
கண்ணீருடன் வந்தார்... கண்ணீருடன் திரும்பினார்!
கணவரின் இறுதிச்சடங்குக்காக 15 நாள்கள் பரோலில் வந்த சசிகலா, பரோல் முடிவதற்கு முன்பாகவே சிறைக்குத் திரும்பிவிட்டார். தஞ்சாவூர் பரிசுத்தம் நகரிலிருக்கும் நடராசன் வீட்டில் தங்கினார் சசிகலா. அது துக்க வீடு என்பதையும் மறந்து, நிர்வாகிகளும் தொண்டர்களும் தினமும் குவியத் தொடங்கியதுடன், கட்சியின் அலுவலகமாகவே அது மாறிப் போனது. ‘‘இந்த வீட்டில் சசிகலா நிம்மதியாகவே இல்லை. அவர் வீட்டின் போர்டிகோ வரை வந்த தருணங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘பரப்பன அக்ரஹார சிறையும் ஒன்றுதான், இந்த வீடும் ஒன்றுதான்’ என்கிற அளவுக்கு வீட்டுச் சிறையில் அடைந்து கிடந்தார். அவர் மனம் வெதும்பும்படி உறவுகளின் செயல்பாடுகள் இருந்தன’’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
சசிகலா சிறையில் இருக்கும்போதெல்லாம் ஒரே நினைப்புதான் அவரைத் துளைத்தெடுத்தது. ‘நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் இப்படித் துரோகம் செய்திருக்கிறார்களே’ என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் குறித்தே ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால், தஞ்சாவூர் வந்ததுமுதல் ‘நம் குடும்பம் ஒற்றுமையாக இருந்தால், இவர்களை வீழ்த்த முடியும். ஆனால், இவர்கள் இப்படியிருக்கிறார் களே’ என நினைத்து நினைத்து மன அழுத்தத்தால் அவர் தவித்திருக்கிறார். இதனால், ஒருநாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வீட்டுக்கு டாக்டர் வந்து சிகிச்சை தந்தார்.

அக்கா மகன் தினகரன், தம்பி திவாகரன், இளவரசியின் மகன் விவேக் ஆகிய மூவரும் முரண்டுபிடித்துத் திரிந்ததைப் பார்த்து சசிகலா நொந்துபோய்விட்டார். சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லப் பல தலைவர்கள் வந்தனர். அவர்களைத் தினகரன்தான் அழைத்துச் சென்றார். சசிகலா வுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, தினகரன் கூடவே இருந்து அவர்களை வாசல் வரை வந்து வெளியே அனுப்பினார். சசிகலாவை யார் யார் சந்திப்பது என்பதை முடிவு செய்தவர் தினகரன்தான். தினகரன் பெரும்பாலும் தனக்கு வேண்டிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை மட்டுமே அனுமதித்தார். தினகரன் இல்லாத நேரத்தில் தினகரனின் மனைவி அனுராதா, மகள் ஜெயஹரிணி உடன் இருந்தனர். ‘‘தன்னைப்பற்றி யாரும் சசிகலாவிடம் குறை சொல்லிவிடக் கூடாது என்பதில் தினகரன் தெளிவாக இருந்தார். அதன்படிதான், காய்களை நகர்த்தினார்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இதனால் மனம் வெதும்பிய திவாகரன், பெரும்பாலும் மாலை நேரத்திலேயே சசிகலாவைச் சந்திக்க அந்த வீட்டுக்கு வந்தார். இந்த மனக் குமுறலை நடராசன் படத்திறப்பு விழாவில் அவர் கொட்டித் தீர்த்தார். ‘‘35 வருடங்களாக என் அக்கா துன்பத்தை அனுபவித்து வருகிறார். இப்போதும் அவர் வாழ்க்கையில் நிம்மதி இல்லை’’ எனத் திவாகரன் பேசியது, தினகரனை மனதில் வைத்துத்தான் என்கின்றனர் அவரின் ஆதரவாளர் கள். ‘‘ஜெயலலிதா இருந்தபோதுகூட, நான் திரைமறைவில் அரசியல் செய்து வந்தேன். ஆனால், இப்போது என்னை எதிலும் தலையிட விடுவதில்லை. நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். என் மகன் ஜெயானந்துக்கு மட்டும் ஏதாவது ஏற்பாடு செய்’’ என அக்காவிடம் அழுத்தம் கொடுத்துள்ளார் திவாகரன்.
விவேக் இன்னொரு பக்கம், ‘‘நான் எதிலும் தலையிடாமல் இருக்கிறேன். ஜெயா டி.வி உள்ளிட்ட நிர்வாகங்களில் எனக்குப் பல இடையூறுகள் தருகிறார்கள். என்னைப் பற்றியோ, என் குடும்பத்தைப் பற்றியோ யாராவது பேசினால் நான் சும்மா இருக்கமாட்டேன்’’ எனக் கொந்தளித்தாராம்.
‘‘இப்போதைக்கு நமக்கான ஒரே நம்பிக்கை தினகரன்தான்’’ எனச் சொல்லி குடும்ப உறவுகளைத் தற்காலிகமாகச் சமாதானம் செய்துள்ளார் சசிகலா. ‘‘இக்கட்டான சூழ்நிலை யில் பொறுப்பை உன்னிடம் கொடுத்தேன். இன்று கட்சியைப் பெரிய அளவில் வளர்ச்சி பெற வைத்துள்ளதுடன் நம் குடும்பத்தின் மீது இருந்த பழியையும் துடைத்திருக்கிறாய்’’ எனத் தினகரனை மனம்விட்டுப் பாராட்டினாராம் சசிகலா.
நடராசனின் சொத்துகள் குறித்தும் பேச்சு எழுந்துள்ளது. நடராசனின் உறவுகள், ‘‘சொத்து களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளனர். சசிகலா உறவுகளுக்கும் இவற்றை நிர்வகிக்க ஆசை உள்ளது. இதனால், குழப்பத்தில் தவித்த சசிகலா, எந்த முடிவையும் எடுக்கவில்லை. ‘‘இந்தப் பிரச்னைகள்தான், பரோல் முடிவதற்கு முன்பே சசிகலா சிறைக்குத் திரும்பிப் போகக் காரணம்’’ என்றனர் அவரின் நெருங்கிய உறவுகள் சிலர்.

மார்ச் 31-ம் தேதி காலையில் அவர் பெங்களூருக்குப் புறப்பட்டார். நல்ல நேரம் பார்த்து காலை 8.30 மணிக்கு காரில் ஏறினார் சசிகலா. பின்னிருக்கையில் தினகரன் மற்றும் அவர் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் ஏறிக்கொண்டனர். சுற்றிலும் நின்றிருந்த உறவினர்களைப் பார்த்தார் சசிகலா. அவரையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தது. அருகே நின்ற திவாகரன், ‘‘நீயே இப்படி உடைஞ்சிட்டா என்ன பண்றது? தைரியமா இரு!’’ எனச் சசிகலா காதருகில் போய்ச் சென்னார். இதையெல்லாம் அமைதியாகப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் தினகரன். கண்ணீரைத் துடைக்காமல் காருக்குள்ளேயே கால் மணி நேரம் இருந்தார். சரியாக 8.46 மணிக்கு வாசலுக்கு வெளியே கார் வந்தது.
எப்படிக் கண்ணீருடன் வந்தாரோ, அதேபோல் கண்ணீருடனே திரும்பிச் சென்றார் சசிகலா.
- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்