Published:Updated:

`நாங்கள் தடை விதிக்க முடியாது'- குற்றப் பின்னணிகுறித்து உச்ச நீதிமன்றம் #Election

`நாங்கள் தடை விதிக்க முடியாது'-  குற்றப் பின்னணிகுறித்து உச்ச நீதிமன்றம் #Election
`நாங்கள் தடை விதிக்க முடியாது'- குற்றப் பின்னணிகுறித்து உச்ச நீதிமன்றம் #Election

''குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை'' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் சட்டம் தற்போது அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஒரு எம்.பி., அல்லது எம்.எல்.ஏ, மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்தாலே, அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று பப்ளிக் இன்ட்ரஸ்ட் ஃபவுண்டேஷன் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், ஒரு கிரிமினல் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்ய வேண்டும். இதற்கு, நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் நீதிமன்றமே அதற்கான தீர்ப்பை வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், டி.ஒய் சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பு நாளை (25-09-18) அறிவித்தனர். அதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தாலே தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க முடியாது எனக் கூறினர். தொடர்ந்து, ‘குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த அதிகாரம் நாடாளுமன்றத்துக்குதான் உள்ளது. நாடாளுமன்றம், சட்டத்தில் திருத்தம் செய்தால்தான் இதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியும் . மேலும், குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் அனுமதி வழங்கக் கூடாது. தேர்தல் ஆணையமும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் தொடர்பான விவரங்களைத் தங்களில் அதிகாரபூர்வ தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஊழல் நாட்டுக்கு மிகப்பெரும் கேடு. அரசியல் கட்சிகளில், ஊழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி விரிவடைந்துவருவது வேதனையாக உள்ளது’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.