Published:Updated:

ஆதார்... எதற்கெல்லாம் தேவை... தேவையில்லை... தெரிந்துகொள்ள வேண்டிய 20 விஷயங்கள்!

பா. முகிலன்

ஆதார் அட்டை என்பது பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற குடியுரிமைக்கான சான்றல்ல. மாறாக அடையாளத்துக்கானது மட்டுமே.

ஆதார்... எதற்கெல்லாம் தேவை... தேவையில்லை... தெரிந்துகொள்ள வேண்டிய 20 விஷயங்கள்!
ஆதார்... எதற்கெல்லாம் தேவை... தேவையில்லை... தெரிந்துகொள்ள வேண்டிய 20 விஷயங்கள்!

தார் அடையாள அட்டையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதாருக்குத் தடை விதிக்க மறுத்துத் தீர்ப்பளித்துள்ளது. இதனால், பல்வேறு அரசு சேவைகள் மற்றும் உதவிகளைப் பெற ஆதார் அவசியம் என்றாகிவிட்டது. 

இந்த நிலையில், ஆதார் குறித்தும், அது தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டிய 20 விஷயங்கள் இங்கே...

* ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் ( யுனிக் ஐடன்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது டெமோகிராபி (பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி), பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். 

* இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற இந்தியர்களுக்குக் கிடையாது. 

* ஆதார் அட்டை என்பது பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற குடியுரிமைக்கான சான்றல்ல. மாறாக அடையாளத்துக்கானது மட்டுமே. இந்த அட்டை ஒருவரது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.

* இந்த அட்டையைப் பெறுவதற்கு ஒருவர் தனது சாதி, மதம் அல்லது மொழியைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. 

* மூன்றாம் பாலினத்தவர்கள் எனப்படும் திருநங்கை/நம்பிகளும் இதைப் பெறலாம். அவர்கள், தங்களை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ குறிப்பிட அவசியமில்லை. 

* ஆதார் எண் சமையல் எரி வாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள்/சேவைகளைப் பெற உதவுகிறது. 

* பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு இந்த அட்டையை ஒருவரது அடையாள சான்றுடன் கூடிய முகவரி சான்றாக ஏற்றுக்கொள்கிறது. 

* கைக்குழந்தைகள் உட்பட எந்த ஒரு வயதினரும் ஆதார் அட்டை பெறலாம். குழந்தைகள் 5 வயதை எட்டிவிட்டால், அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் போனால், பால பருவத்தில் செய்யப்பட்ட ஆதார் அட்டை செல்லாமல் போய்விடும்.

* கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கண் பார்வையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ இழந்தவர்கள் கூட ஆதார் அட்டை பெற பதிவு செய்ய முடியும்.

* குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு உரிய சான்று ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட ஆதாருக்குப் பதியலாம். 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

* ஆதார் இல்லை என்பதால் தனிநபர் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. 

* கல்வி என்பதை அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரைக் கொண்டு வரக் கூடாது.

* குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அவசியம் இல்லை. 

* சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும் ஆதார் அவசியம் இல்லை. 

* வங்கிக் கணக்குகள் தொடங்க ஆதார் அவசியம் இல்லை. 

* பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் அவசியம். 

* செல்போன் எண்கள் பெறுவதற்கு ஆதார் தேவையில்லை.

* தனியார் நிறுவனங்கள் ஆதாரைக் கட்டாயப்படுத்தக் கூடாது. 

* ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது.