Published:Updated:

சீக்கிய கலவர வழக்கில் எனக்கு எதிராக ஆதாரம் இல்லை: டைட்லர்

சீக்கிய கலவர வழக்கில் எனக்கு எதிராக ஆதாரம் இல்லை: டைட்லர்
சீக்கிய கலவர வழக்கில் எனக்கு எதிராக ஆதாரம் இல்லை: டைட்லர்
சீக்கிய கலவர வழக்கில் எனக்கு எதிராக ஆதாரம் இல்லை: டைட்லர்

புதுடெல்லி: டெல்லியில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், தனக்கு எதிரான ஆதாரம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பாதுகாவலரான சீக்கியரால் 1984ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அப்போது, சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. அதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது டெல்லியில் உள்ள புல்பங்காஷ் குருத்வாரா அருகில் பாதல் சிங், தாக்குர் சிங், குர்சரண் சிங் ஆகிய 3 பேர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜகதீஷ் டைட்லரின் தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த சி.பி.ஐ., போதிய ஆதாரமில்லை என்று கூறி வழக்கைக் கைவிட 2007-ல் அனுமதி கோரியது. அதை ஏற்க மறுத்த டெல்லி விசாரணை நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, மீண்டும் விசாரணை நடத்திய சி.பி.ஐ. போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொள்ள 2010-ல் அனுமதி கேட்டது. இதை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஆனால், அதை எதிர்த்து லக்விந்தர் கௌர் என்பவர் டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி அனுராதா சுக்லா பரத்வாஜ் முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், ஜகதீஷ் டைட்லர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு புதன்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து இன்று தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டியளித்த டைட்லர், "இந்த வழக்கில் எனக்கு எதிராக எதுவுமே இல்லை. எனக்கு எதிராக எவருமே கேள்வி எழுப்பவில்லை" என்றார்.

மேலும், "எனக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுரீந்தர் சிங்குக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது. அவர் தனது வாக்குமூலத்தை ஐந்து முறை மாற்றியுள்ளார். எனக்கு எதிராக வாக்குமூலம் கொடுப்பதற்காக நெருக்கடி தரப்பட்டதால்தான் சுரீந்தர் சிங்கின் மகன் அமெரிக்காவில் இருந்து அழைக்கப்பட்டார்" என்றார் டைட்லர்.

மற்றொரு சேனலுக்கு அவர் பேட்டியளிக்கையில், "எனக்கு எதிரான மூன்று சாட்சியங்களின் மீதுள்ள நம்பகத்தன்மை என்ன? சம்பவத்தன்று இந்திரா காந்தியின் உடலுக்கு அருகில் காலை 7.30 மணியில் இருந்து 3 மணி வரை இருந்தேன். அப்படி இருக்க, ஒரே நேரத்தில் என்னால் எப்படி இரண்டு இடங்களில் இருந்திருக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.