெண்களுக்கான வழிகாட்டியாகவும் மாறும்.
`பூனைகள் கூடி மாநாடு போட்டு ஆலோசித்து எலிகளுக்கு விடுதலை வழங்க முடியாது’ என்று பெரியார் கூறியது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். பெண்களான நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்வதன் வழியாக, ‘பெண்ணை அடிமைப்படுத்தலாம்’ என்ற ஆண் சிந்தனையை வேரறுப்போம். டாஸ்மாக்கை உடைத்துத் தகர்க்கும் சாமான்யத் தமிழச்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அரசுப் பள்ளி மாணவிகளும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளை வரும் காலத்தின்மீது பாய்ச்சுகின்றனர். பெண் அறிவின் வெளிச்சத்தை இன்னும் அதிகப்படுத்துவோம். நீதி தேவதையின் மனம் குளிரட்டும். சரிபாதி பெண்ணினத்துக்கு சம உரிமை கைவரட்டும்’’ என்கிறார் வைதேகி பாலாஜி.
சட்டப் புத்தகத்தின் பக்கங்கள் இனி நம் பார்வைக்கும் மூளைக்கும் காத்திருக்கின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார் வைதேகி பாலாஜி. ஹெச்.டி.எஃப்.சி குரூப்பில் பேனல் அட்வகேட் பொறுப்பு வகிப்பவர். குடும்பநலச் சட்ட ஆலோசகரும்கூட. கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத் சென்னை ஆகிய நீதிமன்றங் களில் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த ஐந்தாண்டுகளாகப் பிரபல தமிழ் இதழ்களில் சட்ட விழிப்பு உணர்வுத் தொடர்கள் எழுதி வருகிறார். பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பிரிவுகள் பற்றிய பல கருத்தரங்கங்களில் பங்குபெற்றுவருகிறார். கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் தன் சொல் வன்மையால் சொக்கவைப்பவர்.