Published:Updated:

``முதல்வரின் மகன்.. அதிரடி நீதிபதி.. கலகக்காரர்!" ரஞ்சன் கோகாயும், புதிய சவால்களும்

"இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறாக நடந்தால் நம்முடைய அரசியலமைப்பு மோசமானது என்று அர்த்தமாகாது. மாறாக அதைப் பயன்படுத்துகிற மனிதர்கள் மோசமானவர்கள் என்றுதான் நாம் சொல்ல வேண்டியிருக்கும்."

``முதல்வரின் மகன்.. அதிரடி நீதிபதி.. கலகக்காரர்!" ரஞ்சன் கோகாயும், புதிய சவால்களும்
``முதல்வரின் மகன்.. அதிரடி நீதிபதி.. கலகக்காரர்!" ரஞ்சன் கோகாயும், புதிய சவால்களும்

டந்த ஜனவரி மாதம், உச்சநீதிமன்றம் கொலிஜியத்தின் மூத்த 4 நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகுர் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். நீதித்துறையில் பல சர்ச்சைகள் எப்பொழுதும் இருந்துவந்த போதிலும் மூத்த நீதிபதிகள் நால்வர் பொதுவெளிக்கு வந்தது இந்திய நீதித்துறையில் வரலாற்றுச் சம்பவமாக மாறிப்போனது. அதேநேரத்தில் ஆளும் தரப்பிலிருந்து கடும் விமர்சனமும் கிளம்பியது.

இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் கோகாய், அப்பதவியில் நியமிக்கப்படுவாரா, என்கிற கேள்வியும் எழுந்தது. மத்திய சட்டத்துறை அமைச்சகமும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும், `தீபக் மிஸ்ராவால் பரிந்துரைக்கப்படுபவரே அடுத்த தலைமை நீதிபதி ஆவார்' எனக் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போதுள்ள நடைமுறையின்படி உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிதான் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். ஓய்வு பெறுகிற தலைமை நீதிபதி, தனக்கு அடுத்துள்ள மூத்த நீதிபதியை அரசுக்குப் பரிந்துரைப்பார். இது வெறும் நடைமுறைதான்.

அரசுக்கும், தலைமை நீதிபதிக்கும் எதிராகப் பேசியதால் ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதில் சந்தேகம் நிலவியது. கடந்த காலங்களில் (இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்) அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்காத பல நீதிபதிகள் அரசால் தண்டிக்கப்பட்டு அவர்களை விட இளையவர்கள் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். பதவி மறுக்கப்பட்ட நீதிபதிகள் கூட்டாக ராஜினாமா செய்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. நீதிபதி செல்லமேஸ்வரிடம் இதுபற்றிக் கேள்வி கேட்கப்பட்டபோது, ``இல்லை, இந்திய அரசு அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை அவ்வாறு நடந்தால் நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவற்றையெல்லாம் மெய்ப்பிக்கும் செயலாகவே அது அமையும்” என்றார். இதைக்கூறிய பொழுது செல்லமேஸ்வர் தனது நீதிபதி பதவியில் இருந்தார்.

இறுதியாக செப்டம்பர் மாதம் 4 ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரைத்து அரசுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து ரஞ்சன் கோகாய்-யை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் அறிவித்தார். தீபக் மிஸ்ரா அக்டோபர் 1ம் தேதியுடன் ஓய்வு பெற்ற பிறகு, இன்று இந்தியாவின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வரை இந்தப் பதவியில் ரஞ்சன் கோகாய் நீடிப்பார். மேலும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தலைமை நீதிபதி பதவியில் அமர்கிற முதல் நபர் ரஞ்சன் கோகாய்தான்.

இளமைப் பருவம்:

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் திப்ருகாரில் பிறந்த ரஞ்சன் கோகாய், டெல்லி புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் வரலாறு பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் 1978-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.

இவரின் தந்தை கேசாப் சந்திர கோகாய், காங்கிரஸின் மூத்த தலைவராகவும் அஸ்ஸாம் மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், 2010-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு அதே உயர்நீதிமன்றத்துக்குத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய் இருந்துள்ள கடந்த 6 ஆண்டு காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை எழுதியுள்ளார். அதில் 25-க்கும் மேற்பட்ட தீர்ப்புகள் அரசியலமைப்பு அமர்வுகளால் வழங்கப்பட்டவை.

பிரதானமான வழக்குகள்:

உச்சநீதிமன்றத்தில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். 2012ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பி.ஏ. சங்மா தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். பெரும்பான்மையாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் ரஞ்சன் கோகாயும், நீதிபதி செல்லமேஸ்வரும் “முறையாக விசாரிக்கப்படாமல் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது” என மாற்றுத் தீர்ப்பை வழங்கினர்.

கேரள மாநிலத்தில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட பாலியல் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கியது ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு. இதை விமர்சித்து முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுதிய பதிவு ஒன்றுக்கு விளக்கம் கேட்டு ரஞ்சன் கோகாய் சம்மன் அனுப்பியிருந்தார். விளக்கம் அளிக்க வந்த மார்க்கண்டேய கட்ஜு மீதான மனுவைத் தள்ளுபடி செய்து, `தீர்ப்பை விமர்சிக்காமல் நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார்' என மார்க்கண்டேய கட்ஜூ மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தினார் ரஞ்சன் கோகாய். அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதற்கு பிறகு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பதவியில் இருக்கிற நீதிபதி, முன்னாள் நீதிபதிக்கு எதிராக அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தியது நீதிமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. மேலும், இவர் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பெரும் அரசியல் சிக்கலாகக் கிளம்பியுள்ள தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தொடர்பான வழக்கைக் கண்காணித்து வரும் அமர்வுக்குத் தலைமை தாங்குகிறார்.

சவால்கள்:

முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் சிக்கலான பதவி காலத்துக்குப் பிறகு பொறுப்பேற்கும் ரஞ்சன் கோகாய் முன் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. இந்திய நீதித்துறையில் தற்போது 2 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றத்தில்  6 மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களில் 434 என மொத்தம் 440 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிபதி நியமனங்களில் மத்திய அரசுக்கும், கொலிஜியத்துக்கும் இருந்து வருகிற அதிகாரப் போரை ரஞ்சன் கோகாய் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதும் அவர் முன் சவாலாக உள்ளது.

நீதித்துறையின் இயலாமைகள் மற்றும் விசாரணையில் இருந்து வருகிற தாமதங்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் ரஞ்சன் கோகாய், ஜூலை மாதம் நடைபெற்ற ராம்நாத் கோயன்கா நினைவு சொற்பொழிவில் பேசும் போது, ``தற்போது நீதித்துறை மக்களுக்கு முழுமையான சேவையை வழங்க சீர்த்திருத்தங்கள் அல்ல, புரட்சிகரமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நீதித்துறைக்கு மாற்றத்திற்கான ஒரு தருணம் தேவைப்படுகிறது. நீதித்துறை மேலும் உயிர்ப்புடனும், முன்னணியிலிருந்தும் செயல்பட வேண்டும். இன்றைய நீதித்துறை என்பது தன்னுடைய கருவிகளைக் குறை கூறிக் கொண்டிருக்கும் பாவப்பட்ட வேலைக்காரன் அல்ல, எந்தவொரு வேலைக்கான கருவிகளுமே இல்லாத வேலைக்காரனாகதான் இருக்கிறது. `சுதந்திரமான நீதிபதிகளும், குரல் கொடுத்துப் பேசுகிற பத்திரிகையாளர்களும்தான் ஜனநாயகத்தின் முதல்நிலை பாதுகாவலர்கள்' என இங்கு பேசினார்கள். அதை ஒப்புக்கொள்கிறேன். அதோடு இன்றைய சூழலுக்கு ஏற்ப சிறிய மாற்றம் செய்கிறேன். சில சமயங்களில் சுதந்திரமான பத்திரிகையாளர்களும், குரல் கொடுத்துப் பேசுகிற நீதிபதிகளும் கூட ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்” என்றார்.

அக்டோபர் 1ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பணி ஓய்வு விழாவில் பேசிய ரஞ்சன் கோகாய், ``இன்று வேறுபட்ட எண்ணங்கள், கருத்துகளுக்கு இடையே முரண்பட்ட உலகப் பார்வைகள் இயங்கி வருகின்றன. இன்று நாம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வர்க்கம், சாதி, மதம், பாலினம் மற்றும் சித்தாந்தங்களினால் பிரிந்துகிடக்கிறோம்” என்று கூறி அம்பேத்கரின் மேற்கோளைச் சுட்டிக்காட்டினார், ``நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் அமைதியான காலங்களில் நெகிழ்வுத் தன்மையுடன், நெருக்கடியான காலங்களில் வலுவுடனும் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டு இயங்கி வருகிறது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறாக நடந்தால் நம்முடைய அரசியலமைப்பு மோசமானது என்று அர்த்தமாகாது. மாறாக அதைப் பயன்படுத்துகிற மனிதர்கள் மோசமானவர்கள் என்றுதான் நாம் சொல்ல வேண்டியிருக்கும்” என்றார்.

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தப்போவதாக மத்திய அமைச்சர் பேசி வரும் சூழலில் இந்திய நீதித்துறையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் ரஞ்சன் கோகாய். சாமானிய மக்களிடமிருந்து விலகிச் சென்றுவிட்ட நீதித்துறை, ரஞ்சன் கோகாய் தலைமையில் எவ்வாறு செயல்படும் என்பதற்கான விடை எதிர்வரும் காலங்களின் கையில்தான் இருக்கிறது.