Election bannerElection banner
Published:Updated:

நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பும், ஆனந்த் டெல்டும்டேவின் சில பதில்களும்..!

நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பும், ஆனந்த் டெல்டும்டேவின் சில பதில்களும்..!
நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பும், ஆனந்த் டெல்டும்டேவின் சில பதில்களும்..!

’நக்சலைட்’ என்னும் வார்த்தையின் மீது, முற்றிலுமாக எதிர்மறையான கருத்தை அரசு ஏற்கனவே உருவாக்கிவிட்டது. மக்களின் நலன்களுக்காக அரசின் திட்டங்களை, கொள்கைகளை எதிர்ப்பவர்கள் மீது அதை வசதியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

`பிரதமர் மோடியைக் கொல்ல சதிசெய்தார்கள்’ எனக்  குற்றம்சாட்டப்பட்டு, எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ், கெளதம் நவலகா, அருண் ஃபெரைரா,  வெர்னான் கான்சால்வஸ் ஆகியோர்  `உபா’ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்; ராஞ்சியில் ஆதிவாசிக் குழந்தைகளுக்காக பள்ளி நடத்தும் ஸ்டான்ஸ் ஸ்வாமி, கோவாவைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டே ஆகியோரின் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில், நேற்று தீர்ப்பு வெளியானது. `ஐவரும் வீட்டுக்காவலிலேயே வைக்கப்படுவார்கள்' என்றும், `வேண்டுமென்றால் அவர்கள் பிணை கோரலாம்' என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. ``விசாரணையை, மகாராஷ்டிரா மாநில போலீஸாரே தொடரலாம்'' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும் அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். ``ஜனநாயகத்தின் அடிப்படை, மாற்றுக்கோணங்களும் கருத்துகளும். மாற்றுக்கருத்துகளை முன்வைக்கும் குரல்களை அடக்கிவிடக் கூடாது. இதுதொடர்பான விசாரணையில் பெரிய முரண்பாடுகளை உச்ச நீதிமன்றம் காண்கிறது. இந்த வழக்கை குஜராத் காவல்துறை விசாரிக்காமல், சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். மகாராஷ்டிர மாநில காவல்துறை, ஆதாரங்களை ஊடகத்திடம் வெளியிட இருப்பதாகக் கூறி மக்கள் மனதில் சார்புத்தன்மையை ஏற்படுத்த முயல்கிறது” என்ற கருத்தை முன்வைத்தார் நீதிபதி சந்திரசூட். 

பீமா கோரேகான் வழக்கு தொடர்பாகவும், நிலவும் அரசியல் தொடர்பாகவும் ஆனந்த டெல்டும்டேவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்திருந்த பதில்கள் இவை: 

`` `அர்பன் நக்சல்கள்’ என்னும் சொல், சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. கைது நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களைப் போன்றோர் என்ன குற்றம் செய்ததாக அரசு நினைக்கிறது?''

``பா.ஜ.க அரசு, இதை சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாகக் காட்ட நினைத்தது. இந்த அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், மத-சாதியப் பிரிவினை உத்தி, சிறுபான்மையினர், தலித்துகளுக்கு ஆதரவற்ற நிலை போன்றவற்றைக் குறித்துப் பேசும் எல்லோரும், இவர்களால் குறிவைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். `நக்சலைட்’ என்னும் வார்த்தையின் மீது, முற்றிலுமாக எதிர்மறையான கருத்தை அரசு ஏற்கெனவே உருவாக்கிவிட்டது. மக்களின் நலன்களுக்காக அரசின் திட்டங்களை, கொள்கைகளை எதிர்ப்பவர்கள் மீது அதை வசதியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அறிவுஜீவிகள் மீதும், சிந்தனையாளர்கள் மீதும் எமர்ஜென்சி நடைமுறையைப் பின்பற்றிவருகிறார்கள். என் வீடு சோதனைக்குள்ளாகி இருக்கிறது. என் வீட்டில் இருந்தவர்களுடன் கடுமையான முறையில் நடந்துள்ளனர். தேடப்படும் குற்றவாளியையோ, தீவிரவாதியையோ எப்படி நடத்துவார்களோ அப்படித்தான் என் வீட்டைச் சேர்ந்தவர்களையும் நடத்தியிருக்கிறார்கள். மக்களும் நீதித்துறையும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது. நாளை நீங்களாகவும் இருக்கலாம்.''

``தமிழ்நாட்டு, ஒப்பீட்டு அளவில் சமத்துவ மாநிலம் என நினைக்கிறீர்களா? ஜனநாயக அமைப்புகளைப் பற்றிய எண்ணம் என்ன? அவர்களுக்கான உங்களின் செய்தி என்ன?''

``தமிழ்நாட்டை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு, `முற்போக்கு மாநிலம்' என இங்கு உள்ள இயக்கங்களும் கட்சிகளும் கூறிக்கொள்வதுண்டு. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் `நாங்கள்தான் முற்போக்கு' என்ற குரல்கள் உண்டு. மகாராஷ்டிராவிலும் அப்படிச் சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை, எல்லா மாநிலங்களுமே சம அளவில் முற்போக்காகவோ, பிற்போக்காகவோதான் இருக்கின்றன. மக்களில் சிலர் முற்போக்காகவும், ஆளும் வர்க்கத்தரப்பு என வரும்போது பிற்போக்காகவும் நடந்துகொள்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், நாம் விநோதமான, அபாயமான, அச்சுறுத்தலான ஒரு காலத்தில் வாழத் தள்ளப்பட்டிருக்கிறோம். பா.ஜ.க-வைவிட காங்கிரஸ் சிறப்பாக ஆட்சிசெய்தது என்ற பொருளில் இதைச் சொல்லவில்லை. பா.ஜ.க அரசாங்கத்தின் அனைத்து கொள்கை முடிவுகளுக்கான வேர், காங்கிரஸிடம்தான் இருக்கிறது. 

வேறுபாடு என்னவென்றால், காங்கிரஸுக்கு குறிப்பான கொள்கை கிடையாது. ஆனால், பா.ஜ.க-வுக்கு பாசிசத்தை அடிப்படையாகக்கொண்ட, தங்கள் லட்சியமான இந்து ராஷ்டிரத்தை அமலாக்க வேண்டும் என்ற கொள்கை இருக்கிறது; அதை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஏனென்றால், மக்களை நீண்டகாலத்துக்கு ஏய்க்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆகவே, அபாயத்தை முன்னுணர்ந்து தற்காலிக வேறுபாடுகளைக் கடந்து, முற்போக்கு, ஜனநாயகச் சக்திகள் முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும். இல்லையேல், ஒட்டுமொத்த இந்தியாவும் இழப்பைச் சந்திக்க நேரிடும். நாம் இதில் தோற்றுப்போனால், மனிதர்களாக வாழும் பேறு நம் சந்ததிக்குக் கிடைக்காது.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு